குர்ஆனின் சரித்திர பிழை

யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?

Did Joseph's parents go to Egypt?

யோசேப்பின் இளைய சகோதரன் பென்யமீன் பிறந்த பிறகு, அவர்களின் தாய் ராகேல் மரித்துவிட்டதாக பைபிள் கூறுகிறது (ஆதியாகமம் 35: 16-18).

பின்பு, பெத்தேலை விட்டுப் பிரயாணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரமிருக்கும்போது, ராகேல் பிள்ளைபெற்றாள்; பிரசவத்தில் அவளுக்குக் கடும்வேதனை உண்டாயிற்று. பிரசவிக்கும் போது, அவளுக்குக் கடும் வேதனையாயிருக்கையில், மருத்துவச்சி அவளைப் பார்த்து: பயப்படாதே, இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய் என்றாள். மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள்; அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான். (ஆதியாகமம் 35:16-18)

ஆனால், குர்ஆனின் ஆசிரியருக்கு இந்த விஷயம் தெரியவில்லை என்று தெரிகிறது. அதனால் தான் அவர் யாக்கோபின் குடும்பம் எகிப்திற்குச் சென்ற விஷயத்தை குர்ஆன் வசனமாக வெளிப்படுத்திய போது, கீழ் கண்டவாறு கூறுகிறார்.

(பின்னர் குடும்பத்துடன்) அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரை (கண்ணியத்துடன் வரவேற்றுத்) தம்முடன் வைத்துக் கொண்டார்; இன்னும் "அல்லாஹ் நாடினால் நீங்கள் மிஸ்ருக்குள் அச்ச மற்றவர்களாகப் பிரவேசியுங்கள்" என்றும் குறினார். இன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம் பணிந்து வீழ்ந்தனர்; அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), "என் தந்தையே! இது தான் என்னுடைய முந்தைய கனவின் விளக்கமாகும்; அதனை என் இறைவன் உண்மையாக்கினான்; மேலும், அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணி விட்ட பின்னர் உங்களை கிராமத்திலிருந்து கொண்டு வந்ததன் மூலம் அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம் செய்துள்ளான்; நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுட்பமாகச் செய்கிறவன், நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன்" என்று கூறினார். (குர்ஆன் 12:99-100)

குர்ஆனின் இந்த தவறை அறிந்த இரண்டு இஸ்லாமிய விரிவுரையாளர்கள், இந்த பிரச்சனையை சரி செய்ய முயற்சி எடுத்து, பின்குறிப்பு எழுதியுள்ளார்கள்.

"... அவரின் தாய் ராகேல் ஏற்கனவே மரித்து விட்டார்கள். ஆனால், யோசேப்பு தன் தாயின் சகோதரியாகிய லேயாளினால் வளர்க்கப்பட்டார். லேயாளையும் அவரது தந்தை திருமணம் செய்து இருந்தார். இதனால், இப்போது லேயாள் தான் யோசேப்பின் தாயாக உள்ளார். இவர்கள் யோசேப்போடு தங்கி இருந்தார்கள்". (அப்துல்லாஹ் யூசுப் அலி, த ஹோலி குர்ஆன், சௌதி பதிப்பு, பின்குறிப்பு 1777)

பைபிளில் கூறப்பட்டது போலவே, யோசேப்பின் தாய் ராகேல், மென்யமீனை பெற்ற போது மரித்துவிட்டார். இந்த விவரம் குர்ஆனுக்கு முரண்பட்ட விவரமல்ல. இந்த இடத்திலே "பெற்றோர்கள்" என்றுச் சொன்னால், அது யாக்கோபின் இதர மனைவிகளையும் குறிக்கும், அதாவது யோசேப்பையும், பென்யமீனையும் வளர்த்தவரை குறிக்கும். இது பழங்கால அரேபிய பழக்க வழக்கங்களுக்கு பொருந்துகிறது, அதாவது வளர்ப்பு தாயை ஒருவர் "தாய்" என்று அழைக்கலாம். (முஹம்மது அஸத், த மெஸேஜ் ஆப் த குர்ஆன், பக்கம் 352, பின்குறிப்பு: 96)

இந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரையில் அரேபிய பழக்கவழக்கங்கள் பற்றிய விவரம் சம்மந்தமில்லாதது, ஏனென்றால் யாக்கோபு ஒரு அரேபியர் அல்ல. இருந்தபோதிலும், யோசேப்பு மற்றும் பென்யமீனின் தாயாகிய ராகேல் மரித்துவிட்டபடியால் இவ்விருவரையும் லேயாளே தாயாக இருந்து வளர்த்தார் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். மேலும் யோசேப்பு லேயாளை தாய் என்று அழைத்து இருந்திருப்பார்.

ஆனாலும், மேற்கண்ட இரண்டு இஸ்லாமியர்களின் வாதங்கள் அல்லது விவரங்கள் குர்ஆனின் பிழையிலிருந்து அதனை காப்பாற்ற முடியவில்லை. ராகேலின் மரணத்தை மட்டும் பைபிள் கூறவில்லை, லேயாளின் மரணம் பற்றியும் கூறுகிறது, அதுவும் யாக்கோபும் தன் குடும்பத்தார் அனைவரும் எகிப்திற்கு செல்வதற்குமுன்பாக லேயாள் மரித்தார்.

அதற்குப்பின்பு, யாக்கோபு பெயெர்செபாவிலிருந்து பிரயாணம் புறப்பட்டான். இஸ்ரவேலின் குமாரர் தங்கள் தகப்பனாகிய யாக்கோபையும் தங்கள் குழந்தைகளையும் தங்கள் மனைவிகளையும் பார்வோன் அனுப்பின வண்டிகளின்மேல் ஏற்றிக்கொண்டு, தங்கள் ஆடுமாடுகளையும், தாங்கள் கானான் தேசத்தில் சம்பாதித்த தங்கள் பொருட்களையும் சேர்த்துக்கொண்டு, யாக்கோபும் அவன் சந்ததியார் யாவரும் எகிப்துக்குப் போனார்கள். அவன் தன் குமாரரையும் தன் குமாரரின் குமாரரையும் தன் குமாரத்திகளையும் தன் குமாரரின் குமாரத்திகளையும் தன் சந்ததியார் அனைவரையும் எகிப்துக்குத் தன்னோடே அழைத்துக்கொண்டுபோனான். (ஆதியாகமம் 46:5-7)

மேற்கண்ட வசனங்களில், பெயர் குறிப்பிடாமல் எல்லா பெண்களையும் சுருக்கமாக மொத்தமாகச் சொல்கிறது: "இஸ்ரவேலின் குமாரர் தங்கள் தகப்பனாகிய யாக்கோபையும் தங்கள் குழந்தைகளையும் தங்கள் மனைவிகளையும்" என்றுச் சொல்கிறது.

எகிப்திற்குச் சென்றவர்களின் பட்டியலில், யாக்கோபின் ஒரு மனைவியின் பெயரும் இடம் பெறவில்லை. ஒரு வேளை, யாகோபின் மகன்கள் தங்கள் தாய்மார்களை எகிப்திற்கு அழைத்துச் செல்ல மறந்துவிட்டார்கள் என்றுச் சொல்வது ஏற்கத்தகாத அவமானமாகும். அதே போல, யாக்கோபு தன் மனைவிகளை ஏன் அழைத்துச் செல்லவில்லை என்று தன் மகன்களுக்கு ஞாபகப்படுத்த மறந்துவிட்டார் என்றுச் சொல்வதும் ஏற்கத் தக்கது அல்ல. நாம் படித்த வசனங்களில், "இஸ்ரவேலின் குமாரர் தங்கள் தகப்பனாகிய யாக்கோபையும் ..." என்ற வாக்கியமானது, யாக்கோபு அதிக வயதானவராக இருக்கிறார் என்றும் அவர் பலவீனமாக இருக்கிறார் என்பதையும் காட்டுகிறது. ஆதியாகமம் 47:8-9 வரையிலுள்ள வசனங்களின் படி, யாக்கோபுக்கு அந்த நேரத்தில் 130 வயது ஆகும். யாக்கோபுக்கு இவ்வளவு வயது இருக்கின்ற இந்த சமயத்தில் அவரது மனைவிகள் உயிரோடு இருந்திருப்பார்களா என்பது சந்தேகம் தான்.

கடைசியாக, எகிப்து தேசத்திலே, தன்னுடைய மரணம் நெருங்கிவிட்டது என்று உணர்ந்த யாக்கோபு, தன்னுடைய அனைத்து மகன்களையும் அழைத்து கீழ்கண்டவாறு கூறுகிறார்:

பின்னும் அவன் அவர்களை நோக்கி: நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப்படப்போகிறேன்; ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களண்டையிலே அடக்கம் பண்ணுங்கள் என்று கட்டளையிட்டு; அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா என்னப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாயிருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனாகிய எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார். அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம்பண்ணினேன். அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்டது என்றான். (ஆதியாகமம் 49:29-32)

யாக்கோபு தன் மனைவியாகிய லேயாளை கானான் தேசத்தில் அடக்கம் செய்தார் என்பதை மேற்கண்ட வசனங்கள் மிகவும் தெளிவாக நமக்கு கூறுகின்றன. அதிக வயதை அடைந்தவரும், மிகவும் பலவீனவருமான யாக்கோபு தன் மனைவி லேயாள் எகிப்திலே மரித்த பிறகு அவளை கானானுக்குக் கொண்டுச் சென்று அடக்கம் செய்தார் என்றுச் சொல்வது ஏற்கத்தக்கது இல்லை, இதற்கு யாக்கோபின் வயதும் பலவீனமான அவரது உடல்நிலையும் தாங்காது. ஆக, லேயாளை யாக்கோபு கானானில் அடக்கம் செய்தது, இவர்கள் கானானில் இருக்கும் காலத்தில் தானே தவிர, எகிப்திற்கு வந்துவிட்ட பிறகு அல்ல. ராகேல் எங்கே மரித்தாளோ அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது போல, லேயாளும் தான் மரித்த இடத்திலேயே (கானானில்) அடக்கம் செய்யப்பட்டாள் (ஆதியாகமம் 35:19-20).

முடிவுரை: யோசேப்பு எகிப்திற்கு வருவதற்கு முன், பல ஆண்டுகளுக்கு முன்பே அவரின் தாய் மரித்துவிட்டார். அதே போல, யாக்கோபும், அவரது குடும்பத்தாரும் எகிப்திற்கு வருவதற்கு முன்பாகவே, லேயாளும் மரித்துவிட்டார். யாக்கோபின் மனைவிகளில் ஒருவரும் எகிப்திற்கு யாக்கோபோடு செல்லவில்லை. பைபிள் கொடுக்கும் விவரம் மிகவும் சரியாக உள்ளது. யோசேப்பின் தாய் தந்தையர் (பெற்றோர்) எகிப்திற்கு வந்தார்கள் என்று குர்ஆன் சொல்லி மிகப்பெரிய தவறை செய்துள்ளது.

இதுமட்டுமல்ல, தன்னை பெற்றெடுத்த தாயை அல்லது தந்தையை மட்டுமே "தாய்" என்றும் "தந்தை" என்றும் அழைக்க வேண்டும் என்ற ஒரு கோட்பாட்டை குர்ஆன் சொல்கிறது. இதன்படி பார்த்தால், யூசுப் அலி மற்றும் முஹம்மது அஸத் என்ற இவ்விரு விரிவுரையாளர்களின் பதில்கள் குர்ஆனின் கோட்பாடுகளுக்கு எதிராக இருக்கிறது என்பதைக் காணலாம். இதைப் பற்றி இன்னும் அறிய, இக்கட்டுரையை "Can I call her mother?" படிக்கவும்.

ஜோசன் கட்ஜ்

ஆங்கில மூலம்: Qur'an Error: Did Joseph's parents go to Egypt?

இதர குர்ஆன் முரண்பாடுகளை படிக்கவும்