ரமலான் சிந்தனைகள் - 14

அப்துல்லா ஈஸா இப்னு மரியம் - மரியமின் மகனாகிய ஈஸா அல்லாஹ்வின் அடிமை/அடியார்

ஈஸா பற்றி குர்-ஆன் சொல்லும் மிக முக்கியமான காரியங்களில் ஒன்று என்னவெனில், அவர் ”அல்லாஹ்வின் அடிமை” என்பதாகும். ஈஸா பிறந்தவுடன் மர்யம் அவரை எடுத்துக் கொண்டு தன் ஜனத்தாரிடம் வந்த போது, ஜனங்கள் மரியமை இழிவாகப் பேசுவதாகவும், அப்போது, மர்யம் அவர்கள் குழந்தையிடமே கேட்டு உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளுமாறு சொல்கிறார். தொட்டில் குழந்தையிடம் எப்படிப் பேசுவது என்று அவர்கள் நினைக்கையில், குர்-ஆன் 19:30-33ல் உள்ளபடி, ஈஸா தன்னைப் பற்றி பேசத் துவங்குகிறார். அப்படிச் சொல்லும்போது, தான் அல்லாஹ்வின் அடிமை என்றும், தன்னை நபியாக அல்லாஹ் ஆக்கி இருக்கிறார் என்றும், உயிருள்ள நாளெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் செய்யும்படி அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதாக ஈஸா சொல்வதாக குர்-ஆன் சொல்கிறது. அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதை இழிவானதாக ஈஸா கருதவில்லை என்று குர்-ஆன் 4:172ல் பார்க்கிறோம். “(ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை” என்று அல்லாஹ் சொல்வதாக குர்-ஆன் 43:59ல் வாசிக்கிறோம். 'Abd என்றால் அரபி மொழியில் அடிமை என்று பொருள். ஒருவரிடம் அடிமையாக வேலை செய்பவரை 'Abd என்பார்கள். அப்துல்லா ('Abdullah) என்றால் அல்லாஹ்வின் அடிமை என்று பொருள். முஸ்லீம்கள் இறைவனைத் தவிர வேறு எந்த மனிதருக்கும் தாங்கள் அடிமை  'Abd என்று சொல்ல துணியார்கள்.  இஸ்லாமைப் பொறுத்தவரையில், அடிமைத்தனமெல்லாம் கிடையாது, அல்லாஹ்வை தொழுகை செய்வதற்கு முழுமையாக தம்மை ஒப்புக் கொடுப்பதைத்தான்  'Abd குறிக்கிறது என்று முஸ்லீம்கள் சொல்கிறார்கள். ஆயினும், குர்-ஆன் 4:172 ஐ வாசிக்கையில் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதை இழிவாகக் கருதுபவர்களுக்கு என்ன செய்யப்படும் என்று சொல்வதை நாம் வாசிக்கிறோம். அது மட்டுமல்ல, குர்-ஆனை நாம் வாசிக்கையில், எந்தக் கேள்வியும் கேட்காமல் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வுக்கு இணையாக முஸ்லீம்களின் தீர்க்கதரிசிக்கும் கீழ்ப்படிய வேண்டும் என்று சொல்லும் வசனங்கள் திரும்பத்திரும்ப வருவதை நாம் காணலாம்.

ஈஸா அவர்கள் அல்லாஹ்வின் அடியார் மட்டுமே என்று குர்-ஆன் சொல்வதன் பொருள் என்னவெனில், அவர் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனிதர் மட்டுமே,  அதைத் தவிர வேறு எதுவும் கிடையாது என்பதாகும். இது கிறிஸ்தவர்கள் இயேசுவின் தெய்வீகம் தொடர்பாக கொண்டிருக்கும் நம்பிக்கைக்கெதிராக குர்-ஆன் வைக்கும் வாதம் என அறிஞர்கள் கூறுகின்றனர். ஆயினும், இஸ்லாம் அரபி மொழியில் வரும்  'Abd என்ற பதமானது எபிரேய மொழியில் உள்ள ஊழியக்காரன் என்பதைக் குறிக்கும் 'ebed என்ற வார்த்தையுடன் தொடர்புடையதாகும். ஏசாயா தீர்க்கதரிசனப் புத்தகத்தில், தேவனுடைய தாசன் (ஊழியக்காரன்) ’ebed Yahweh பற்றி நாம் வாசிக்கிறோம். ஏசாயா புத்தகத்தில் பாடுபடுகிற ஊழியனைப் பற்றிய பாடல்கள் (Songs of the Suffering Servant) என்று சில வேதப் பகுதிகள் நினைவுகூரப்படுகிறது. அப்பாடல்களை ஏசாயா 42, 49, 50, 52. மற்றும் 53ம் அதிகாரங்களில் நாம் வாசிக்கிறோம். ஜனங்களை தன்னண்டைக்கு வழிநடத்தும்படி தேவன் அழைத்த அவருடைய தாசனை ஜனங்கள் துன்புறுத்துவதை சொல்லும் இப்பாடல்கள், மேசியாவாகிய இயேசுவைப் பற்றியவை என்றும் அவருடைய வாழ்வில் இவை நிறைவேறின என்றும் நாம் அறிந்திருக்கிறோம். வேதாகமக் கூறும் ’ebed Yahweh ஜனங்களின் மீட்புக்காக அமைதியாக தன்னை ஒப்புக்கொடுப்பதை நாம் காண்கிறோம். குர்-ஆனின் படி, அல்லாஹ்வின் அடிமை/அடியாராக இருக்கும் ஒரு நபர் கேள்வி கேட்காமல் கீழ்ப்படிந்து அல்லாஹ் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும். இரண்டுக்கும் இடையே எவ்வளவு வித்தியாசம்!

உலகளவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக உபத்திரவம் நடைபெறும் நாடுகளில் பெரும்பாலானவை இஸ்லாமிய நாடுகள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பாடுகளின் மத்தியில், தங்களை துன்புறுத்துபவர்களுக்காகவும் இயேசு சிலுவையில் மரித்தார் என்பதை சொல்ல உயிரைப் பணையம் வைத்து முஸ்லீம்கள் மத்தியில், முஸ்லீம்நாடுகளில் இயேசுவை அறிவிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் கிறிஸ்தவர்களுக்காக, ஊழியர்களுக்காக, ஊழிய நிறுவனங்களுக்காக ஜெபிப்போம். முஸ்லீம்களின் மத்தியில் அனேகர் இயேசுவை ஆண்டவராக இரட்சகராக ஏற்றுக் கொள்ள நம் பங்கு என்ன என்று சிந்திப்போம்.

-அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 7th May 2020

Source: http://arputhaa.blogspot.com/2020/05/14.html


2020 ரமலான் சிந்தனைகள் பக்கம்

சகோ. அற்புதராஜ் சாமுவேல் பக்கம்