2020 ரமலான் சிந்தனைகள் - 26: அல்லாஹ்வின் நியாயத்தீர்ப்பு நாள்

ரமலான் மாதத்தில் எல்லா நாட்களையுமே சிறப்பானதாக முஸ்லீம்கள் கருதினாலும், ஒரு நாளை மிகச் சிறப்பானதாக கருதி, இரவு முழுதும் விழித்திருந்து, இமாம்களின் பிரசங்கங்களைக் கேட்பதையும், குர்-ஆன் வசனங்களை ஓதுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ரமலான் மாதத்தின் ஓரிரவில் குர்-ஆன் வெளிப்பட்டதாகக் கூறும் முஸ்லீம்களால், அது ரமலான் மாததின் எந்த நாள் என்பதை கூறமுடிவதில்லை. ஆயினும் பெரும்பாலான முஸ்லீம்கள் 26ம் நாள் இரவு நேரத்தை “Laylat al-Qadr" வல்லமையின் இரவாக ஆசரிக்கின்றனர். இது ஆயிரம் மாதங்களைப் பார்க்கிலும் மேலான அல்லது சிறந்த ஒரு இரவு என்று குர்-ஆன் 97:3 கூறுகிறது. மற்ற நாட்களில் செய்யப்படுவதை விட, இந்த இரவில் செய்யப்படும் செயல்கள் 1000 மடங்கு பலனைக் கொண்டு வரும் என்றும்,  அல்லாஹ் ஒவ்வொரு முஸ்லீமின் விதியை தீர்மானிக்கிற இரவாக இது இருப்பதாக முஸ்லீம்கள் நம்புவதால், இதை, “விதியை முடிவு செய்யும் இரவு” என்றும் அழைக்கின்றனர். ஆகவே ரமலான் மாதத்தில் மற்ற நாட்களில் நோன்பு இருக்காத அல்லது இருக்க முடியாதவர்களும் இந்த நாளில் நோன்பிருக்க உற்சாகப்படுத்தப்பட்டு, முழு இரவும் குர்-ஆன் வாசிப்பதிலும், மார்க்க நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள்.

 குர்-ஆனை தொடர்ந்து வாசிக்கையில், குர்-ஆனின் மிக முக்கியமான கருப்பொருள்கள் (themes of the Quran) திரும்பத் திரும்ப வருவதை நாம் காணலாம். அதில் முக்கியமானது, இறுதி நாளில் அல்லாஹ் மனிதர்களுக்கு அளிக்கும் நியாயத்தீர்ப்பைப் பற்றியது ஆகும். குர்-ஆனில் உள்ள மொத்த வசனங்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு வசனங்கள் இறுதி நாள் நியாயத்தீர்ப்பு தொடர்பானது என அறிஞர்கள் கருதுகின்றனர். மனிதர்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கு முன் நியாயத்தீர்ப்பு நாளில் அவரவர் செய்த செயல்களுக்குத் தக்கதாக இஸ்லாமிய சொர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ கொண்டு செல்லப்படுவர் என இஸ்லாம் கூறினாலும், எல்லா மனிதர்களும் நரகத்திற்குள் செல்வதை எவரும் தவிர்க்க முடியாது என குர்-ஆன் 19:71 கூறுகிறது. அல்லாஹ்வுக்காக போரில் (ஜிஹாத்) இறந்து போகிறவர்கள் மட்டுமே நேரடியாக இஸ்லாமிய சொர்க்கம் செல்ல முடியும். ஆக, ஒரு மனிதன் எவ்வளவுதான் நல்லது செய்திருந்தாலும் கூட, அவன் சொர்க்கம் போவானா அல்லது நரகம் போவானா என்பதை உறுதியாகக் கூற முடியாது. ஆகவே ஒரு முஸ்லீம் செய்ய வேண்டியதெல்லாம் என்னவெனில், இறுதி நாளைப் பற்ற பயத்துடன், தீமையை விட நற்காரியங்களை அதிகம் செய்ய வேண்டும் என்பதே. ஏனெனில், அல்லாஹ்வின் தராசில் ஒருவர் செய்த நற்காரியங்களை விட அவர் செய்த  தீமை ஒன்றே ஒன்று அதிகமாக இருந்தாலும் கூட, அளவற்ற அருளாளன், மன்னிப்பதில் சிறந்தவன் என்று அழைக்கப்படுகிற அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்.

இறுதி நாளைப் பற்றி இஸ்லாமில் சொல்லப்பட்டிருப்பவைகளில் பல விஷயங்கள் கிறிஸ்தவத்தில் சொல்லப்பட்டவைகளுக்கு ஒத்ததாகத் தோன்றினாலும், அடிப்படையில் பல முரண்களைக் காணலாம். முதலாவதாக, ஒருவரின் மறுமை வாழ்வை அவர் செய்கிற நன்மை தீமைகள் மட்டுமே தீர்மானிப்பதில்லை. மேலும், அன்பின் தேவன் நாம் நியாயத்தீர்ப்பு நாளில் தைரியத்துடன் இருக்கும் படி பண்ணி இருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, அனைவரும் நரகத்திற்குள் அல்ல, பரலோகத்திற்குள் வரவேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம். அதுமட்டுமல்ல, பரலோகத்திற்குச் செல்லும் வழி இயேசுவே என்பதையும் வேதம் தெளிவாகக் கூறுகிறது. குர்-ஆனை வாசிக்கும் முஸ்லீம்களில் பலர், குறிப்பாக ரமலான் மாதத்தில் வல்லமையின் இரவில், இயேசுவை தரிசனங்கள் மற்றும் சொப்பனத்தில் அநேக முஸ்லீம்கள் காண்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்தெழுந்த இயேசுவை இன்று இரவு அனேக முஸ்லீம்கள்  கண்டுகொள்ள நாம் ஜெபிப்போம்.

- அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 19th May 2020

Source: http://arputhaa.blogspot.com/2020/05/26.html


2020 ரமலான் சிந்தனைகள் பக்கம்

சகோ. அற்புதராஜ் சாமுவேல் பக்கம்