"மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார்"  என்ற இஸ்லாமியர்களின் வாதம்

உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.  (உபாகமம் 18:18)

மேற்கண்ட வசனம் பற்றி அனேக இஸ்லாமியர்கள் இவ்விதமாக வாதிக்கிறார்கள், அதாவது தேவன் ஈசாக்கின் சந்ததிகளாகிய இஸ்ரவேல் மக்களிடம் பேசுகிறார், அவர்களிடம் “அவர்கள் சகோதரரிலிருந்து” என்று கூறுகிறார். இதன் அர்த்தம் இஸ்மவேல் சந்ததியிலிருந்து என்பதாகும், இஸ்மவேல் ஈசாக்கின் சகோதரராக  இருக்கிறார். எனவே, மோசேயைப் போல ஒரு நபியை எழுப்புவேன் என்று தேவன் சொன்னது முஹம்மதுவை குறிக்கும். மேலும் முஹம்மதுவே இஸ்மவேல் சந்ததியில் எழும்பிய மிகப்பெரிய நபியாவார். இவர் அற்புதங்கள் செய்து, இறைவனின் சட்டத்தை நிலை நிறுத்தினார்.  இப்படியாக முஸ்லிம்களில் அனேகர் வாதிக்கின்றனர்.

முதலாவது நாம், “அவர்கள் சகோதரரிலிருந்து” என்ற சொற்றொடரைப் பற்றி ஆராய்வோம். இந்த சொற்றொடரை சரியாக புரிந்துக்கொள்ள, இதே போல வேறு இடத்தில் தேவன் சொன்ன வார்த்தைகளை கவனிக்கவேண்டும். அதாவது இதே இஸ்ரவேல் மக்களை நோக்கி “ஒரு ராஜாவை எப்படி நியமிக்கலாம்” என்பதைப் பற்றி தேவன் கட்டளை கொடுக்கிறார். இதனை நாம் அதே உபாகமம் 17:14-15ம் வசனங்களை கவனித்தால் புரியும்:

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதில் குடியேறினபின், நீ; என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளையும் போல, நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்பாயானால்; உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொள்பவனையே உனக்கு ராஜாவாக வைக்கக்கடவாய்; உன் சகோதரருக்குள்ளிருக்கிற ஒருவனையே உன்மேல் ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய்; உன் சகோதரன் அல்லாத அந்நியனை ராஜாவாக ஏற்படுத்தக் கூடாது. (உபாகமம் 17:14-15)

நிச்சயமாக, பழங்கால மத்திய கிழக்கு நாட்டு பழக்கத்தின்படி, இஸ்ரவேலர்கள் தங்களுக்கு ஒரு ராஜாவை இஸ்மவேல் வம்சத்திலிருந்து ஏற்படுத்தமாட்டார்கள் என்று முஸ்லிம்களுக்கு சரியாக தெரிந்திருக்காது.  மேலும் “உன் சகோதரருக்குள்ளிருக்கிற ஒருவனையே” என்ற சொற்றொடரானது தெளிவாக சொல்வது போல, அவன் ஒரு இஸ்ரவேல் வம்சத்தானாகவே இருக்கவேண்டும்.

இரண்டாவதாக, முஹம்மதுவை மோசேவோடு ஒப்பிடுவதற்கு முன்பாக உபாகமம் 34:10-12ம் வசனங்களை நாம் படிக்கவேண்டும். இவ்வசனங்கள் மோசேயைப் பற்றிய ஒரு சுருக்க குணங்களை தெரிவிக்கிறது, அதே போல, இவரைப்போல வருபவரின் எதிர்ப்பார்ப்பு எப்படிப்பட்ட்து என்றும் இது தெளிவாக்குகிறது.

மோசே எகிப்துதேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும், அவனுடைய தேசமனைத்திற்கும் செய்யும்படி கர்த்தர் அவனை அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும், அவன் இஸ்ரவேலர் எல்லாருக்கும் பிரத்தியட்சமாய்ச் செய்த சகல வல்லமையான கிரியைகளையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால், கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும். (உபாகமம் 34:10-12)

பரிசுத்த வேத எழுத்துக்களின் மூலம் நாம் அறிவதாவது,

1) மோசே ஒரு இஸ்ரவேலராக இருந்தார்

2) தேவனால் அவர் அறியப்பட்டு இருந்தார் அதாவது, தேவனை முகமுகமாய் அறிந்தவர், இதன் அர்த்தம் என்னவென்றால், மறைமுகமாக அல்லது இன்னொரு இடைத்தரகர் மூலமாக அல்லாமல் தேவன் நேரடியாக இவரோடு  பேசுபவராக இருந்தார்.

3) மோசே மிகப்பெரிய அற்புதங்களைச் செய்தார்.

ஆனால், உபாகமத்தில் சொல்லப்பட்ட முன்னறிவிப்பு முஹம்மதுவில் நிறைவேறியது என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.  கிறிஸ்தவர்களோ, மோசேயைப்போல ஒரு தீர்க்கதரிசி என்பவர் மேசியாவாகிய இயேசு என்று நம்புகிறார்கள், மேலும் கீழ்கண்ட ஒப்பிட்டு பட்டியலின் படி, கிறிஸ்தவர்களின் நம்பிக்கை சரியானதேயாகும்.

மோசே

இயேசு

முஹம்மது

இஸ்ரவேலர்களின் மத்தியில் தோன்றிய தீர்க்கதரிசியாவார்

இஸ்ரவேலர்களின் மத்தியில் தோன்றிய தீர்க்கதரிசியாவார். (யூதாவின் வம்சத்தில் வந்தவர் – மத்தேயு 1:3, லூக்கா 3:33)

அரபியர்களின் மத்தியில் தோன்றிய தீர்க்கதரிசி (இவர் ஒரு நபி என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்)

(ஸூரா 32:3, 36:6, 34:43-44)

தேவனிடமிருந்து நேரடியான வெளிப்பாட்டை பெற்றவர் (ஸூரா 4:164, யாத்திராகம்ம் 33:11)

தேவனிடமிருந்து நேரடியான வெளிப்பாட்டை பெற்றவர் (யோவான் 12:49-50, 4:10)

நேரடியாக அல்லாமல் மறைமுகமாக வெளிப்பாடுகளை காபிரியேல் தூதன் மூலம் பெற்றவர் (ஸூரா 2:97)

அனேக அற்புதங்களைச் செய்தார் (ஸூரா 2:50 – கடல், ஸூரா 2:57 – மன்னா)

 

அனேக அற்புதங்களைச் செய்தார் (ஸூரா 3:49, மத்தேயு 8:27 – கடல், யோவான் 6:11-14 - மன்னா)

எந்த ஒரு அற்புதமும் செய்யாதவர் (ஸூரா 6:37, ஸூரா 28:48)

மேற்கண்ட விவரங்கள் போக, புதிய ஏற்பாடு, உபாகமத்தில் 18:18ன் தீர்க்கதரிசனம் மேசியாவாகிய இயேசுவில் நிறைவேறியது என்று கூறுகிறது. படிக்க அப்போஸ்தலர் நடபடிகள் 3:17-26. மேலும் 22ம் வசனத்தை கவனிக்கவும் : 

 ”மோசே பிதாக்களை நோக்கி: நீங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச்சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக”

முடிவுரையாக, குர்-ஆன் 28:48 சொல்வதை சிறிது கூர்ந்து கவனிக்கவும்:

எனினும் (இப்பொழுது) நம்மிடமிருந்து சத்திய(மார்க்க)ம் அவர்களிடம் வந்த போது, "மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்று இவருக்கு ஏன் கொடுக்கப்படவில்லை" என்று கேட்கிறார்கள்;.  (குர்-ஆன் 28:48)

மேற்கண்ட குர்-ஆன் வசனத்தின் படியும், முஹம்மது மோசேக்கு சமமான தீர்க்கதரிசி அல்ல என்பது தெளிவாக புரியும்.

ஆங்கில மூலம்: The Claim that Muhammad was the Prophet like Moses 

முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் தொடர் கட்டுரைகள்