அன்புள்ள அப்துல்லாஹ் - 2

எழுதியவர்: ஜெரார்ட் நெல்ஸ்

(இது இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடையே தெளிவை உண்டாக்க உதவும்படிக்கு எழுதப்பட்ட கற்பனை உரையாடல் கடிதம் ஆகும். ‘அப்துல்லாஹ்’ என்ற பெயர் அரபி மொழி பெயராகும், இதன் பொருள் ‘அல்லாஹ்வின் அடிமை, ஊழியன்’ என்பதாகும். இந்த கடிதங்களை எழுதும் ஆசிரியரின் பெயர் ‘தியோபிலஸ்’ என்பதாகும், இது ஒரு கிரேக்க மொழி பெயராகும், அதன் பொருள் ‘இறைவனால் நேசிக்கப்பட்டவன்’ என்பதாகும்.)

கடிதம் 2

உன் பதிலுக்கு நன்றி. உன் உள்ளத்திலிருந்து வரும் வெளிப்படையான பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது நியாயமானது என்பது எனக்குத் தெரியும். நான் உன் உணர்வுகளை மதிக்கிறேன். உன் நேர்மையை நான் சிறிதும் சந்தேகிக்கவில்லை. இறைவன் மற்றும் அவருடனான நம் உறவு ஆகியவற்றுடன் தொடர்புடைய எந்த உரையாடலுக்கும் நேர்மையே அடிப்படையாக இருக்க வேண்டும். ஆயினும், அந்நேர்மையானது நிரூபிக்கப்பட்ட உண்மைகளுடன் இணைக்கப் பட்டதாக இருக்க வேண்டும். நான் முழுமனதுடன் பின்பற்றுவது உண்மையிலேயே சரியானதுதானா? என்ற கேள்வியை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். குற்றவாளி என்று நியாயந்தீர்க்கப்பட்ட ஒருவரின் தாய் தன் மகன் குற்றமற்றவர் என்று முழுமையாக நம்பக்கூடும். ஆனால் அத்தாயின் அறியாமையின் நிமித்தமாக அவர் குற்றமற்றவராகி விடுவாரா? எது உண்மை என்பதை நம் நேர்மையின் அளவு தீர்மானிப்பதில்லை, ஒரு நீதிவிசாரணையே தீர்மானிக்கிறது, நேர்மையானது ஒரு பொய்யை உண்மையாக மாற்ற முடியாது.

ஆகவே, நான் மேலே சொன்னது போல, நம் நேர்மை அல்ல, நாம் எதன் மீது நம் நேர்மையை வைத்திருக்கிறோம் என்பதே மிக முக்கியமான காரியம் ஆகும். எனவே நான் உன் நேர்மையை பாராட்டுகிற அதே வேளையில், நீ உண்மை என்று ஏற்றுக் கொண்டிருக்கிறதைக் குறித்து நான் வினவுகிறேன் என்பதை தயவு செய்து ஏற்றுக் கொள்வாயாக. நான் இதை உனக்கு விளக்க விரும்புகிறேன்.

தற்போதைய வேதாகமத்தின் நம்பகத்தன்மையை ஏற்பது குறித்து உனக்கு ஆழ்ந்த தயக்கங்கள் இருப்பதாக நீ குறிப்பிட்டிருந்தாய். நான் இதை ஓரளவுக்கு எதிர்பார்த்திருந்தாலும், இன்னமும் உன் கருத்து எனக்கு ஆச்சரியமளிக்கிறது. உன் சந்தேகத்திற்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன். முதலாவதாக, நிரூபிக்கப்பட்ட உண்மைகள் மற்றும் அவைகளைக் குறித்த நம் விளக்கம் ஆகிய இரண்டையும் நாம் வேறுபிரித்துப் பார்க்க வேண்டும். இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காத காரியங்கள் கிறிஸ்தவத்தில் நடந்திருக்கின்றன. கடந்த சில நூற்றாண்டுகளாக வேதாகம விமர்சகர்கள் தாராளப் போக்கை முன் வைத்து தங்களின் கூற்றை பரப்பிக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இறையியலார் ஆவர். அவர்களின் கூற்று பெரும்பாலும் தவறான விளக்கங்களின் அடிப்படையிலானவை ஆகும். இவை அவர்களின் செயல்கள், தனிப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் அவர்களின் கருத்துக்களில் வெளிப்படுகின்றன. இவைகளின் அடிப்படையிலே அவர்கள் வேதாகம விளக்கம் (அ) வியாக்கியானம் கொடுக்கிறார்கள். எனினும், நாம் கவனித்து செவிமடுக்க வேண்டிய வேதாகம விமர்சகர்ககளும் உண்டு.

நாம் விளக்கம் கூறுதலைக் குறித்த ‘வார்த்தைத் திறனாய்வு’ என்று அழைக்கப்படுவதற்கும் ‘வரலற்று ஆராய்ச்சிமுறை’ ஆகிய இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். வார்த்தைத் திறனாய்வு என்பது மூலப் பிரதியின் வார்த்தையை அறிந்து கொள்ள நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான முறை ஆகும். பல நூற்றாண்டுகளாக கைப்பிரதிகளில் பிரதி எடுக்கும் போது ஏதேனும் பிழைகள் உண்டாயிற்றா என்பதையும் ஒரு குறிப்பிட்ட வார்த்தை திரிக்கப்பட்டு மாற்றப்பட்டிருக்கிறதா என்பதையும் இதன் மூலம் ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியும். தவறாக புரிந்து கொள்ளப்பட்ட வார்த்தைகள், வாக்கியங்கள் மற்றும் உரைகள் ஆகியவற்றையும் இது சரிசெய்ய முயற்சிக்கிறது. அறிஞர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் மற்றவர்களைக் கொண்ட பல குழுக்கள் வேதாகமத்தின் பழைய கைப்பிரதிகள் ஒவ்வொன்றையும் முழுமையாக ஆராய்ந்திருக்கின்றனர். இது தவறுகளைக் கண்டுபிடிக்கவும், மூலப்பிரதியில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதை அறிந்து கொள்வதற்கும் உதவியது. இது நாங்கள் ஆதியில் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைக்கு ஒத்த, பிழையற்ற ஒரு வேதாகமத்தை எங்கள் கைகளில் வைத்திருக்கிறோம் என்கிற உறுதியை எங்களுக்குத் தருகிறது.

வரலாற்று ஆராய்ச்சி முறை முற்றிலும் வித்தியாசமானதாகும். ஒரு எழுத்தின் ஏற்றுக்கொள்ளக் கூடிய தன்மையை மதிப்பிடுவதன் மூலமாக அதைச் ‘சரி செய்ய’ இம்முறை முயற்சிக்கிறது. உதாரணமாக, யூதர்கள் செங்கடலை கட்டாந்தரையில் கடப்பது போல நடந்து சென்று கடந்தனர் அல்லது இயேசு கன்னியின் வயிற்றில் பிறந்தார், அவர் கடல் மீது நடந்தார், மரித்தவர்களை உயிரோடே எழுப்பினார் என்று பைபிள் போதிக்கிறது. இவைகள் நடைபெற சாத்தியமில்லாதவைகளாக இருக்கிற படியால் இவைகளை ஒரு புராணக் கதை என்றே ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டும் என விமர்சகர் கருதுவார். இவர்கள் பலவிதங்களிலும், வழிமுறைகளிலும் அவர்கள் பைபிளில் இயற்கைக்கப்பாற்பட்டதாக தோன்றும் எந்தக் காரியத்தையும் தங்கள் பேனாக்களால் தணிக்கை செய்து விடுகிறார்கள். எதிர்பார்க்கப்பட்டது போலவே, இவர்களின் கூற்றுகள் மேற்கத்திய நாடுகளில் ஆவிக்குரிய சிதைவை பெருமளவில் உண்டாக்கி விட்டன. இதனால் பலருடைய மனதிலிருந்து கடவுள் நம்பிக்கை அழிக்கப்பட்டு விட்டது. தெரிந்தோ தெரியாமலோ இவ்வாராய்ச்சியாளர்கள் ஆதியந்தமற்ற இறைவனால் என்னவெல்லாம் செய்யமுடியும், எவைகளெல்லாம் செய்ய முடியாது என்பதை மதிப்பிடுவதற்கும் வரையறுப்பதற்கும் தங்கள் மனித அறிவையே நியாயாதிபதியாக வைத்திருக்கிறார்கள். இது தெய்வீக நூல் மற்றும் அதன் ஆசிரியரைக் குறித்த மனித விளக்கத்தையே தந்திருக்கிறது. நாம் இதை ‘மதச்சார்பற்ற மனிதம்'| என்கிறோம். இது மிகவும் வருந்தத்தக்கதாகும். ஏனெனில் மேற்கத்திய ஊடகங்களில் வெளிப்படுவது போல பெரிய தலைவர்களும் இக்கருத்துடையோர்களாகவே உள்ளனர்.

தங்களுடைய கருத்துக்களுக்கு வலு சேர்ப்பதற்காக, இந்த விமர்சகர்கள் வேதாகம நூல்கள் எழுதப்பட்ட காலத்தை மாற்றியிருக்கிறார்கள். உதாரணமாக,மோசேயின் சட்டம் வேதபாரகனாகிய எஸ்றாவால் எழுதப்பட்டது என்று கூறுகின்றனர். இவர் மோசேக்குப் பின் 900 வருடங்கள் கழித்து வாழ்ந்தவர் ஆவார். மோசேயின் காலத்தில் எழுத்தறிவு இல்லை என்ற யூகத்தின் அடிப்படையில் இக்கருத்தை எழுப்புகின்றனர். ஆனால் ஆபிரகாமின் காலத்திற்கு வெகு காலத்துக்கு முன்பே (மோசேக்கு 500 வருடங்கள் முன்பே) எழுத்து வழக்கத்தில் இருந்தது என்பதை இப்போது அறிகிறோம்.

சில விமர்சகர்கள் இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்குப் பின் அவருடைய பரமேறுதல் நிகழ்வு நடைபெற சாத்தியமில்லாதது என்று கூறி அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். இதன் மூலமாக இவை கட்டுக் கதை என எடுத்துக் கொண்டு பவுல் கிறிஸ்தவத்தை மாற்றிவிட்டார் என்று கூறினர். அவர் தன் இறையியல் கொள்கைக்கு ஏற்றவாறு சுவிசேஷத்தை தணிக்கை செய்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் சமகால குறிப்புகள் பவுலுக்கும் இயேசுகிறிஸ்துவின் சீடர்களுக்கும் இடையே உபதேச முரண்பாடுகள் எதுவும் இருந்ததில்லை, இன்னும் சொல்லப் போனால் அவர் அவர்களிடம் கலந்தாலோசித்தார் என்று காண்பிக்கின்றன.

பிரதி எடுத்தலில் அவ்வப்போது நிகழ்ந்த பிழைகளை நாங்கள் ஒப்புக்கொள்ள தயாராக இருக்கும் வேளையில், இவை எவ்விதத்திலும் தேவனுடைய வார்த்தையின் செய்தி மற்றும் உள்ளடக்கத்தை மாற்றுவதில்லை என்பதில் நாங்கள் மிகவும் உறுதியுடனுருக்கிறோம். உண்மையில், மூவாயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்தில் கரங்களால் நகலெடுக்கப்பட்ட வேதாகம கைப்பிரதிகள் மிகவும் சிறிதளவே பிழை உள்ளதாக காணப்படுவதை நாங்கள் முற்றிலும் அற்புதமானதாகவே கருதுகிறோம்.

அனேக இஸ்லாமியர், நற்செய்தி நூல்களில் உள்ள பிழைகள் குறித்த கட்டுரையை பரப்புவதற்கு இவ்விதமான தாராளப்போக்குடைய விவாதங்களையே பயன்படுத்துகின்றனர், ஆனால் அதேவேளையில் அவர்கள் தங்கள் சொந்த புனித நூலுக்கு மிகவும் அவசியமான வார்த்தைத் திறனாய்வை பயன்படுத்த மறுக்கின்றனர் என்பது நமக்கு மிகவும் ஆச்சரியத்துக்குரியதாக இருக்கிறது. பைபிளை விட குர்ஆன் காலத்துக்குப் பிந்தியதாக இருந்தாலும், பைபிளில் இருப்பது போல, அல்லது அதை விட மிகவும் சிக்கலான பிரச்சனைகள் உள்ளன என்ற உண்மையை முழுதுமாக மறைத்து விடுகின்றனர். இவ்வாக்கியம் எழுப்பும் அதிர்வலைகளை நான் அறிந்திருக்கிறேன். ஆனால் வேதாகமம் குறித்த பல இஸ்லாமியக் கூற்றுகள் எங்களுக்கு கோபமூட்டுவதாக இருப்பதைக்காட்டிலும் அதிகமாக இக்கருத்து உனக்கு கோபமூட்டுவதாக இருக்க முடியாது. சுருங்கக் கூறின், ஒரேவிதமான விதிகளைக் கொண்டு நாம் ஆராய வேண்டும் என்று கருதுகிறேன். தபரி, (கி.பி.855வரை வாழ்ந்தவர்), அல்-புகாரி (கி.பி.870 வரை வாழ்ந்தவர்), மற்றும் அல்-ஹஜாலி (கி.பி.1111 வரை வாழ்ந்தவர்) போன்ற முக்கியமான இஸ்லாம் அறிஞர்கள் (கிரேக்க) நற்செய்தி நூலின் உண்மைத்தன்மையை நம்பினர். இவர்களின் கூற்றை வேதாகமம் மாற்றி எழுதப்பட்டு விட்டது என்று பிரச்சாரம் செய்கிற இஸ்லாமிய அறிஞர்கள் மறைத்து (கண்டும் காணாதது போல இருந்து) விடுகின்றனர். குர்-ஆன் கூறும் செய்தியும் கூட நற்செய்தி நூல்களின் உண்மைத்தன்மையே:

(முஃமின்களே!)"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம் ; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்" என்று கூறுவீர்களாக. (குர்-ஆன் 2:136)

(ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்;. அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையே? அவர்கள் தான் பாவிகளாவார்கள். இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக. அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்;. அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக. (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக. மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர். அஞ்ஞான காலத்து தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்? எனவே (நபியே!) எவர் இருதயங்களில் நோய் இருக்கின்றதே?, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர். (அவர்களைப் பகைத்துக் கொண்டால்) "எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமே? என்று அஞ்சுகிறோம்" என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையே? அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்;. அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி கைசேதமடைந்தோராக ஆகிவிடுவார்கள். (குர்-ஆன் 5:47,49,50,52)

இன்னும், நீங்கள் வேதத்தையுடையவர்களுடன் - அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து, (மற்றவர்களுடன்) அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள்; "எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம்; எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே - மேலும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு, நடப்போர் (முஸ்லிம்கள்) ஆவோம்" என்று கூறுவீர்களாக. (குர்-ஆன் 29:46)

குர்-ஆன் எழுதப்பட்ட காலத்தில் வேதாகத்தில் திருத்தம் அல்லது நம்பகத்தன்மையின்மை குறித்த குறிப்பு எதுவும் காணப்பட வில்லை என்பது மிகவும் தெளிவாகிறது. இதற்கு முரணாகச் சொல்லுகிற எவரும் குர்ஆனுக்கு எதிராகச் செல்வதோடன்றி, கீழ்க்காணும் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்:

• வேதாகமத்தை திருத்தியது அல்லது மாற்றியது யார்?

• வேதாகமம் எப்பொழுது திருத்தப்பட்டது?

• திருத்தப்பட்டது எனில் மூலப்பிரதி எங்கே அல்லது அப்படிப்பட்ட ஒன்று இருக்கிறது என்பதற்கான ஆதாரம் எங்கே?


இதுகாறும் இவைகளுக்கு பதில் எனக்கு கிடைக்கவே இல்லை.

முஹம்மதுவின் காலத்திற்கு முன்போ அல்லது அவரது காலத்திலோ வேதாகமம் திருத்தப்பட்டிருக்கும் எனில், குர்-ஆன் வேதாகமம் குறித்து சாதகமாக சொல்லியிருக்காது. அப்படியானால் அதற்குப் பின்னர் வேதாகமம் திருத்தப்பட்டதா? முஹம்மதுவின் காலத்துக்கும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட கைப்பிரதிகள் தற்போது உள்ளன, அவை அதற்கு சான்று பகரும். வேதாகமம் இறைவனுடைய வார்த்தைதான் என்பதை குர்-ஆனில் இருந்தே நாம் சற்று முன்பு வாசித்தோம். அத்துடன், |அல்லாஹ்வின் வாக்குகளை யாராலும் மாற்ற முடியாது| (ஸூரா 6:34; 10:64) என்ற குர்-ஆன் வாசகத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படியாக, வேதாகமத்தைக் குறைகூறும் முஸ்லீம் அறிஞர்கள் என்னதான் செய்ய முயற்சிக்கிறார்கள்?

வேதாகமம் திரித்து எழுதப்பட்டிருக்கிறது என்று குர்-ஆன் கூறுகிறது என்று சில முஸ்லீம்கள் கூறுவர். அவர்கள் மேற்கோளாக காண்பிப்பது கீழ்கண்ட வசனங்களாகும்:

வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்? (ஸூரா 3:71)

நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவார் இருக்கின்றார்கள் - அவர்கள் வேதத்தை ஓதும்போதுத் தங்கள் நாவுகளைச் சாய்த்து ஓதுகிறார்கள் - (அதனால் உண்டாகும் மாற்றங்களையும்) வேதத்தின் ஒரு பகுதிதானென்று நீங்கள் எண்ணிக் கொள்வதற்காக் ஆனால் அது வேதத்தில் உள்ளதல்ல் அது அல்லாஹ்விடம் இருந்து (வந்தது) என்றும் அவர்கள் கூறுகிறார்கள்; ஆனால் அது அல்லாஹ்விடமிருந்து (வந்ததும்) அல்ல இன்னும் அறிந்து கொண்டே அவர்கள் அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றார்கள். (ஸூரா.3:78)

மேற்கண்ட குர்-ஆன் வாக்கியங்கள் கூறுகிறது போல, யூதர்கள் பேசும்போது தங்கள் நாவினால் வசனத்தை திருத்திச் சொன்னார்களே அன்றி தங்கள் எழுதுகோலினால் வேதாகமத்தைத் திருத்தவில்லை என்பதை அறிந்துகொள்ளலாம். இல்லையேல், முஸ்லீம்கள் வேதாகமத்தின் உள்ளடக்கத்தைக் குறித்து வேதத்தை உடையவர்களிடம் (யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்) கேட்க வேண்டும் என்று குர்-ஆன் சொல்லியிருக்காது:

வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்து) கொள்ளுங்கள் (என்று நபியே! அவர்களிடம் கூறும்) (ஸூரா 21:7)

அப்படியானால் அனேக முஸ்லீம்கள் வேதாகமம் திருத்தப்பட்டுவிட்டது என்று ஏன் நம்புகின்றனர்? வரலாறு, அகழ்வாராய்ச்சி மற்றும் குர்-ஆன் போன்றவை அதை மறுத்தும் ஏன் அவர்கள் அவ்வாறு நம்புகின்றனர் என்று நாம் கேட்கலாம். இக்கேள்விக்கான பதில் அது ஒரு சதி என்றே எண்ணத்தோன்றுகிறது.

இப்னு - காஜெம் (Ibn Khazem) (கி.பி 1064ல் மரித்தார்) என்பவர் கலீஃபா அவர்களின் மந்திரியாக தெற்கு ஸ்பெயின் பகுதியை சில காலம் ஆட்சி செய்தார். அவர் குர்-ஆனை வாசித்துக் கொண்டிருந்த போது ஈஸா (இயேசு) தனக்குப் பின் வரவிருக்கும் அஹமது என்னும் பெயரையுடைய தூதரைப் பற்றிய நற்செய்தியைக் கூறுவதை வாசித்தார் (ஸூரா 61:6). அந்த அரேபியப் பெயரின் பொருளும் முஹம்மது என்ற பெயரின் பொருளும் ஒத்த தன்மையுடையது ஆகும். மேலும் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள் என்று சொல்லப்பட்டிருப்பதையும் அவர் வாசித்திருக்க வேண்டும். (ஸூரா.7:157). ஆகவே அவர் முஹம்மதுவைப் பற்றிய குறிப்புகளுக்காக வேதாகமத்தில் தேட ஆரம்பித்தார். ஆனால் அவரைப் பற்றிய எந்த குறிப்பும் இல்லாததைக் கண்டு அவர் ஆச்சரியப்பட்டிருக்கக் கூடும். ஒரே இறைவனிடமிருந்து தோன்றியதாகக் கூறப்பட்ட குர்-ஆன் மற்றும் வேதாகமத்திற்கு இடையே உள்ள பல முரண்பாடுகளையே அவர் கண்டார். இப்னு காஜெம் சந்தித்த பிரச்சனையை நாம் கண்டு கொள்ள முடியும். வேதாகமம் மற்றும் குர்-ஆன் ஆகிய இரண்டு புத்தகங்களும் இறை வார்த்தை என்று குறிப்பிடப்பட்டது - ஆனால் அவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக உள்ளன.

இப்னு - காஜெம் குர்-ஆனின் தூய்மையைக் குறித்து சந்தேகப்படக் கூடாது என தீர்மானித்தார். முஹம்மது நற்செய்தி நூல்களைக் குறித்து உயர்வாக சொல்லியிருக்கிற படியால், அவை குர்-ஆனுக்கு இசைந்து காணப்பட வேண்டும் என்றும், யூதர்களாலும் கிறிஸ்தவர்களாலும் இப்போது அவை மாற்றப்பட்டுவிட்டன என்று அனுமானித்தார். இந்த யூகம் குர்-ஆன் மீது அவர் கொண்டிருக்கும் வைராக்கியத்தைக் காண்பிக்கலாம், ஆனால் அது சரித்திர உண்மைகளின் மீது அமைந்தது அல்ல.

அவரது காலத்திலிருந்து முஸ்லீம்கள் வேதாகமத்தின் தூய்மையைக் குறித்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய விவாதமானது குர்-ஆனுக்கு முரண்பட்டதாக இருக்கிறதோடு மாத்திரமல்லாது, வேதாகமத்தின் உண்மைத்தன்மையை ஆதரிக்கும், அதிகரித்துக் கொண்டே இருக்கிற சரித்திர மற்றும் அகழ்வாராய்ச்சி சான்றுகளுக்கும் முரண்பட்டு விளங்குகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, இறைவனுடைய வார்த்தையை எந்தக் காரணத்திற்காக, எவரேனும் மாற்ற வேண்டும்?

அனேக முஸ்லீம்கள் அறிந்து கொள்ளாத ஒன்றைக் கண்டுகொள்ள இந்த கடிதம் உனக்கு உதவியிருக்கும். உண்மைக் கிறிஸ்தவர்கள் தங்கள் இருதயத்திலும் வாழ்க்கையிலும் வேதாகமத்திற்கு மிகவும் சிறந்ததொரு இடத்தைக் கொடுத்திருக்கின்றனர். வேதாகமம் தேவன் அவர்களுக்கு எழுதின அன்பின் கடிதம் ஆகும்.

உனது ஆழ்ந்த நம்பிக்கையின் ஆதாரத்தைக் குறித்து கேள்வி கேட்கும் ஒரு கடிதம் எழுதுவது என்பது எனக்கு மிகவும் வேதனை அளிப்பதாகவே இருக்கிறது. ஏனெனில் இது உன் உணர்வுகளை பாதிக்கக் கூடும். ஆனால் இறைவனில் உள்ள நம் நம்பிக்கைக்கான அஸ்திபாரத்தைக் குறித்த நம் கவனம் இத்தகைய உணர்ச்சிப் பூர்வமான தடைகளை மேற்கொள்ள நமக்கு பலமளிக்கும்.

இந்தக் கடிதத்தை நீ பெறும்போது நலமாகவும் சரீர ஆரோக்கியத்துடனும் இருப்பாய் என்று நம்புகிறேன். தயவு செய்து சீக்கிரம் பதில் கடிதம் எழுது. இனிய நல் வாழ்த்துக்கள்

இப்படிக்கு உண்மையுடன்
தியோபிலஸ்

ஆங்கில மூலம்: Dear Abdallah - Second Letter

முதல் கடிதம்

பட்டியல்

மூன்றாம் கடிதம்