ஜின்கள் / தீய ஆவிகள் அல்லது பில்லிசூனியங்களிலிருந்து எவ்வாறு  விடுதலையாவது?

கீழ்கண்ட கேள்வியை ஒருவர் எங்களுக்கு அனுப்பியிருந்தார்:

கேள்வி: ஜின்கள் / தீய ஆவிகள் அல்லது பில்லிசூனியங்களிலிருந்து எவ்வாறு விடுதலையாவது? சிறிது விளக்கமுடியுமா?

அன்பான நண்பருக்கு,

ஜின்கள், தீய ஆவிகள் மற்றும் பில்லிசூனியங்களிலிருந்து எப்படி விடுவிக்கப்படுவது என்ற கேள்வியை கேட்டதற்கு உங்களுக்கு நன்றி செலுத்துகிறோம். நான் ஆப்பிரிக்க நாட்டில் வாழுகிறேன். இந்த நாட்டில் தீய ஆவிகளுக்கு, ஜின்களுக்கு பயந்த வண்ணமாகவே மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.  இங்கு வாழும் மக்கள் இந்த தீய இருண்ட சக்திகளிலிருந்து விடுவிக்கப்பட அனேக வழிமுறைகளை பின் பற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அனேகர் குர்-ஆன் வசனங்கள் எழுதப்பட்ட தாயத்துக்களை அணிந்துக் கொள்கிறார்கள். இதன் மூலம் அந்த தீய சக்திகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்புகிறார்கள். அனேகர் பாதுகாப்பு கிடைக்கும் என நம்பி, தங்கள் வீடுகளில் விக்கிரகங்களை வைத்துக் கொள்வார்கள். மேலும் சில மருந்துகளை குடிப்பார்கள்,  மந்திரவாதிகளிடம் (சாமியார்கள் போன்று இருக்கும் நபர்களிடம்) சென்று வருவார்கள்.  இன்னும் சிலர் வீட்டிற்குள் நுழையும் போதோ அல்லது காரில் பிரயாணம் செய்வதற்கு முன்போ "பிஸ்மில்லாஹ்" (அல்லாஹ்வின் பெயரில்)  என்றுச் சொல்லிவிட்டால், அவர்களுக்கு விபத்துகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்புகிறார்கள். சிலர் தங்கள் குலதெய்வங்களுக்கு பூஜைகள் செய்வதினால், இதர தீய ஆவிகளிலிருந்து தங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.  

தீர்க்கதரிசிகள் மூலமாக கொடுக்கப்பட்ட பரிசுத்த வேத எழுத்துக்களாகிய இறைவனுடைய வார்த்தைகளை அறியாதவர்கள் தான் மேற்கண்ட விதமான அனைத்து காரியங்களையும் செய்வார்கள். முக்கியமான விவரம் என்னவென்றால், "தீய ஆவிகளிடமிருந்து பாதுகாக்கப்படுதல்" என்பது பற்றி உண்மையான இறைவனின் வார்த்தை நமக்கு என்ன சொல்கிறது என்பதை நாம் அறியவேண்டும் என்பதாகும்.

சாத்தானும் அவனது தீய சக்திகளும், உண்மையாகவே சில அற்புதங்களை செய்வார்கள் என்று தேவனுடைய வார்த்தை நமக்குச் சொல்கிறது. தீய ஆவிகள் சக்தி வாய்ந்தவைதான், ஆனால், அவைகளின்  சக்தி ஒரு குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டதாகும். அவைகளுக்கு எல்லாவற்றையும் செய்யும் சக்தி இல்லை. உலகத்தில் உள்ள அனைத்து தீய சக்திகள், பில்லிசூனியங்கள் போன்றவைகளை ஒன்று சேர்த்தாலும், அவைகளை காட்டிலும் அதிக வல்லையுள்ளவர் தேவன் ஆவர். அவருடைய வார்த்தைகளை கேட்டு, அவருக்கு கீழ்படிகின்றவர்கள் இப்படிப்பட்ட தீய சக்திகளுக்கும், ஜின்களுக்கும்  மற்றும் பில்லிசூனியங்களுக்கும் பயப்படத்தேவையில்லை என்று வேதம் நமக்கு போதிக்கின்றது. 

தேவனுக்கு கீழ்படிந்து வாழுகிறவர்கள் இவ்வித ஆவிகளுக்கு பயந்து வாழத் தேவையில்லை. நம்முடைய நம்பிக்கையை நாம் அவரின் மீது வைக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். மத சம்மந்தப்பட்ட சடங்குகள், விக்கிரகங்கள், சாமியார்கள் என்றுச் சொல்லக்கூடிய மனிதர்கள் மீது நம்பிக்கை வைத்தல் போன்றவைகளை நாம் விட்டுவிடவேண்டும், தேவன் மீதே நம்பிக்கை வைக்கவேண்டும். உண்மையான தேவன் மீது வைக்கும் நம்பிக்கையை விட்டுவிட்டு வேறு பொருட்களின் மீது நாம் நம்பிக்கை வைத்தால், அது விக்கிர ஆராதனையாகும்.  விசேஷித்த வகையில் செய்யப்படும் பூஜைகள், தாயத்துக் கட்டிக்கொள்ளுதல், மேலும் வீடுகளில் விக்கிரகங்களை வைத்து பூஜித்தல் போன்றவை எல்லாம் நமக்கு தீய ஆவிகளிலிருந்து விடுதலையை கொடுக்காது.  உண்மையை சொல்லவேண்டுமென்றால், தீய சக்திகள், தங்கள் நோக்கங்களை பூர்த்தி செய்துக்கொள்ள மேற்கண்ட வழிமுறைகளை தங்கள் ஆயுதங்களாக பயன்படுத்திக்கொண்டு நம்மை தாக்கும். 

பரிசுத்த இன்ஜிலில் நாம் இப்படி வாசிக்கிறோம்:

 "கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்." (எபேசியர் 6:10,11).  

முக்கியமாக தேவனுடைய சர்வ ஆயுதம் என்பது  16ம் வசனத்தில், "விசுவாசம் என்னும் கேடகம்" என்று சொல்லப்பட்டுள்ளது:

 "பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்". (எபேசியர் 6:16).

தீய ஆவிகளின் வல்லமையை நாம் ஜீவனுள்ள தேவன் மீதும் அவரது வார்த்தையின் மீதும்  வைக்கும் விசுவாசத்தின் மூலமாக மேற்கொள்ள முடியும் என்று வேதம் நமக்கு போதிக்கின்றது.  விசுவாசம் என்று நாம் சொல்லும் போது கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம், "நாம் எவ்வளவு விசுவாசம் வைத்திருக்கிறோம்" என்பதல்ல, "நாம் யார் மீது விசுவாசத்தை வைத்திருக்கிறோம்" என்பது தான்.  பரிசுத்த வேதத்தின் படி,  நம்மை தீய சக்திகளிலிருந்து விடுவிக்கிறவர் ஒருவர் மட்டுமே இருக்கிறார்.  அந்த ஒருவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? ஆம், அவர் தான் இயேசு,  மரியாளுக்கு பிறந்த பரிசுத்த குமாரன்.  அவர் பரலோகத்திலிருந்து வந்தார், ஒரு பரிசுத்த மனிதனாக பிறந்தார், அவரிடத்தில் பாவம் காணப்படவில்லை.  பரிசுத்த வேதம் அவரைப் பற்றி இப்படி கூறுகிறது, இயேசு இவ்வுலகில்  வந்ததின் நோக்கம் "பிசாசின் கிரியைகளை (செயல்களை) அழிப்பதற்கு ஆகும்" (இன்ஜில் - 1 யோவான் 3:8) .  

நம்முடைய பாவங்களிலிருந்தும், தீய ஆவிகளின் சக்தியிலிருந்தும்,  நித்திய தண்டனையிலிருந்தும் நம்மை விடுவிப்பதற்கே இயேசு வந்தார்.  இயேசு இதர தீர்க்கதரிசிகளை விட உயர்ந்தவர்.  அவர் சர்வ வல்லவர், நித்திய தேவனுடைய வார்த்தையாக இருக்கிறார், அவரே "நம்முடன் வாழுவதற்கு மனிதனாக  வந்தார்" (இன்ஜில் யோவான் 1:1-3, 14).  

அவரைப் பற்றி வேதம் இவ்விதமாக கூறுகிறது: 

ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,  ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். (இன்ஜில் – எபிரேயர் 2:14-15)

இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில், அவர் எப்படி தீய ஆவிகளை மேற்கொண்டார் என்பதைப் பற்றி அனேக நிகழ்ச்சிகளை இன்ஜில்  பதிவு செய்துள்ளது. அவைகளிலிருந்து ஒரு நிகழ்ச்சியை இப்போது பார்ப்போம்.

 (இன்ஜில் - மாற்கு 5:1-20)

பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டில் வந்தார்கள். அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான்.   அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது. அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தும், சங்கிலிகளை முறித்து, விலங்குகளைத் தகர்த்துப்போடுவான்; அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது.   அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, கூக்குரலிட்டு, கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டிருந்தான்.  அவன் இயேசுவைத் தூரத்திலே கண்டபோது, ஓடிவந்து, அவரைப் பணிந்துகொண்டு:  இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்குத் தேவன்பேரில் உமக்கு ஆணையென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்.  ஏனெனில் அவர் அவனை நோக்கி: அசுத்த ஆவியே, இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று சொல்லியிருந்தார்.  

அப்பொழுது அவர் அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன் என்று சொல்லி,  தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்திவிடாதபடிக்கு அவரை மிகவும் வேண்டிக்கொண்டான்.   அப்பொழுது, அவ்விடத்தில் மலையருகே அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது.  அந்தப் பிசாசுகளெல்லாம் அவரை நோக்கி: பன்றிகளுக்குள்ளே போகும்படி, அவைகளுக்குள்ளே எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன. இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்த ஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக் கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்து மாண்டது.  பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு; இயேசுவினிடத்தில் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் வஸ்திரந்தரித்து, உட்கார்ந்து, புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.   பிசாசுகள் பிடித்திருந்தவனுக்கும் பன்றிகளுக்கும் சம்பவித்ததைக் கண்டவர்களும் அவர்களுக்கு விவரமாய்ச் சொன்னார்கள்.   அப்பொழுது தங்கள் எல்லைகளை விட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொள்ளத் தொடங்கினார்கள்.  

அப்படியே அவர் படவில் ஏறுகிறபொழுது, பிசாசு பிடித்திருந்தவன், அவரோடேகூட இருக்கும்படி தனக்கு உத்தரவுகொடுக்க அவரை வேண்டிக்கொண்டான். இயேசு அவனுக்கு உத்தரவுகொடாமல்: நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார்.  அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். 

ஆம், தீய சக்திகள் மீது இயேசுவிற்கு அதிகாரம் உள்ளது. இதுமட்டுமல்ல, எல்லா வகையான வல்லமைகள் மீதும் அவருக்கு அதிகாரம் உள்ளது, அதாவது சாத்தான் மீதும், வியாதிகள் மீதும், இயற்கை மீதும், மரணத்தின் மீதும் அவருக்கு அதிகாரம் உள்ளது, ஏனென்றால், இயேசு தான் பரலோகத்திலிருந்து நம்மிடத்தில் வந்த "ரூஹ் அல்லாஹ்" (தேவனின் ஆவி) மற்றும்"கலிமத் அல்லாஹ்" (தேவனின் வார்த்தை) ஆவார்.  அதனால் தான் இயேசு ஒரு வார்த்தை பேசியவுடன், அந்த பிசாசு பிடித்திருந்த மனிதனிடமிருந்து தீய ஆவிகள் வெளியேறின.  இன்று இயேசு பரலோகில் இருக்கிறார் அவருக்கு "பூமி மற்றும் வானத்தில் உள்ள அனைத்து அதிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது" (இன்ஜில் மத்தேயு 28:18).  

இவர் மீது நம்பிக்கை வைக்கும் எந்த மனிதனும், இனி எந்த ஒரு தீய ஆவிக்கும் பயப்படத்தேவையில்லை.  

தேவனுடைய அளவில்லாத அனைத்து வல்லமைகளும் இயேசுவிற்குள் வாசம் செய்கிறது.  ஆகையால், இயேசுக் கிறிஸ்துவை நீங்கள் விசுவாசித்து, அவரை உங்கள் சொந்த இரட்சகராகவும், தெய்வமாகவும் ஏற்றுக்கொண்டால், இனி நீங்கள் எதைப் பற்றியும் பயப்படத்தேவையில்லை, அதாவது மரணம், உவ்வுலக வாழ்க்கை, தீய ஆவிகள், பில்லிசூனியங்கள், நிகழ் கால வாழ்க்கை, எதிர் கால வாழ்க்கை என்று எவைகள் பற்றியும் பயப்படத் தேவையில்லை. இயேசு உங்களை பாதுகாக்கிறார் எனவே, நீங்கள் எந்த ஒரு தாயத்தையும் கட்டத்தேவையில்லை, இதர மந்திரவாதிகளை கண்டு அறிவுரை கேட்கத்தேவையில்லை. பரிசுத்த வேதம் இவ்விதமாக கூறுகிறது: 

ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது.  மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள். (இன்ஜில் - கொலொசியர் 2:9,10)

"In [Jesus] Christ all the fullness of the Deity lives in bodily form, and you have been given fullness in Christ, who is the head over every power and authority!" (Injil: Col. 2:9,10)

சாத்தான் மீது இயேசு வெற்றி பெற்றுள்ளார். மேலும் இயேசுவின் பெயரின் மூலமாக எல்லாவகையான தீய சக்திகளை மேற்கொள்ளலாம். இயேசுவின் பெயரில் வல்லமை உண்டு. அவரது பெயரில் உள்ள இந்த வல்லமையை நீங்கள் அனுபவிக்கவேண்டும் என விரும்பினால், முதலாவது நீங்கள் அவர் மீது நம்பிக்கை வைக்கவேண்டும், மேலும் அவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளவேண்டும்.

நாம் இயேசுவின் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இந்த இயேசு தான் "உலகத்தில் உள்ள அனைத்து அதிகாரங்களுக்கும் வல்லமைகளுக்கும் மேலானவர்". நாம் இப்படிப்பட்டவர் மீது நம்பிக்கை வைக்காமல் "இவ்வுலகத்தில் குறைவான அதிகாரமுடையவர்கள்" மீது நம்பிக்கை வைப்பதை தேவன் விரும்புவதில்லை. பரிபூரணமான இரட்சகராக இருக்கின்ற இயேசுவின் மீது நாம் விசுவாசம் வைக்கும் போது, நமக்கு பரிசுத்த ஆவியானவரின் உதவி கிடைக்கும் என்று தேவன் வாக்கு கொடுக்கிறார். இந்த இயேசு நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார், மேலும் மரணத்தின் மீது வெற்றி பெற்று மூன்றாம் நாளில் வெற்றிகரமாக உயிரோடு எழுந்தார். தங்கள் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவரை பெற்று இருக்கின்ற  சகோதர சகோதரிகள், தேவனின் கீழ்கண்ட  வாக்குறுதியை பெற்று அனுபவிப்பார்கள்: 

"ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும்(சாத்தான்) உங்களிலிருக்கிறவர்(பரிசுத்த ஆவியானவர்) பெரியவர்." (1 யோவான் 4:4)

ஆப்பிரிகாவில் எனக்கு அனேக நண்பர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கடந்த காலத்தில் எப்போது பார்த்தாலும் தீய சக்திகளுக்கும், ஜின்களுக்கும்,  பில்லிசூனியத்திற்கும் பயந்துக்கொண்டு வாழ்ந்தார்கள். ஆனால், இப்போது இவர்களுக்கு அந்த பயம் இல்லை, பயமில்லாத வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை தேவனுடைய வார்த்தை விடுதலை செய்துள்ளது. இவர்களின் சாட்சிகளை நீங்கள் அறிய விரும்பினால், எனக்கு தெரிவியுங்கள், நான் இவர்களிடம் கேட்டு, இவர்கள் எப்படி இயேசுவால் விடுதலை பெற்றார்கள் என்பதை எழுதச் சொல்லி உங்களுக்கு அனுப்புவேன்.

இப்படிக்கு, 

உங்கள் சகோதரன்

பிரஹிம் செனெ

ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Authors/Sene/blackmagic.html

பிரஹிம் செனெ அவர்களின் இதர கட்டுரைகள்