பி.ஜைனுல் ஆபிதீனும் பரிசுத்த ஆவியும் : ஈஸா குர்‍ஆன் பதில்

பாகம் 1

பிஜே அவர்கள் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தில், "இயேசு பரிசுத்த ஆவியினால் நிறைந்திருப்பதால் கடவுளாக முடியுமா? " என்ற தலைப்பில், கீழ் கண்ட விவரங்களை அல்லது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்: 

1. ஒருவர் பரிசுத்த ஆவியினால் நிறைந்திருப்பதால், கடவுள் ஆக முடியாது, ஏனென்றால், பலர் பைபிளின் படி பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கிறார்கள். 

2. இயேசுவுக்குள் இருந்த பரிசுத்த ஆவி, பல சந்தர்ப்பங்களில் அவரை விட்டு விலகியிருக்கிறது. 

3. இயேசு இறைவன் என்றால்? பின் ஏன் சோதிக்கப்பட்டார்? 

4. இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன் அவரிடம் பரிசுத்த ஆவி இருக்கவில்லை என்று தெரிகிறது. 

5. இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதா, மூன்று தடவை இயேசுவை மறுத்த பேதுரு ஆகியோரும் கூட பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்களா?

மூலம்:   www.onlinepj.com/book/mahana10.htm

நான் முதலில் மேலே உள்ள கேள்விகளுக்கு பதிலை கொடுத்துவிட்டு, பிறகு பிஜே அவர்கள் இத்தலைப்பில் எழுதிய மற்ற வரிகளுக்கு பதிலை இதே கட்டுரையின் கடைசியில் தருகிறேன்.

1. ஒருவர் பரிசுத்த ஆவியினால் நிறைந்திருப்பதால், கடவுள் ஆக முடியாது, ஏனென்றால், பலர் பைபிளின் படி பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கிறார்கள். 

பிஜே அவர்கள் இத்தலைப்பின் ஆரம்பத்தில் கீழ் கண்டவாறு எழுதுகிறார் : 

இயேசு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருதார் என்பதால் இயேசு கடவுளாகவும், கடவுளின் குமாரராகவும் கடவுளின் அம்சம் பெற்றவராகவும் ஆகிவிட்டார் என்பதும் கிறித்தவர்களின் வாதம் . 

இது பலவீனமான வாதம்: 

மதிப்பிற்குரிய பிஜே அவர்களே, நீங்கள் சொல்லும் இந்த வாதம் சரியான வாதம் கிடையாது. சில கிறிஸ்தவர்கள் அறியாமையினால் இந்த வாதத்தை உங்களுக்கு சொல்லியிருக்கலாம். ஆனால், உண்மையில் "இயேசு தேவகுமாரன்" என்பதற்கு இது சரியான வாதமாகாது. 

இதைப் பற்றி சரியான வாதம் இப்படி இருக்கும், அதாவது, "இயேசு பரிசுத்த ஆவியை உடையவராக இருப்பதால் மட்டும் தேவகுமாரன் அல்ல, இயேசு பரிசுத்த ஆவியினால் பிறந்ததால், தான் அவர் தேவகுமாரன். " [இயேசு தேவகுமாரன் என்பதற்கு இன்னும் அனேக ஆதாரங்கள் உண்டு, அவைகளைப் பற்றி தனி பதிலில் காணலாம்] 

பரிசுத்த ஆவியை பெற்ற பல நபர்களையும் வசனங்களையும் நீங்கள் பைபிளிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளீர்கள். உங்களால் முடிந்தால், இயேசு ("ஆண் பெண் இயற்கை உடலுறவு முறையில் இல்லாமல், பரிசுத்த ஆவியினால்") பிறந்தது போல இவ்வுலகத்தில் எத்தனை பேர் பிறந்துள்ளார்கள் என்று சொல்லமுடியுமா? 

ஆதாம் தாயுமில்லாமல், தந்தையுமில்லாமல் பிறந்தான் என்றுச் சொல்லவேண்டாம், ஏனென்றால், ஆதாம் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான், தேவனின் ஆவியிலிருந்து பிறக்கவில்லை. நான் கேட்பது, தாயுமில்லாமல் தந்தையுமில்லாமல் பிறப்பதைப் பற்றி இல்லை, தேவனுடைய ஆவியினால் உலக முறையின்படி அல்லாமல், பிறந்தவர் யார் ? 

நீங்கள் சொல்லும் வாதம் ஒரு சரியான வாதமாக இல்லை. ஒருவேளை இதை சில கிறிஸ்தவர்கள் தெரியாமல் சொல்லியிருந்தாலும் சரி. இதற்காக இயேசு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படவில்லை என்று நான் சொல்லவரவில்லை. பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவது, இயேசு தேவகுமாரன் என்பதை நிருபிக்கும் சரியான‌ அளவுகோள் இல்லை என்றுச் சொல்கிறேன்

இயேசு தேவகுமாரன் என்பதை முழுவதுமாக தெரிந்துக்கொள்ள, பிஜே அவர்களுக்கு நான் தரவிருக்கும் எல்லா பதில்களையும் படித்தால் தான் சரியாக புரியும் என்பது என் கருத்து. ஏனென்றால், இவர்(பிஜே அவர்கள்) பல விவரங்களை தனித்தனியாக பிரித்து இப்புத்தகத்தில்(அற்புதங்கள் செய்தால் கடவுள் ஆகமுடியுமா, தேவகுமாரன் என்று அழைக்கபட்டால் கடவுள் ஆகமுடியுமா, உயிர்த்தெழுந்தால் கடவுளா என்று தனித்தனியாக) எழுதியுள்ளார். எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால், தான் உண்மை விளங்கும், கர்த்தருக்கு சித்தமானால், எல்லா கேள்விகளுக்கும் பதில்களையும் பார்க்கலாம். 

2. இயேசுவுக்குள் இருந்த பரிசுத்த ஆவி, பல சந்தர்ப்பங்களில் அவரை விட்டு விலகியிருக்கிறது. 

பி.ஜே அவர்கள் எழுதுகிறார்: 

இயேசுவுக்குள் இருந்த பரிசுத்த ஆவி, பல சந்தர்பங்களில் அவரை விட்டு விலகியிருக்கிறது. பிசாசினால் அவர் சோதிக்கப்பட்டார். (ம‌த்தேயு 4:1-10) 

இந்த சந்தர்பங்களில் பரிசுத்த ஆவி அவரை விட்டு விலகி விட்டது என்று தெரிகின்றது.

அருமையான பிஜே அவர்களே, பரிசுத்த ஆவி இயேசுவை விட்டு விலகிவிட்டது என்று சொல்லும் ஒரு வசனத்தை உங்களால் காட்டமுடியுமா? 

"விலகியிருக்கலாம்" அல்லது "விலகிவிட்டு இருக்கும் என்று தெரிகின்றது " என்று உங்களால் கற்பனை செய்துக்கொண்டு சொல்லமுடியுமே தவிர, இதற்கு ஆதாரம் காட்டமுடியாது. 

ஆனால், இயேசு சோதிக்கப்படும் போது, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தார் என்று எங்களால் நிருப்பிக்க முடியும்.

2.1 ஞானஸ்நானமும் பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல் இறங்குவதும்: 

இயேசு ஞானஸ்நானம் பெற்று கரையேறும் போது, பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல அவர் மேல் இறங்கினார். தேவன், இயேசுவைப் பற்றிய சாட்சியை இங்கு எல்லாருக்கும் முன்பாக தெரிவிக்கிறார். 

லூக்கா 3: 21. ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது;22. பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார் . வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி, நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது . 

மேலே பார்த்த வசனத்தின் படி, இயேசு சோதிக்கப்பட போவதற்கு முன்பு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தார் என்பதை அறிந்துக்கொள்ளலாம். 

2.2 இயேசு சோதிக்கப்பட பரிசுத்த ஆவியானவரே அழைத்துச் செல்கிறார்: 

இங்கு பிஜே அவர்கள் பார்க்க தவறிய ஒரு வசனத்தைப் பற்றி சொல்லியாகவேண்டும். அதாவது, இயேசு சோதிக்கப்பட்டார் என்ற வசனத்தை பார்த்த பிஜே அவர்களுக்கு ஏன் இதற்கு முன் உள்ள வசனம் தெரியாமல் போனது என்று சந்தேகமாக உள்ளது. 

மத்தேயு: 4:1. அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்

மாற்கு: 1:12. உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார்

லூக்கா 4:1. இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானைவிட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டு,

இயேசு சோதிக்கப்பட்டதைப் பற்றி மூன்று சுவிசேஷங்கள் சொல்கின்றன, இந்த மூன்று நற்செய்தி நூல்களிலும், இயேசு ஆவியானவரினால் தான் சோதிக்கப்பட அழைத்து செல்லப்பட்டார் அல்லது ஆவியானவரின் ஏவுதலினால் இயேசு சென்றார் என்று மிகவும் தெளிவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதை பிஜே அவர்கள் பார்க்கவில்லையோ? மட்டுமல்ல, பிஜே அவர்கள் மேற்கோள் காட்டிய‌ மத்தேயு அதிகாரம் 4 வசனங்கள் 1- 10 வரையுள்ள வசனங்களை படித்திருந்தாலே போதுமே, இயேசுவோடு அல்லது இயேசுவை வனாந்திரத்திற்கு அழைத்துச் சென்றது ஆவியானவர் என்று தெளிவாக புரிந்துவிடும். நீர் மேற்கோள் காட்டிய வசனங்களை நிதானமாக நீர் படித்திருந்தாலே போதும், உங்களுக்கு புரிந்திருக்கும்

ஒருவேளை பிஜே அவர்கள் "நாம் நம் பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது, பள்ளிக்கூட வாசல் வரை சென்றுவிட்டு, அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு, டா டா சொல்லி, திரும்பி வீட்டிற்கு வந்துவிடுகிறோமே, அப்படி, ஆவியானவரும் வானாந்திரம் வரை இயேசுவை விட்டுவிட்டு, திரும்பி வந்துவிட்டார் என்று நினைத்தாரோ? பிஜே அவர்கள் தவறாக புரிந்துக்கொண்டு இருக்கிறார்கள் அல்லது இந்த வசனத்தை காண தவறிவிட்டார்கள். 

பிஜே அவர்கள் சொல்வது போல, இயேசுவை விட்டு பரிசுத்த ஆவியானவர் விலகிவிடவில்லை, விலகவேண்டிய அவசியமுமில்லை. ஏனென்றால், இயேசுவைப் பற்றி யோவான் ஸ்நானகன் என்ன சொல்கிறார் என்று பாருங்கள். இயேசு பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர் என்றுச் சொல்கிறார். 

யோவான்: 1:33. நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்; ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ , அவரே பரிசுத்தஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவரென்று எனக்குச் சொல்லியிருந்தார். 34. அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன்என்றான். 

இயேசுவிற்கு தேவன் அளவில்லாமல் ஆவியானவரை கொடுத்துள்ளதாக யோவானே சொல்லியுள்ளார்[1]. தன் சிடர்களுக்கும் ஆவியானவரை கொடுப்பதாக இயேசு சொன்னார். அவர்களோடு எப்போதும் ஆவியானவர் இருப்பதாக இயேசு சொன்னார். 

யோவான் 3:34 தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார், தேவன் அவருக்குத் தமதுஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். 

யோவான்: 15:26. பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக் குறித்துச்சாட்சிகொடுப்பார் . 

2.3 சோதிக்கப்பட்ட பின்பு, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடு திரும்பி வருதல்: 

சோதிக்கப்பட போகும் பொது மட்டுமல்ல , திரும்பி வரும்போதும் இயேசு பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நிறைந்தவராக வந்தார் என்று வசனம் சொல்கிறது. 

லூக்கா 4:14. பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று. 

Luke 4:14 Jesus returned to Galilee in the power of the Spirit, and news about him spread through the whole countryside

www.biblegateway.com/passage/;

இயேசுவை விட்டு ஆவியானவர் விலகியிருந்தால், சோதிக்கப்பட்ட பின்பு இயேசு பலவீனமாக அல்லவா இருந்திருப்பார், ஆனால், வசனம் சொல்கிறது, அவர் ஆவியானவரின் பலத்தினால் திரும்பிவந்தார் .  

2.4 "சோதிக்கப்படுதல்" என்பதை தவறாக புரிந்துக்கொண்ட பிஜே அவர்கள்:

ஏன் பிஜே அவர்கள் பரிசுத்த ஆவியானவர் இயேசுவை விட்டு விலகிவிட்டார் என்று கருதுகிறார்? பைபிளில் சொல்லப்படாத விவரம் உள்ளது போல ஏன் இவர் கருதுகிறார்? என்று சிந்திக்கும் போது, ஒரு விவரம் தெரியவருகிறது. 

அதாவது, "ஒருவர் சோதிக்கப்படுகிறார்" என்றுச் சொன்னால், அவரை விட்டு பரிசுத்த ஆவியானவர் விலகிவிட்டார் என்று பிஜே அவர்கள் நினைக்கிறார். வேறு வகையில் சொல்லவேண்டுமானால், "நாம் சோதிக்கப்படுகிறோம்" என்றுச் சொன்னால், நம்மை விட்டு ஆவியானவர் விலகிவிட்டார் என்று பொருள் என்று பிஜே அவர்கள் சொல்கிறார். 

இது தவறான கருத்தாகும். எப்படி என்று புரிந்துக்கொள்ள மேற்கொண்டு படியுங்கள். 

2.4.1 சோதிக்கப்படுதல் பாவமில்லை, சோதனையில் தோல்வியடைதல் தான் பாவம்: 

பிஜே அவர்கள் கருத்துப்படி, "ஒருவர் சோதிக்கப்பட்டார்" என்று வைத்துக்கொண்டால், அவரை தீமையிலிருந்து காப்பாற்றும் சக்தி ( கிறிஸ்தவத்தை பொருத்தவரையில் பரிசுத்த ஆவியானவர்) அவரை விட்டு விலகிவிட்டது, அதனால், தான் தீமையினால்(பிசாசினால்) அவர் சோதிக்கப்படுகிறார் என்றுச் சொல்கிறார். 

இதை மனதில் வைத்துக்கொண்டு தான் இயேசுவை விட்டு பரிசுத்த ஆவியானவர் விலகியிருக்கிறார் என்றுச் சொல்கிறார். ஆனால், அப்படி விலகவில்லை என்பதை மேலேயே நான் விளக்கிவிட்டேன். இருந்தாலும், இவரது மனதில் உள்ளதையும், இவரது அறியாமையையும் இங்கு பரிசீலிக்கலாம்

ஒரு மனிதன் சோதிக்கப்பட்டால் - அவன் பாவம் செய்ததாக அர்த்தம் அல்ல, ஆவியானவர் அவரைவிட்டு விலகிவிட்டார் என்று அர்த்தமல்ல . 

ஆனால், ஒரு மனிதன் சோதிக்கப்படும் போது, அதில் விழுந்துவிட்டால், அதாவது தோல்வியடைந்து விட்டால் தான் அது பாவமாக கருதப்படும், இந்த நேரத்திலும் ஆவியானவர் அவனை விட்டு விலகமாட்டார். எப்படி என்பதை கீழே உள்ள உதாரணத்தை படிக்கவும் . 

உதாரணம்: 

ஒரு மனிதன் இயேசுவை தன் உள்ளத்தில் தெய்வம் என்று நம்பி ஏற்றுக்கொள்கிறான் என்று வைத்துக்கொள்வோம் (இதையே இரட்சிக்கபடுதல் என்று கிறிஸ்தவர்கள் சொல்கிறார்கள்). 

ஒரு மனிதன், இயேசுவை தன் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளும் போது, அவனது உள்ளத்தில் ஆவியானவர் வந்து விடுகிறார். அவன் இனி நான் தவறுகள் செய்யமாட்டேன், என்று முடிவு செய்கிறான் (கவனிக்கவும் முடிவு மட்டும் செய்கிறான், ஆனால், மரணம் வரை அவன் அப்படி வாழவேண்டும் என்பது தான் முக்கியம்). அவன் பரிசுத்தமாக வாழ்வதற்கு, வாராவாரம் சபையில் அவன் கேட்கும் போதனைகளும், அவன் அனுதின பைபிள் வாசிப்பும், பரிசுத்த ஆவியின் எச்சரிப்பும், அவன் ஜெபமும், அவன் குடும்ப நபர்களின் உட்சாகமும் அவனுக்கு உதவி செய்கின்றன. 

இவன் ஒரு அரசு ஊழியர் என்று வைத்துக்கொள்வோம், இவன் யாரிடமும் இலஞ்சம் வாங்குவதில்லை என்று முடிவும் செய்துள்ளான். 

ஒரு நாள், இவன் இலஞ்சம் வாங்குவதற்கு ஏற்ற சூழல் ஏற்படுகிறது, அதாவது, ஒரு பெரிய பணக்கார மனிதர் இவரிடம் வந்து, இவர் செய்யவேண்டிய வேலையை சீக்கிரமாக செய்தால், பல ஆயிரம் பணமும் தருவதாகச் சொல்கிறார். அதாவது, தன் கடமையை சீக்கிரமாக செய்தாலே பணம் தருவதாகச் சொல்கிறார். இந்த பணத்தை வாங்கிக்கொண்டு, இவர் மற்ற வேலையை பக்கத்தில் வைத்துவிட்டு, இந்த பணக்கார மனிதனுடைய வேலையை செய்துத் தரலாம். இதனால், ஒன்றும் பிரச்சனை இல்லை, இவர் மாட்டிக்கொள்ள வாய்ப்பும் இல்லை. இது ஒரு அருமையான வாய்ப்பு, அதாவது, பல ஆயிரங்கள் ஒரு நாளில் சம்பாதிப்பதற்கு. 

இதைத் தான் நான் சோதனை என்றுச் சொல்வேன். இந்த மனிதனுக்கு சோதனை வந்தது, இது பாவமில்லை. இப்போது பரிசுத்த ஆவியானவர் இவரை விட்டு விலகவேண்டிய அவசியமுமில்லை, காரணம் சோதிக்கபடுவது பாவமல்ல். மனிதனாக பிறந்த எல்லாரும் சோதிக்கபடுகிறார்கள், அதாவது பரிட்சை எழுதுகிறார்கள். யாரொ ஒருவன் வந்து நாம் தவறு செய்ய நம்மை தூண்டுவான், அதற்கு நாம் காரணம் ஆகமுடியாது. இதனால் பரிசுத்த ஆவியானவரும் நம்மைவிட்டு விலகவேண்டிய அவசியமுமில்லை. இந்த சோதனையில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதை பொருத்து தான் ஆவியானவரின் செயல்பாடும் இருக்கும். 

இந்த உதாரணத்தில், இவன் வீட்டிற்குச் செல்கிறான், சிந்திக்கிறான், ஆவியானவர் மனசாட்சியோடு பேசுகிறார், நீ பணம் வாங்காதே, உன் கடமையை மட்டும் சரியாகச் செய் என்கிறார். பல பைபிள் வசனங்கள் மனதிலே வந்துச் செல்கிறது, தன் போதகர் சொன்ன அறிவுரைகள் மனதில் வந்துச் செல்கிறது. 

பதில்: 1 

மறு நாள், அலுவலகம் செல்கிறான், அந்த நபருக்குச் சொல்கிறான், உங்கள் பணம் எனக்கு வேண்டாம், ஆனால், என் கடமையைச் செய்ய எனக்கு சட்டப்படி இத்தனை நாட்கள் ஆகும், அது வரை நீங்கள் காத்திருக்கவேண்டும், இத்தனை நாட்கள் கழித்து வாருங்கள், உங்கள் வேலை முடிந்திருக்கும், என்றுச் சொல்கிறான் என்று நினைத்துக்கொள்ளுங்கள். 

இவன் சோதிக்கப்பட்டான், ஆனால், அதில் ஜெயித்தான், பரிட்சை எழுதினான் ஆனால், வெற்றிப்பெற்றான். 

எனவே, என்னை பொருந்தவரையில், சோதிக்கபடுவது ஒரு பாவமில்லை, அதில் தோல்வி அடைதல் தான் பாவம் . இந்த எடுத்துக்காட்டில், இவனது இந்த செயலால், இவனுள் இருக்கும் ஆவியானவர், "சபாஷ் என் மகன் வெற்றிப் பெற்றான் " என்றுச் சொல்லி சந்தோஷப்படுவார். 

அல்லது 

பதில்: 2 

ஒருவேளை மறுநாள் சென்று, அந்த மனிதரிடம் பணம் பெற்றுக்கொண்டு,மற்ற நியாயமான வேலையை பக்கத்தில் வைத்து, இவரது வேலையை முடித்துக்கொடுக்கிறார் என்று நினைத்துக்கொள்ளுங்கள். 

இப்போது இந்த மனிதன் சோதிக்கப்பட்டான், அப்போது இவன் தவறு செய்தனாக கருதக்கூடாது, ஆனால், சோதனையில் விழுந்துவிட்டான், அதாவது தோல்வியடைந்தான், இது தான் பாவம். ஆவியானவர் துக்கமடைவார் . 

இப்போது இவனை விட்டு ஆவியானவர் விலகுவாரா என்றால், இப்போதும் இல்லை. அதாவது நான் புரிந்துக்கொண்ட கிறிஸ்தவ கோட்பாடுகளின் படி: 

இவன் செய்த குற்றத்தை நியாபகத்தில் கொண்டு வந்து ஆவியானவர் இவனை கடிந்துக்கொள்வார், மனசாட்சி இவனை குத்தும், சரியாக வேதம் வாசிக்கமுடியாது, மனசாட்சி சொல்லிக்கொண்டே இருக்கும், நீ ஒரு தவறு செய்தாய் என்று... இது எத்தனை நாட்கள் தொடரும் என்றால், ஒன்று இவன் மறுபடியும் மனம் திரும்பும் வரையில் தொடரும். இவன் திருந்திவிட்டால், பிறகு பரிசுத்தமாக வாழ்ந்தால், இப்படிப் பட்ட தவறுகள் மறுபடியும் செய்யாமல் இருந்தால், ஆவியானவர் இவனை விட்டு விலகமாட்டார். 

ஆனால், ஆவியானவர் சொல்வதையும், மனசாட்சியில் குத்தப்படுகிறதையும் பொருட்படுத்தாமல், இவன் இதை ஒரு வாடிக்கையாகக் கொண்டு மறுபடியும் செய்துக்கொண்டே இருந்தால், அப்போது ஆவியானவர் தானாகவே இவனை விட்டு விலகிவிடுவார், அதாவது, இவன் மனசாட்சி செத்துப்போகும். இனி எந்த பயமுமில்லாமல் குற்றங்கள் தவறுகள் செய்துக்கொண்டு இருப்பான். 

எனவே, ஆவியானவர் எப்போது ஒரு மனிதனை விட்டு விலகுவார் என்றால், அடிக்கடி கடிந்துக்கொள்ளப் பட்டும், தன்னை திருத்திக்கொள்ளாமல் தன் மனதை கடினப்படுத்துகிறவனை விட்டு ஆவியானவர் விட்டுவிலகுவார் , இதையே கிறிஸ்தவ முறையில், பின்மாற்றமடைதல் என்றுச் சொல்வார்கள். 

எபிரெயர்: 6: 4. ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,5. தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,6. மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.7. எப்படியெனில, தன்மேல் அடிக்கடிபெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.8. முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு .

முஸ்லீம்கள் கேட்கலாம், ஆவியானவர் ஒரு இரட்சிக்கப்பட்டவனின் உள்ளத்தில் வந்தால், ஏன் அவனை பாவம் செய்யாமல் தடுக்கமுடியவில்லை? 

கிறிஸ்தவத்தைப் பற்றி ஒன்றை எல்லாரும் சரியாக புரிந்துக்கொள்ளவேண்டும், அது என்னவென்றால், தேவன் மனிதனுக்கு சுயமாக சிந்திக்கும், முடிவு எடுக்கும்( Free Will) திறமையை கொடுத்துள்ளார்.  எதையும் கட்டாயப்படுத்தமாட்டார், நல்ல வழி எது தீய வழி எது என்றுச் சொல்வார்,  தவறாக நடந்துக்கொண்டால், என்ன தண்டனை கிடைக்கும் என்றுச் சொல்வார், ஆனால், முடிவு எடுக்கும் உரிமையை மட்டும் அவனிடமே விட்டு விடுவார். 

எனவே, நாம் எடுக்கும் முடிவுகளின் படித்தான் நம் வாழ்க்கை அமையும். இயேசு கதவுக்கு வெளியே நிற்பார், தட்டுவார், தான் யார் என்றுச் சொல்வார், அதைக் கேட்டு கதவை திறந்தால், நம் உள்ளத்திலே வருவார். ஆனால், நாம் கதவை திறக்கவில்லையென்று கதவை உடைத்துக்கொண்டு உள்ளே கட்டாயத்தின் பேரில் வரமாட்டார். 

[இந்த விசயத்தில் இஸ்லாம் வேறுபடுகிறது, ஒருவன் முஸ்லீமாக மாறிய பிறகு, அதிலிருந்து வெளியே வருவேன் என்றுச் சொன்னால், அவனுக்கு மரண தண்டனை என்று இஸ்லாம் சொல்கிறது. அதனால், உயிருக்கு பயந்து இஸ்லாமிலேயே இருந்துவிடுகிறான், அதனால் என்ன பிரயோஜனம்? நாளைக்கு மரணம் வந்தபிறகு, அல்லா இவனைப் பார்த்து, என் ஊழியனே, உனக்காக சொர்க்கம் தயாராக உள்ளது என்றுச் சொன்னால், இவன் சிரிப்பான், உயிருக்கு பயந்து நான் இஸ்லாமியே இருந்தேன், உம்மில் பக்தியுள்ளவனாக நான் இத்தனை நாட்கள் வாழவில்லை என்றுச் சொல்வான். 

இப்போது முஸ்லீம்கள் சொல்வீர்கள், இப்படிப் பட்டவனுக்கு அல்லா சொர்க்கம் கொடுக்கமாட்டார் என்று, அப்படியானால், ஏன் அவனை இத்தனை ஆண்டுகள் இஸ்லாமில் நம்பிக்கை இல்லையானாலும், பயப்படவைத்து இஸ்லாமியே இருக்கச்செய்தீர்கள். அவன் இஸ்லாமை விட்டு வெளியே போகும் போது அனுப்பியிருந்தால், குறைந்த பட்சம், இந்த உலகத்திலாவது அவன் சந்தோஷமாக தான் நம்பும் நம்பிக்கைப்படி (இந்துவாகவோ, கிறிஸ்துவனாகவோ, நாத்தீகனாகவோ..) வாழ்ந்து இருப்பான் அல்லவா..? நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இஸ்லாம் போல கிறிஸ்தவத்தில் கட்டாயம் இல்லை என்பதை சொல்லவருகிறேன். இதைப் பற்றி இன்னும் அதிகமாக தனி கட்டுரையில் சிந்திக்கலாம் ] 

எனவே, சோதிக்கப்படுவது பாவமில்லை, ஆவியானவர் பிசாசினால் சோதிக்கபடுகின்ற மனிதனை விட்டு போகவும் மாட்டார், சோதிக்கப்படும்போது தோல்வி அடைந்தால் தான் தவறாகும். பரிட்சை எழுதினால் தானே, நம் திறமை வெளிப்படும். 

நம் திறமையை, பரிசுத்தத்தை, இறைவன் மீது நாம் வைத்துள்ள திடமான நம்பிக்கையை வெளிக்காட்ட நமக்கு வரும் சந்தர்ப்பம் தான் சோதிக்கப்படுவது என்பது . 

[எகிப்திலே யோசேப்பிற்கு போத்திபாரின் மனைவி மூலம் சோதனை வந்ததால் தான், யோசேப்பு எப்படி தன் பரிசுத்தத்தை காத்துக்கொள்ள முயற்சி எடுத்தான் என்று நமக்கு தெரியவந்தது, அதுபோல] 

இதை பிஜே அவர்கள் தவறாக புரிந்துக்கொண்டு இயேசுவை விட்டு ஆவியானவ‌ர் விலகிவிட்டார் என்று நினைத்துக்கொண்டார். 

கிறிஸ்தவ கோட்பாடுகளின்படி அல்ல, பொதுவாகவே, நாம் சோதிக்கப்படுவது தவறில்லை, ஆனால், ஜாக்கிரதையாக இருந்து அதில் வெற்றி பெற முயலவேண்டும். இது இஸ்லாமுக்கும் பொருந்தும், ஒரு முஸ்லீம் சோதிக்கபடுவது பாவமில்லை, அவன் அதில் விழுந்துவிட்டால் தான் அது பாவம் என்று நான் நினைக்கிறேன். 

ஒரு முஸ்லீம் வியாபாரம் செய்யும் போது, மற்றவர்களை ஏமாற்ற கிடைக்கும் வாய்ப்புக்கள் அது அவனுக்கு சோதனை தான், ஒரு நல்ல மாணவனுக்கு பரிட்சை எழுதும் போது, தனக்கு தெரியாத கேள்வியின் பதிலை மற்றவனை பார்த்து எழுத கிடைக்கும் வாய்ப்பு ஒரு சோதனை தான், தவறான வழியில் சம்பாதிக்க ஒரு முஸ்லீமுக்கு கிடைக்கும் வாய்ப்பு ஒரு சோதனை தான், ஆனால், இதில் வெற்றிப்பெற்றால், அது பாவமாகாது, அவனைப் பற்றி இறைவன் சந்தோஷப்படுவார். 

எனவே, பிஜே அவர்களே, ஆவியானவர் விலகிவிட்டார் எனவே, இயேசு சோதிக்கப்பட்டார் என்ற தோரனையில் நீங்கள் எழுதியது, ஒரு மிகப்பெரிய தவறான புரிந்துக்கொள்ளுதலாகும். ஆவியானவர் நம்முடனே இருக்கும் போது தான் நாம் சோதிக்கப்படுகிறோம், தோல்வியோ வெற்றியோ பெருகிறோம். அதன் பிறகு தான் நம்மோடு ஆவியானவர் இருக்கமுடியுமா? இல்லையா? என்பது நிர்ணயிக்கப்படும் .

3. இயேசு இறைவன் என்றால், பின் ஏன் சோதிக்கப்பட்டார்? 

பிஜே அவர்கள் எழுதியது: 

இன்னும் சொல்வதென்றால் பரிசுத்த‌ ஆவியினால் நிரம்பிய மற்றவர்களைக் கடவுள் என்று கூறினால் கூட இயேசுவைக் கடவுள் என்று கூற முடியாது. அதற்கு பைபிளிலேயே ஆதாரம் கிடைக்கின்றது. 

சோதிக்கப்படுகிற எவனும் நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக. (யாக்கோபு 1:13) 

கடவுள் என்பவர் தீமைகளால் சோதிக்கப்பட முடியாது என்பதை இவ்வசனம் அழுத்தமாகக் கூறுகின்றது. 

ஆனால் இயேசுவோ பலமுறை பிசாசினால் - தீமைகளால் சோதிக்கப்பட்டதாகவும் பைபிள் கூறுகிறது. (மத்தேயு 4:1-10) 

இயேசுவிடம் பரிசுத்த‌ ஆவி நிரம்பி வழிந்தாலும் அவர் பிசாசினால் சோதிக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு சோதிக்கப்பட்டவர் கடவுளாக இருக்க முடியாது எனும் போது இயேசுவைக் கடவுளாக ஏற்பதில் கடுகளவாவது நியாயம் இருக்கிறதா என்று சிந்தித்துப் பாருங்கள்! 

பிஜே அவர்களே, நீங்கள் மேற்கோள் காட்டிய வசனத்தின் (யாக்கோபு: 1:13 ) ஒரு பகுதியை மட்டுமே காட்டியுள்ளீர்கள், உங்களுக்கு பதில் அளிப்பதற்காக, முழு வசனத்தையும் நான் பதிக்கிறேன். 

யாக்கோபு: 1:13. சோதிக்கப்டுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல , ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. 

James 1:13 (NIV) When tempted, no one should say, "God is tempting me." For God cannot be tempted by evil, nor does he tempt anyone;

இந்த வசனத்தில் இரண்டு விவரங்கள் அடங்கியுள்ளன.

1. ஒருவன் சோதிக்கப்பட்டால், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்றுச் சொல்லக்கூடாது, ஏனென்றால், தேவன் எவனையும் சோதிப்பதில்லை. 

2. தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவருமல்ல ( God cannot be tempted by evil ). "கடவுள் தீமைகளால் சோதிக்கப்படமுடியாது" என்று நீர் சொல்வதற்கு பதில் இங்கு சொல்கிறேன்.

முதலாவதாக:

1. ஒருவன் சோதிக்கப்பட்டால், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்றுச் சொல்லக்கூடாது, ஏனென்றால், தேவன் எவனையும் சோதிப்பதில்லை. 

பிசாசு சோதிப்பதற்கும், தேவன் சோதிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. தேவன் சோதித்தார்(Tempted) என்றுச் சொல்வதை விட "பரிட்சை வைத்தார்(Tested)" என்றுச் சொல்லலாம்.

ஒருவனை பிசாசு(இப்லீஷ்) சோதித்தால், அம்மனிதன் இறைவனுடைய கட்டளைகளை மீறக்கூடிய விதத்தில் அவன் சோதனை இருக்கும். 

உதாரணத்திற்கு: 

திருடக்கூடாது, கொலை செய்யக்கூடாது என்பது இறைவனின் கட்டளை. ஆனால், பிசாசின் சோதனை எப்படி இருக்கும் என்றால், இறைவன் விதித்த இப்படிப்பட்ட கட்டளைகளை மனிதன் மீறும் வகையில் இருக்கும். மனிதர்களை திருடவோ, கொலை செய்யவோ, ஏமாற்றவோ செய்யும் படி பிசாசு சோதிப்பான். 

ஆனால், எந்த காலத்திலும் இறைவன், தான் விதித்த கட்டளைகளை மனிதர்களே மீறும்படி சோதிக்கமாட்டார். உதாரணத்திற்கு, மேலே சொன்னது போல, ஒரு மனிதன் இன்னொருவனை ஏமாற்றும்படியோ, கொலை செய்யும்படியோ ஒரு சோதனையை இறைவன் மனிதனுக்கு தரமாட்டார். 

அப்படி ஒரு மனிதன் இவ்விதமான சோதனையில் (இறைவன் விதித்த கட்டளைகளை மீறும்படியாக சூழ்நிலையில்) இருந்தால், அவன் "நான் இறைவனால் சோதிக்கப்படுகிறேன்" என்றுச் சொல்லக்கூடாது என்று தான் யாக்கோபு 1:13ம் வசனம் சொல்கிறது. ஏனென்றால், இறைவனே நல்ல கட்டளைகளை கொடுத்துவிட்டு, அதை மனிதன் மீறும் படி அவரே சோதனையை கொடுக்கமாட்டார் என்பதால். 

குர்‍ஆனிலும் பல இடங்களில் அல்லா மனிதர்களை சோதித்ததாக பல வசனங்கள் (7:49, 21:35, 29:2 89:15) வருகின்றன, இவைகள் அனைத்தும், அல்லா அம்மனிதர்களை நல்வழிப்படுத்தவே சோதிக்கிறார் என்று நான் நினைக்கிறேன். இந்த சோதனை அம்மனிதர்களை பாவம் செய்ய தூண்டக்கூடியதாக இருக்காது என்று நான் நினைக்கிறேன். 

எனவே, ஒரு மனிதன் தவறு செய்யப்படும் படி சோதிக்கப்பட்டால், தேவன் தான் என்னை சோதித்தார் என்று கூறக்கூடாது என்று இவ்வசனம் கூறுகிறது. 

2. தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவருமல்ல (God cannot be tempted by evil). 

இந்த வார்த்தைகள் தான் உங்களுடைய கேள்விக்கு காரணம். அதாவது, இறைவன் என்பவன் தீமைகளால் சோதிக்கப்படமுடியாது என்று பைபிள் சொல்கிறது, ஆனால், இயேசு பிசாசினால் சோதிக்கப்பட்டார்? அப்படியானால், இயேசு எப்படி இறைவன் ஆகமுடியும்? 

இவ்வசனத்தை நீர் தவறாக புரிந்துக்கொண்டு இருக்கிறீர்கள், அதாவது, இறைவன் பிசாசினால் சோதிக்கப்படமுடியாது என்றுச் சொல்லவில்லை, அதற்கு பதிலாக, இறைவனை  பிசாசு தீமை செய்யும் படி, தீமைகளின் ஆசையைக் காட்டி சோதனைக்கு உட்படுத்தமுடியாது என்பது இவ்வசனத்தின் பொருள் . 

வேறு வகையில் விவரிக்கிறேன், இறைவனை நாம் சோதிக்கலாம், பிசாசும் சோதிக்கலாம், ஆனால், அவர் நம் சோதனைக்கோ, பிசாசின் சோதனைக்கோ உட்படமாட்டார் என்பதாகும் .

உதாரணத்திற்கு, பிசாசு அல்லாவை கிழ் கண்ட கேள்விகள் மூலம் சோதிக்கிறான் என்று நினைத்துக்கொள்ளுங்கள்:

பிசாசு: அல்லாவே, உமக்கு நான் இந்த உலகமனைத்தையும் கொடுக்கிறேன், என் கால்களில் விழுந்து வணங்கு? 

அல்லா: போடா முட்டாள், இந்த உலகம் அனைத்தும் எனக்கு சொந்தம் எனக்கு எதை கொடுத்து உன்னால், சோதிக்கமுடியும்?  

குறிப்பு: பிசாசு சோதித்தான், ஆனால், அல்லா உட்படவில்லை. சோதனையில் ஜெயித்தார். 

பிசாசு: அல்லாவே, எனக்கு முன்பாக நீர் வணங்கினால், நான் உனக்கு அழகான உலக அழகியை தருவேன். 

அல்லா: போடா பையித்தியக்காரா. நான் பெண் ஆசைகளுக்கு அப்பாற்பட்டவனடா, எனக்கு ஒன்று வேண்டும் என்றால், என்னால் அதை உருவாக்கிக்கொள்ள முடியும். உன்னிடம் நான் கேட்கமாட்டேன். அவ்வளவு ஏன், என் தாசர்கள் என்னிடம் வந்தால், அவர்களுக்கு அனேக பெண்களை கொடுப்பதற்க்கு நான் நிறைய பெண்களை தயாராக வைத்துள்ளேன். 

குறிப்பு: இந்த உதாரணத்திலும் அல்லாவை பிசாசு சோதித்தான், ஆனால், அவர் உட்படமாட்டார்.

ஆக, அல்லாவை பிசாசு சோதிக்கலாம், ஆனால், ஒன்றை மறந்துவிடக்கூடாது, அதாவது, எதை கொடுத்து இறைவனை பிசாசு சோதிக்கமுடியும்? 

ஒரு மனிதனை சோதிக்கவேண்டுமானால், அம்மனிதனிடம் இல்லாத ஒரு பொருளின் ஆசைக்காட்டி பிசாசு சோதிப்பான். ஆனால், இறைவனிடம் இல்லாத பொருள் என்ன இருக்கப்போகிறது சொல்லுங்கள்? 

ஒரு தளத்தில் கீழ் கண்டவாறு இதே கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டிருந்தது:

Q: In Jms 1:13, can God be tempted, since Ex 17:7; Num 14:22; Dt 6:16; and Ps 78:18,41,56; 95:6; 106:14 say people tempted God? 

A: People in the Exodus and today can try to tempt God, if they wish, but God cannot be tempted. What are you going to give Him to tempt the Almighty? How are you going to fool the All-Knowing?

Source :http://www.biblequery.com/jms.htm

எனவே, இன்று நானும் அல்லாவை சோதிக்க முடியும்? ஆனால் எதை கொடுத்து அவரை நான் சோதிப்பது அது தான் கேள்வி? பிசாசும் அல்லாவை சோதிக்க முடியும். ஆனால், அவரிடம் இல்லாத ஒன்றை கொடுத்தல்லவா சோதிக்கமுடியும்? எனவே, அல்லாவும் சோதிக்கப்படுவார்? ஆனால், அவர் சோதனைக்குட்படமாட்டார்? 

இதே போலத் தான் பிசாசும் இயேசுவை சோதித்தான், ஆனால், இயேசு சோதனைக்குட்படவில்லை? அதாவது சோதனையில் ஜெயித்தார். 

உலக இராஜ்ஜியம் அனைத்தும் உனக்கு தருகிறேன், என்னை வணங்கு என்றுச் சொல்லி பிசாசு சோதிக்கிறான், உலகம் அனைத்தும் தன்னுடையது என்று இயேசுவிற்குத் தெரியும், இயேசுவுக்கு சொந்தமானதை எடுத்து யார் அதை அவருக்கு தரமுடியும்? எனவே, தான் இயேசு தன் பதிலை பைபிள் வசனங்களாக கொடுத்தார். 

எனவே, இறைவன் என்றால் யாரும் சோதிக்க முயலமாட்டார்கள் என்று பொருள் அல்ல? ஆனால், இறைவன் அச்சோதனையில் தொல்வியை அடையமாட்டார் என்பது தான் உண்மை .  

இதைத் தான் "பொல்லாங்கினால் தேவன் சோதிக்கப்படுகிறவர் இல்லை " என்று வசனம் சொல்கிறது. இதன் பொருள், பிசாசினால் அல்லது மனிதனால் இறைவன் சோதிக்கப்பட மாட்டார் எனபதல்ல, சோதிக்கபடுவார் ஆனால், சோதனைக்குட்படமாட்டார் என்று பொருள். 

இதே போலத்தான் பிசாசு இயேசுவை சொதித்தான், ஆனால், அவன் சோதனையில் அவர் விழவில்லை, தோல்வி அடையவில்லை, அவன் சோதனைக்கு உட்படவில்லை. இது தான் வெற்றி. 

சோதிக்கப்படுவது பாவமில்லை, ஆனால், சோதனையில் விழுந்துவிடுவது, தோல்வி அடைவது தான் பாவம். இறைவன் என்பவர் தொல்வி அடையாதவர், பாவம் செய்யாதவர், இயேசுவும் பாவம் செய்யவில்லை. ஆனால், முகமது பாவம் செய்ததாகவும், அல்லா மன்னித்ததாகவும் குர்‍ஆன் வசனங்கள் உண்டு. எனவே, இயேசு தான் இறைவன், உங்கள் அனைத்து வாதங்களும் வெறும் கற்பனையில் உதித்தவையே.

4. இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன் அவரிடம் பரிசுத்த ஆவி இருக்கவில்லை என்று தெரிகிறது. 

பிஜே அவர்கள் எவ்வளவு புத்திசாலித்தனமாக எழுதுகிறார் என்றுப் பாருங்கள். அதாவது, " தெரிகின்றது " என்ற வார்த்தையை பயன்படுத்தி சந்தேகம் என்னும் விதையை கிறிஸ்தவர்களின் மனதில் விதைக்க முயலுகிறார். [ஏதோன் தோட்டத்தில் சாத்தான் (இப்லீஷ்) "தேவன் ஏதாவது ஒரு மரத்தின் கனியை சாப்பிடக்கூடாது? என்றுச் சொன்னாரா?" என்று ஏவாளின் மனதில் சந்தேகத்தின் விதையை விதைத்தது போல]

பிஜே அவர்கள் எழுதுகிறார்: 

அப்படியானால், ஞானஸ்நானம் பெறுவதற்கு முன் அவரிடம் பரிசுத்த ஆவி இருக்கவில்லை என்பது தெரிகின்றது. ஆனால் யோவான் தாயின் வயிற்றிலிருக்கும் போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்.

இயேசு ஞானஸ்நானம் பெறும் போது ஆவியானவரின் வெளிப்பாடும் மற்றும் தேவனின் வார்த்தைகளும் யோவானுக்கும், மற்ற மக்களுக்கும், இயேசுவின் அதிகாரத்தை காட்ட தேவன் செய்த ஏற்பாடாகும். 

பிஜே அவர்களே, யோவான் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போது பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தார் அவவளவு தானே, ஆனால், இயேசு பரிசுத்த ஆவியால் பிறந்தார் என்பதை ஏன் உங்களுக்கு புரியவில்லை? [இஸ்லாமியர்கள் சொல்வது போல, தேவன் மரியாளோடு உடலுறவு முறையில் தான் இயேசு பிறந்தார் என்ற கீழ் தரமான மற்றும் தவறான பொருளை கொடுக்கமாட்டீர்கள் என்று எண்ணுகின்றேன்] 

இயேசுவின் பிறப்பின் ஆரம்பமே ஆவியானவர் மூலமாக ஆரம்பிக்கிறது, ஆனால், இயேசு தனக்கு 30 வயதாகும் போது தான், தன் ஊழியத்தை ஆரம்பித்தார். 

யோவானுக்கும், மற்றவர்களுக்கும் சாட்சியாக இருக்க ஆவியானவர் இறங்கினார்: 

யோவான் 1:33 நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னைஅனுப்பினவர்; ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்தஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவரென்று எனக்குச் சொல்லியிருந்தார் .

மேலே உள்ள வசனத்தில் யோவான் சொல்லும் சாட்சியை பாருங்கள், யோவானுக்கு இயேசு யார் என்பதை தெரிவிக்க, பரிசுத்த ஆவியானவர் இயேசு ஞானஸ்நானம் பெற்ற பொது, இறங்கினார். பரிசுத்த ஆவியானவர் இயேசுவோடு இடைபடும் நிகழ்ச்சி இது தான் முதல் முறை என்பது இதன் அர்த்தமல்ல. 

இயேசுவிற்கு அதிகாரம் உண்டென்பதை ( மேசியா [மஸிஹா] என்பதை ) தெரிவிக்க : 

மட்டுமல்ல, தேவன் "இவர் என் நேசகுமாரன் " என்றுச் சொன்னது கூட, இயேசு அதிகாரம் உள்ளவர் என்பதை யோவானுக்கும், மற்ற மக்களுக்கும் காட்டவே. மற்றவர்களுக்காகவே அந்த இடத்தில் பரிசுத்த ஆவியானவரும், தேவனும் ஒன்றாக செயல்படுவதை காணமுடிகிறது. இயேசுவிற்கு தான் யார் என்பதும், தேவனுக்கும் தனக்கும் இடையே உள்ள உறவு என்னவென்பதும் நன்றாகவே தெரியும். தனக்கு 12 வயதாகும் போதே, நான் என் பிதாவின் கிரியைகளில் இருக்க வேண்டியவன் என்பதை நீங்கள் அறியவில்லையா என்று மரியாளிடத்தில் சொன்னார். 

ஞானஸ்நானம் பெற்ற நாளிலிருந்து இயேசு, தான் வந்த நோக்கத்தை நிறைவேற்ற ஆரம்பித்தார். இயேசுவிற்கு 30 வயதாகும் வரை பிசாசு அவரை சோதித்ததாகவோ, இயேசு மற்ற அற்புதங்கள் செய்ததாகவோ நாம் வேதத்தில் காணமுடியாது. 

எனவே, பரிசுத்த ஆவியானவர் இயேசுவோடு இல்லை என்பதற்கு ஒரு ஆதாரமும் காணமுடியாது, வேண்டுமானால், ஊகத்தின் பேரில் இப்படி இருக்கலாம் என்றுச் முஸ்லீம்கள் சொல்லலாமே தவிர, நிச்சயமாக இப்படி இருந்தது என்று ஆதாரம் காட்டமுடியாது. இயேசுவிற்கு 12 வயதாகும் போது, அவரைப் பற்றி வரும் வசனம் இது, 

லூக்கா 2:52 இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார் . 

தேவகிருபையில் இயேசு விருத்தி அடைந்தார், தேவகிருபையே இயேசுவோடு இருக்கும் போது, அவரிடம் எல்லாம் இருக்கிறது என்றல்லவா பொருள் கொள்ளவேண்டும். தேவகிருபை இருந்தது, ஆனால், ஆவியானவர் இல்லை என்றுச் சொல்வது சரியான வாதமாக இருக்காது. 

5. இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதா, மூன்று தடவை இயேசுவை மறுத்த பேதுரு ஆகியோரும் கூட பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்களா? 

நான் இதன் விவரத்தை மேலே உள்ள 2.4 "சோதிக்கப்படுதல்" என்பதை தவறாக புரிந்துக்கொண்ட பிஜே அவர்கள் என்ற தலைப்பில் விவரித்துள்ளேன். 

அதாவது ஒவ்வொரு கிறிஸ்தவனும் பரிசுத்த ஆவியானவரை தன் உள்ளத்தில் பெற்று இருப்பான், தனக்கு உள்ள "சுயமாக முடிவு எடுக்கும் உரிமையை" பயன்படுத்துவதின் மூலம், அவன் பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்துவான், அல்லது தொடர்ந்து தவறுகள் செய்தால், பரிசுத்த ஆவியானவரை இழந்துவிடுவான். 

பேதுரு மூன்று முறை பொய் சொன்னபிறகு மனங்கசந்து அழுதான், இயேசுவிடம் மன்னிப்பை பெற்றுக்கொண்டான். ஆனால், யூதாஸ் மனம் வருந்தினான், ஆனால், இயேசுவிடம் மன்னிப்பை கேட்டு பெறவில்லை, தன் சுய புத்தியை பயன்படுத்தி தூக்கு போட்டுக்கொண்டு மரித்தான். 

எனவே, ஒருவன் பரிசுத்த ஆவியை பெற்றவுடன், அவன் ஒன்றும் இறைவன் போல, பரிசுத்தவானாக மாறிவிட்டான் என்று பொருளல்ல. அதற்கு பதிலாக அவன் சுத்தவானாக வாழ்வதற்கு தயாராகிவிட்டான் என்பது தான் பொருள் . தன் சுய நிர்ணயங்களின் பேரில் தன் வாழ்வை அவன் பரிசுத்தமாக‌ அமைத்துக்கொள்ளமுடியும். அதற்கு ஆவியானவர் உதவிசெய்வார், கடிந்துக்கொள்வார், புத்திசொல்வார், சத்தியத்திலே நடப்பதற்கு வழி காட்டுவார்.

பாகம் 2 தொடரும்...

மூலம்: http://www.isakoran.blogspot.in/2007/11/blog-post_27.html

பீஜே அவர்களுக்கு கொடுத்த இதர மறுப்புக்கள்

உமரின் இதர கட்டுரைகள் / மறுப்புக்கள்