அல்லாஹ்வைவிடவும், முஹம்மதுவைவிடவும் பவுலடியார் எப்படி மேன்மையானவராக இருக்கிறார்?

அத்தியாயம் 1 - பவுலடியாரின் இரத்தின சுருக்கம் – அன்பு, அல்லாஹ்வின் நிலைப்பாடு என்ன?

ஆசிரியர்:உமர்

முஸ்லிம்களின் மனசாட்சிக்கு ஒரு சவால்.  உரை கல்லில் தங்கத்தை உரசி உண்மையை கண்டறிவது போன்று, இஸ்லாமிய இறையியல் கோட்பாடுகளின் உண்மை நிலையை அறிய முதலாவது நாம் அவைகளை அன்பு என்னும் சக்தியோடு உரசிப்பார்க்கவேண்டும். குறைந்த பட்சம் அன்பு பற்றி அல்லாஹ் என்ன சொல்கின்றான் என்பதை கவனிக்கவேண்டும். உலகில் உள்ள மதங்கள் எல்லாம் அன்பை போதிக்கின்றது என்ற பொதுவான நம்பிக்கை மக்களுக்கு உண்டு. இந்த பொதுவான நம்பிக்கை இஸ்லாமுக்கு பொருந்துமா?

முஸ்லிம்கள் குற்றப்படுத்தும் பவுலடியாரின் போதனையையும்,  அதே முஸ்லிம்களின் இறைவனாக இருக்கும் அல்லாஹ்வின் போதனையையும்  “அன்பு” என்ற நற்பண்புடன் ஒப்பிட்டுப் பார்ப்போமா!

கிறிஸ்தவர்களால் “பவுலடியார்” என்றும், ”அப்போஸ்தலர்” என்றும் அன்புடன் அழைக்கப்படும் பவுல் அவர்கள் அன்பு பற்றி என்ன சொல்கிறார் என்பதை இப்போது படிப்போம்:

1 கொரிந்தியர் 13ம் அத்தியாயம்:

நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன். 

நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. 

எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை. 

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, 

அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, 

அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். 

சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். 

அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம். 

நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது. 

நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். 

நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன். 

இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன். 

இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது

முஸ்லிம்களே, மேற்கண்ட வசனங்களை ஒருமுறையல்ல, பலமுறை படித்துப்பாருங்கள். அதன் பிறகு, இவைகளுக்கு இணையான அல்லது மேலான வசனங்களை குர்-ஆனில் உண்டா என்று தேடிப்பாருங்கள்.

குர்-ஆனை அரபியில் படித்தால் தான் அதிக நன்மையென்று அறியாமையில் முஸ்லிம்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அல்லாஹ் குர்-ஆன் வசனங்களில் என்ன சொல்ல வருகிறார்? என்பதை புரிந்து கொள்ள முயற்சி எடுக்காமல், புரியாவிட்டாலும் பிரச்சனையில்லை, கண்களை திறந்து கொண்டு, மனதை மூடிக்கொண்டு, கண்மூடித்தனமாக படிக்கும் ஒவ்வொரு அரபி எழுத்துக்கும் அல்லாஹ் பல  நன்மைகளைத் தருவான் என்று நம்பி குர்-ஆனை படிக்கும் முஸ்லிம்களே,  மேற்கண்ட பவுலடியாரின் வசனங்களை தமிழில் கொடுத்துள்ளேன் அவைகளை  படியுங்கள்.   

இவ்வசனங்கள் ஒவ்வொன்றிற்கும் நான் விளக்கத்தை எழுத ஆரம்பித்தால், அதுவே ஒரு புத்தகமாக ஆகிவிடும், எனவே, அதனை நான் இப்போது செய்ய விரும்பவில்லை.

  • பவுலடியாரின் மேற்கண்ட வசனங்கள், குர்-ஆனின் வசனங்களைக் காட்டிலும் மேன்மையானதாக உங்களுக்குத் தெரியவில்லையா?
  • பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையில் காணப்படும் அன்பு, கணவன் மனைவிக்கு இடையில் காணப்படும் அன்பு, நண்பர்களுக்கு இடையில் காணப்படும் அன்பு, சகோதர சகோதரிகளின் மத்தியில் காணப்படும் அன்பு என்று பலவாறு அன்பு காணப்படுகின்றது. ”இப்படிப்பட்ட உண்மையான அன்பு என்ன செய்யும்?” என்பதை சுருக்கமாக பவுலடியார் மேற்கண்ட வசனங்களில் சொல்லியுள்ளார். முஸ்லிம்களே! இவைகளா மனித வார்த்தைகள்? இவைகளா ஒரு கள்ள அப்போஸ்தலரின் வார்த்தைகள்? அப்படியானால், அன்பு பற்றி இவைகளை காட்டிலும் மேலான குர்-ஆன் வசனங்களைக் காட்டுங்கள்.
  • உண்மையாகவே குர்-ஆன் இறைவனின் வார்த்தை என்றுச் சொன்னால், பவுலடியாரின் வார்த்தைகள் மனித வார்த்தைகள் என்றுச் சொன்னால்,  குர்-ஆனில் உள்ள 6236 வசனங்களில் ஒரு வசனமும் பவுலடியாரின் வசனங்களைக் காட்டிலும் அற்பமானதாகக் காணப்படக்கூடாது. குர்-ஆனின் அனைத்து வசனங்களும், பவுலடியாரின் மேற்கண்ட வசனங்களைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்கவேண்டும்.  முஸ்லிம்கள் இந்த சவாலை ஏற்க தயாரா?
  • அன்பு என்ன செய்யும், அது என்ன செய்யாது என்பதை இரத்தினச் சுருக்கமாக பவுலடியார் வடித்துள்ளார், உங்கள் குர்-ஆனில் அன்பு என்னச் செய்யும்? அன்பு என்னச் செய்யாது? என்பதைப் பற்றி குர்-ஆன் என்ன சொல்கிறது என்று உங்களால் குர்-ஆன் வசனங்களை மேற்கோள் காட்டமுடியுமா?

இப்போது குர்-ஆனில் அல்லாஹ் இறக்கிய சில வசனங்களைப் பார்ப்போமா?

குர்-ஆன் அத்தியாயம் 111ஐ படிப்போம்:

அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும்.

அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.

விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.

விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,

அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்). (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

மேற்கண்ட வசனங்கள் “அபூ லஹப்” என்பவரை அல்லாஹ் சபித்த சாப வசனங்கள் ஆகும்.  முஸ்லிம்களே, பவுலடியாரின் வசனங்களோடு உங்கள் குர்-ஆனின் வசனங்களை ஒப்பிட்டுப் பார்ப்பீர்களா? பவுலடியார் எப்படி அல்லாஹ்வை விட மேன்மையுள்ளவராக இருக்கிறார் என்பதை இப்போது உங்களால் கவனிக்கமுடிகின்றதா?

[குர்-ஆனின் இந்த வசனங்களை மட்டும் ஏன் எடுத்து ஒப்பிடுகிறீர்கள் என்று கேள்வி கேட்க முஸ்லிம்களுக்கு உரிமையில்லை, ஏனென்றால், குர்-ஆனின் அனைத்து வசனங்களும் அல்லாஹ் இறக்கியது தானே! அவைகள் அனைத்தும் மனித வார்த்தைகளைக் காட்டிலும் சிறப்பானது தானே! பவுலடியார் ஒரு மனிதர் தானே! எப்படி ஒரு மனிதரின் வார்த்தைகள், சர்வ ஞானியாகிய அல்லாஹ்வின் வார்த்தைகளைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்கமுடியும்? எனவே, அல்லாஹ்வின் அனைத்து வசனங்களையும் ஒப்பிட மற்றவர்களுக்கு உரிமையுண்டு]

பவுலடியாரின் இன்னொரு வசனம்: ரோமர் 13:8

ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான். 

ஒருவன் மற்றொருவனிடம் அன்பு கூறும் போது, அவன் பழைய ஏற்பாட்டின் கட்டளைகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறான்.  எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய விதமாக, மோசே மூலமாக தேவன் பத்து கட்டளைகளைக் கொடுத்தார்.  அவைகளைப் பற்றி இயேசு கீழ்கண்டவாறு கூறினார்:

மத்தேயு 22:37- 40

இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;  இது முதலாம் பிரதான கற்பனை.

இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.  இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.

இதையே பவுலடியாரும் விளக்கி கூறுகின்றார், இயேசு சொன்னவைகளின்ன் விளக்கவுரையாக பவுலடியாரின் வார்த்தைகள் காணப்படுகின்றது என்பதை கவனியுங்கள், ரோமர் 13:9

எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது.

மோசே மூலமாக தரப்பட்ட 10 கட்டளைகளில், முதல் 4 கட்டளைகள் மனிதனுக்கும் தேவனுக்கும் சம்மந்தப்பட்டது. ஐந்தாம் கட்டளை முதல் பத்தாம் கட்டளை வரையுள்ளது ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் சம்மந்தப்பட்டது. இந்த இரண்டாம் பாகத்தில் உள்ளதைப் பற்றிய விளக்கத்தை சுருக்கமாக பவுலடியார் மேற்கண்ட வசனங்களில் விவரிக்கிறார்.  இந்த ஆறு கட்டளைகளை எப்படி நிறைவேற்றுவது என்று பவுலடியாரிடம் கேட்டுப்பாருங்கள்? அவர் சொல்லுவார் “பிறனிடம் அன்பு செலுத்து, அப்போது அவைகள் அனைத்தும் தானாக நிறைவேறும்”.  

”பிறன்” என்பவன் யார்?

முஸ்லிம்களே! ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

உன்னை நேசிப்பது போல பிறனையும் நேசிக்கவேண்டும் என்பதில் “பிறன்” என்பது இன்னொரு கிறிஸ்தவனை மட்டும் குறிக்காது, அது எல்லோரையும் குறிக்கும். அவன் யாராக இருந்தாலும் சரி,  அவன் ஒரு முஸ்லிமாக இருக்கலாம், ஒரு இந்துவாக இருக்கலாம், அவ்வளவு ஏன் அவன் இறை நம்பிக்கை இல்லாத ஒரு நாத்தீகனாகவும் இருக்கலாம், அவனிடம் அன்பு செலுத்தும் படி பவுலடியார் கட்டளையிடுகிறார்.

முஸ்லிம்களுக்கு ஒரு கேள்வி: ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை நேசிப்பான், இதில் முஸ்லிம்கள் சிறப்பாக செய்வது ஒன்றுமில்லை. இயேசு இதைப் பற்றிச் சொல்லும் பொது இவ்வாறு கூறினார்:

உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரி தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா?  நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா? (மத்தேயு 5:46,47 பொது தமிழாக்கம்)

முஸ்லிமல்லாத இனத்தவரை முஸ்லிம்கள்  நேசிக்கவேண்டும் என்று குர்-ஆன் எங்கேயாவது சொல்கிறதா? யூதர்களை முஸ்லிம்கள் நேசிக்கவேண்டும், அவர்களுக்காக ஜெபம் (துவா) செய்யவேண்டும் என்று குர்-ஆன் சொல்கிறதா? ஆனால் எல்லோரையும் நேசிக்கவேண்டும் என்று பவுலடியார் சொல்கிறார். இப்போது சொல்லுங்கள், யார் மேன்மையானவர்? பவுலடியாரா அல்லது அல்லாஹ்வா?  

இப்படிப்பட்ட வார்த்தைகளை பவுலடியாரின் மூலமாக எழுதவைத்து, கிறிஸ்தவர்களின் கையில் ஒரு வேதமாக தவழும்படி செய்த எங்கள் தேவனுக்கு கிறிஸ்தவர்கள் கோடி கோடி நன்றிகளைச் சொன்னாலும் அது போதாது என்பது எங்கள் கருத்து. இப்படிப்பட்ட வசனங்களை நாங்கள் படிக்கும் ஒவ்வொரு வேளையும், எங்கள் போதகர்கள் மற்றும் ஊழியர்கள் அவைகளை விளக்கி பிரசங்கம் செய்யும் போதெல்லாம், நாங்கள் அன்பு என்ற விஷயத்தில் குறைவுள்ளவர்களாகவே காண்கிறோம், இன்னும் எப்படி அன்பில் முழுமை அடைய முடியும் என்று சிந்திக்கிறோம், செயல்படுகிறோம். இப்படிப்பட்ட வசனங்களே  கிறிஸ்தவர்களின் நித்திய வாழ்க்கைக்கான வெற்றிக்கு வழி வகுக்கிறது. 

இயேசு போட்டு வைத்திருந்த அஸ்திபாரத்தின் மீது சீடர்களும், பவுலடியாரும் அழகான மாளிகையை கட்டி எழுப்பினார்கள். ஆனால், இயேசுவின் வழியில் வந்தவன் நான் என்றுச் சொல்லிக்கொண்ட முஹம்மதுவோ, இயேசு போட்டு வைத்திருந்த அஸ்திபாரத்தை நாசமாக்கும் செயலைச் செய்தார். பைபிளின் தேவன் என்று தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட அல்லாஹ், அந்த பைபிளின் தேவன் அமைத்திருந்த அழகான தோட்டத்தை அழிக்கும் செயலைச் செய்தார்.  

பவுலடியாரை குற்றப்படுத்தும் முஸ்லிம்கள்,  அவரின் வசனங்களை குர்-ஆன் வசனங்களோடு ஒப்பிடுவார்களா? அந்த தைரியமும், உண்மையும் முஸ்லிம்களிடம் உண்டா? உண்டென்றுச் சொல்பவர்கள் இந்த சவாலை ஏற்றுக்கொள்ளட்டும். 

இயேசுவின் சீடர்கள் மற்றும் பவுலடியார் மூலமாக தேவன் எழுதி வைத்த வார்த்தைகள் தான் புதிய ஏற்பாட்டில் கணப்படுகின்றது. 1 கொரிந்தியர் 13ம் அத்தியாயத்திற்கு இணையான ஒரு அத்தியாயத்தை முஸ்லிம்கள் குர்-ஆனிலிருந்து எடுத்துக் காட்டமுடியுமா?

பிற இனத்தவர்களையும், பாவம் செய்பவர்களையும் நேசிக்கும் விதமாக பைபிளின் தேவனும், இயேசுவும் பவுலடியாரும் போதித்தார்கள். பாவத்தை தேவன் வெறுக்கின்றார், ஆனால், பாவியை நேசிக்கிறார், அவன் தன் தீய வழியை விட்டு வரவேண்டும் என்று விரும்புகிறார், அவன் நேர் வழியில் வரும்வரை அவனுக்கு நேராக தன் கரங்களை நீட்டி அவர் காத்துக்கொண்டு இருக்கிறார். ஆனால், அல்லாஹ்வோ, பாவிகளை நேசிப்பதில்லை, அவர்கள் திருந்தி வந்தால் மட்டுமே நேசிப்பேன் என்று நிபந்தனை விடுக்கிறார்:

குர்-ஆன் 2:276. அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

குர்-ஆன் 22:38. நிச்சயமாக, அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை (முஷ்ரிக்குகளின் தீமைகளிலிருந்து) பாதுகாத்துக் கொள்கிறான் - நம்பிக்கை மோசம் செய்பவர்களையும், நன்றி கெட்ட மோசக்காரர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.

இயேசு சொன்னது போல, நல்லவர்களை மட்டுமே அல்லாஹ் நேசித்தால், அவர் விசேஷித்துச் செய்வது என்ன? திருடன் கூட தன்னை நேசிப்பவனை நேசிக்கிறான், தனக்கு விரோதியாக இருப்பவனை நேசிப்பதில்லை.  திருடனுக்கும் அல்லாஹ்விற்கும் வித்தியாசமில்லையா?

1 கொரிந்தியர் 13ம் அத்தியாயத்தில் சொல்லப்பட்ட பவுலடியாரின் போதனையை ஒரு மனிதன் பின்பற்றினால், அவன் முழு மனிதனாக மாறுவான்,  ஒருவனுக்கும் அவன் தீங்கு இழைக்கமாட்டான், மற்றவர்கள் நஷ்டமடையச் செய்யமாட்டான். 

முடிவுரை:

இதுவரை பவுலடியாரின் போதனைகளிலிருந்து ஒரு சில வசனங்களை ஒப்பிட்டுப் பார்த்தோம். அன்பு பற்றி பவுலடியார் சொல்வது போலவோ அல்லது அதை விட மேன்மையான வசனங்களையோ அல்லாஹ் குர்-ஆனில் சொல்லவில்லை என்பதை கண்டுக்கொண்டோம். இது முஸ்லிம்களுக்கு ஆச்சரியமாகவும், தர்மசங்கடமாகவும் இருக்கக்கூடும்.  பவுலடியாரின் வார்த்தைகள் இரத்தினச் சுருக்கமாக உள்ளது.  பழைய ஏற்பாட்டு கட்டளைகள் அனைத்தையும், அன்பு என்ற ஒன்றை பரிபூரணமாக பின் பற்றுவதினால்  நிறைவேற்ற முடியும் என்பதை விளக்கினார்.  ஒரு மனிதன் பவுலடியாரின் வார்த்தைகளை பின் பற்றினால், அவனும், அவன் சார்ந்த சமுதாயமும் மேன்மையடையும். அல்லாஹ்வின் வார்த்தைகள் பவுலடியாரின் வார்த்தைகளுக்கு முன்பு தோற்றுப் போகிறது. இஸ்லாமியரல்லாதவர்களையும் நேசிக்கவேண்டும் என்ற கருத்துடைய வசனங்களை குர்-ஆனிலிருந்து முஸ்லிம்கள் காட்டுவார்களா? 

அடுத்த அத்தியாயத்தில், பவுலடியாரின் இதர வசனங்களை எடுத்துக் கொண்டு, அவைகள் எப்படி குர்-ஆன் வசனங்களைக் காட்டிலும் மேன்மையுள்ளதாக இருக்கிறது என்பதைக் காண்போம். 

முஸ்லிம்களே, பைபிளை படிக்க ஆரம்பியுங்கள், மேன்மை அடைவீர்கள்.

இப்புத்தகத்தின் பொருளடக்கம்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்