இஸ்மாயீலை காட்டுக்கழுதை என அழைத்து பைபிள் அவமானப்படுத்தியதா?

ஒரு முஸ்லிம் நண்பர் என்னிடம், 'பைபிள் இஸ்மவேலுக்கு துரோகம் புரிந்துள்ளது, அதாவது ஈசாக்கை முன் நிறுத்தும்படி இஸ்மவேலின் பெயர் வெளியே தெரியாமல் பைபிள் மறைத்துவிட்டது' என்று தான் எண்ணுவதாக கூறினார்.

முஸ்லிம் நண்பரே, உங்களின் கருத்து தவறானதாகும். ஆபிரகாமுக்கு (இப்ராஹீமுக்கு) இஸ்மவேல் மற்றும் ஈசாக்கு மட்டுமல்லாமல், வேறு மகன்களும் இருந்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்களின் பெயர்களையும் பைபிள் பதிவு செய்யதவறியதில்லை என்ற உண்மையை தாழ்மையுடன் உங்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.  ஈசாக்கை உயர்த்தும் படி பைபிள் நினைத்து இருந்திருந்தால், ஆபிரகாமுக்கு பிறந்த மற்ற மகன்களின் பெயர்களை ஏன் குறிப்பிடுகின்றது? ஆரம்பத்திலிருந்து அந்த மகன்கள் பற்றிய பெயர்களையே சொல்லாமல் இருந்திருந்தால், பிரச்சனை தீர்ந்தது அல்லவா? உண்மை என்னவென்றால், பைபிள் உள்ளதை உள்ளது போலவே சொல்கிறது, அது நமக்கு சரியாக தெரிந்தாலும் சரி தவறாக தெரிந்தாலும் சரி, வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றுச் சொல்கிறோமே, அது போல ஒளிவு மறைவு இன்றி பைபிள் பேசுகின்றது.

மேசியாவின் (மஸீஹாவின்) வம்சாவழி:

இதை கவனியுங்கள். ஈசாக்கிற்கு இரண்டு  மகன்கள் இருந்தார்கள், ஒருவரின் பெயர் ஏசா, இன்னொருவரின் பெயர் யாக்கோபு. யாக்கோபு பற்றிய  விவரங்கள் தொடர்ச்சியாக பைபிள் சொல்லிக்கொண்டு வருகிறது, ஆனால் ஏசாவின் விவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டுவிட்டது. இப்போது ஏசாவின் பெயரைக்கூட  பைபிள் வேண்டுமென்றே மறைத்துவிட்டது என்று முஸ்லிம்கள் சொல்வார்களா? 

இஸ்மவேலை ஆபிரகாம் நேசித்தார் என்று பைபிள் சொல்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஆனால், முக்கியமாக  கவனிக்கவேண்டிய விவரம் என்னவென்றால்,  'இஸ்மவேல்' கர்த்தரால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர் அல்ல என்பதாகும்.

இது தான் திருப்புமுனை, அதாவது பைபிளின் விவரங்களை கவனித்தால், அது மேசியாவை (Messiah - மஸீஹா) நோக்கியே நகர்வதைக் காணமுடியும். அதாவது மேசியாவின் வருகைப் பற்றிய  விவரங்களுக்கு ஆதிக முக்கியத்துவம் கொடுத்து, பைபிள் தொடர்கிறது.

பைபிளின் மொத்த சாராம்சத்தை கவனித்தால், மேசியாவின் விவரங்களில் 'இஸ்மவேல் மற்றும் ஏசாவின்' விவரங்களை தேவையான அளவிற்கு மட்டுமே அது சொல்கிறது, தேவையில்லாதவைகளை சொல்வதில்லை.

இஸ்மவேலும் ஏசாவும் ஈசாக்கோடும், யாக்கோபோடும், அடுத்தடுத்த பகுதிகளில் வாழ்ந்தார்கள் என்று பைபிள் சொல்கிறது. ஆனால், அவர்கள் மேசியா வரப்போகும் வம்சமாக இல்லாததால், அவர்கள் பற்றிய  விவரங்களை குறைத்துக் கொண்டது பைபிள், அவ்வளவு தான், இதில் எந்த ஒரு இரகசிய துரோகமோ, வஞ்சனையோ இல்லை.

ஈசாக்கோ அல்லது இஸ்மவேலோ, யாராவது ஒருவரின் குடும்ப பரம்பரையில் எதிர்காலத்தில் மேசியா வரவேண்டும். அந்த‌ நபர் ஈசாக்கு என்று தேவன் முடிவு செய்தார், அவ்வளவு தான். யாக்கோபா அல்லது ஏசாவா? யாருடைய பரம்பரையில் மேசியா வரவேண்டும்? யாராவது ஒருவரின் பரம்பரையில் தான் மேசியா வரமுடியும். யாக்கோபை தேவன் தெரிவு செய்தார், அவ்வளவு தான். இந்த முடிவை தேவன் தான் செய்தார், மனிதன் அல்ல. 

முஸ்லிம் நண்பர்களே, உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? ஈசாக்கு தனக்கு பிற்பாடு தன் சொத்துக்கள் அனைத்தும் அல்லது ஆசீர்வாதங்கள் அனைத்தும் தன் மூத்த மகன் ஏசாவிற்கு  வரவேண்டும் என்று தான் விரும்பினார், யாக்கோபுக்கு அல்ல‌. இதையும் பைபிளே சொல்கிறது என்பதை மறக்கவேண்டாம். ஆனால், தேவனுடைய திட்டம் வேறுவிதமாக இருந்தது. தேவனுடைய திட்டம் மற்றும் ஞானத்திற்கு முன்பு மனிதனின் (ஈசாக்கின் விருப்பம்) ஒரு பொருட்டல்ல. தேவன் யாக்கோபை தெரிவு செய்தார்.

பைபிளில் தேவன் தன்னைப் பற்றி பேசும் போது, தான் ஆபிரகாமின் தேவன், லோத்துவின் தேவன், இஸ்மவேலின் தேவன், ஈசாக்கின் தேவன், ஏசாவின் தேவன் மற்றும் யாக்கோபின் தேவன் என்று சொல்லவில்லை. அதற்கு பதிலாக, தாம் ஆபிராமின், ஈசாக்கின் யாக்கோபின் தேவன் என்று சொன்னார், காரணம் இந்த வம்சா வழியில் தான் மேசியா வரவேண்டும் என்பதற்காக அவர் அப்படிச் சொன்னார். இப்படி அவர் சொன்னதால் அவர் மற்றவர்களின் தேவனாக  இல்லாமல் போய்விட்டாரா என்று கேட்டால் இல்லை, அவர் சர்வ உலக மக்களின் தேவன் தான், ஆனால், மேசியாவின் நேரடி வம்சா வழியில் வருபவர்களின் பெயர்களை அவர் குறிப்பிடுகின்றார் அவ்வளவு தான்.

யாக்கோபும், அவரின் 12 மகன்களும் மேசியாவின் வம்சமும்:

தேவன் முதலாவது ஆபிரகாமை தெரிவு செய்தார், பிறகு ஈசாக்கு, அதன் பிறகு யாக்கோபு. இப்போது யாக்கோபுக்கு 12 மகன்கள் பிறந்தார்கள். ஆனால், இந்த 12 பேர்களில் ஒருவரின் வம்சத்தில் தான் மேசியா வரவேண்டும். மீதி 11 பேர்களின் வசமத்தில் மேசியா பிறக்கமுடியாது, இதில் எந்த ஒரு வஞ்சகமோ, துரோகமோ கிடையாது. யாக்கோபின் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஒரு  வேலை இருந்தது, ஆனால் ஒருவரின் குடும்ப வழியில் தான் மேசியா வரவேண்டும் அல்லது  வரமுடியும்! அதற்காக யூதா என்ற மகனின் குடும்பத்தை தேவன் தெரிவு செய்தார், இவருடைய வம்சத்தில் தாவீது இராஜா வந்தார், இவரது வம்சத்தில் மேசியா  வந்தார். இதன் அடிப்படையில் தான் மேசியாவின் பட்டப்பெயர்களில் 'யூதாவின் சிங்கம் (Lion of Judah)' என்றும் மற்றும் 'மேசியா  தாவீதின் குமாரன்(Son of David)' என்றும் அழைக்கப்பட்டார்.

பைபிளின் பழைய ஏற்பாடு, இஸ்ரேலின் சரித்திரத்தை மட்டும் சொல்லவில்லை, முக்கியமாக ஆதியாகமம் முதல் மல்கியா புத்தகம் வரை, அது மேசியாவின் வருகையை ஆங்காங்கே தீர்க்கதரிசனமாக சொல்லிக்கொண்டே வந்துள்ளது. மேசியா தான் பைபிளின் முக்கிய நடுப்புள்ளி என்பதால், வம்சா வழி பெயர்கள் பைபிளில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டின் சரித்திரம் மற்றும் தீர்க்கதரிசனங்கள் அனைத்தும், மேசியாவை நோக்கியே நகர்ந்துக்கொண்டு வந்துள்ளது என்பதை கவனிக்கவேண்ன்டும்.

இதனையே இயேசு புதிய ஏற்பாட்டில் சுருக்கமாக, லூக்கா 24ம் அத்தியாயத்தில் கூறியுள்ளார்:

அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார். ( லூக்கா 24:43)

மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். ( லூக்கா 24:27)

பழைய ஏற்பாட்டில் நூற்றுக்கணக்கான தீர்க்கதரிசனங்கள் மேசியாவைப் பற்றி கூறப்பட்டுள்ளது.

1) மேசியா பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பு, ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக தேவன் 'மேசியா ஒரு கன்னியின் வயிற்றில் பிறப்பார்' என்றுச் சொன்னார் (ஏசாயா 7:14)

2) மேசியா பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு, மீகா தீர்க்கதரிசி மூலமாக தேவன் 'மேசியா பெத்லகேமில் பிறப்பார்' என்று சொல்லியுள்ளார் (மீகா 5:2)

3) மேசியா பிறப்பதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பாக, தாவீது ராஜாவின் மூலமாக, மேசியா எப்படிப்பட்ட ஒரு மரணத்தை சந்திப்பார் என்று தேவன் சொல்லியுள்ளார் (சங்கீதம் 22)

மேற்கண்ட மூன்று மட்டுமல்லாமல், மீதமுள்ள அனைத்து தீர்க்கதரிசங்கள் அனைத்தும் இயேசு மீது நிறைவேறியது.

1500 ஆண்டுகளுக்கும் மேலாக‌ பழைய ஏற்பாடு மேசியாவின் வருகைக்காக காத்திருந்தது. ஆகையால் தான் பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகமாகிய "மல்கியா புத்தகத்தில் தேவன்” கீழ்கண்டவாறு சொல்கிறார்:

கர்த்தர் உரைக்கிறார்: நான் உன்னை சந்திக்க வருவேன்.

400 ஆண்டுகள் கழித்து, புதிய ஏற்பாடு, மத்தேயு நற்செய்தி நூலில், ஒரு பரம்பரை பட்டியலோடு தொடங்குகிறது, இந்த பட்டியலைப் படித்து சிலருக்கு சலிப்பு (Boring) உண்டாகிவிடும்...

ஆனால், ஒரு நிமிடம் கவனியுங்கள். மத்தேயு ஏன் இப்படி தொடங்குகிறார் என்று சிந்தித்து பார்த்து இருக்கிறீர்களா?

அவர் என்ன சொல்கிறார்: "நில்லுங்கள் . . . கவனியுங்கள் . . . இதோ, பல நூற்றாண்டுகளாக காத்திருந்த மேசியா  இதோ இங்கே இருக்கிறார்" என்றுச் சொல்கிறார். 

இப்போது உங்களுக்கு புரிந்ததா? ஏன் புதிய ஏற்பாடு ஒரு பரம்பரை பட்டியலோடு தொடங்குகிறது என்று?

மேலும் ஏன் கிறிஸ்தவர்கள் பைபிள் சொல்லாத இன்னொரு நற்செய்தியை நம்புவதில்லை என்று இப்போது புரிகின்றதா?  மேலும், மேசியாவின் சந்ததியில் அல்லாமல் ஆயிர மைல்களுக்கு அப்பால் ஒரு நபி (முஹம்மது) தோன்றி நான் தான் யெகோவா தேவன் அனுப்பிய நபி என்று சொன்னாலும் ஏன் கிறிஸ்தவர்கள் நம்புவதில்லை என்று புரிகின்றதா?  பைபிளின் படி மேசியா தான் கடைசி தீர்க்கதரிசி மற்றும் அவருக்குப்  பிறகு இன்னொரு தீர்க்கதரிசி (இஸ்லாமிய நபி முஹம்மது) தேவையே இல்லை. பைபிளின் இறையியலின் படி, இயேசுவிற்கு பிறகு இன்னொரு நபி தேவையில்லை, அப்படி  வந்தால் அவர்கள் கள்ளத்தீர்க்கதரிசி ஆவார்கள்.

பைபிளின் மொத்த சுருக்கத்தைப் இப்போது அறிந்துக்கொண்டீர்களா? இந்த பின்னணியில் பார்த்தால், இஸ்மவேல் என்பவர் ஒரு சாதாரண நபர் தான்.

கடைசியாக, பழைய ஏற்பாடு எப்படி முடிவடைகின்றதோ, அதே போல  புதிய ஏற்பாடும் முடிவு பெறுவதைக் காணமுடியும்.

அதாவது, பழைய ஏற்பாடு மேசியாவின் முதல் வருகைக்காக காத்திருப்பதோடு முடிவடைகிறது. புதிய ஏற்பாடு அதே மேசியாவின் இரண்டாம் வருகைக்காக காத்திருப்பதோடு முடிந்திருக்கிறது.

மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். (வெளி 22:20)

காட்டுக்கழுதை என்பது அவமானப்படுத்துவதா?

அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார். (ஆதியாகமம் 16:12)

இஸ்மவேலை "காட்டு கழுதை" என்று அழைப்பதன் மூலம் பைபிள் அவரை அவமதிக்கிறது என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். அது தவறானது.

21 ஆம் நூற்றாண்டை மனதில் வைத்து படிக்கும் போது, இது ஒரு அவமானம் போல் தோன்றலாம். இருப்பினும்,  4000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழலை நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டால், "காட்டுக்கழுதை" என்றுச் சொல்லப்பட்ட வார்த்தையில் அத்தகைய நோக்கம் இங்கே இல்லை என்பதை புரிந்துக்கொள்ளலாம். ஒரு மிருகத்தின் குணத்தை ஒரு உதாரணத்திற்காக அவருக்கு ஒப்பிட்டு இங்கு பேசுகின்றது. இதில் நல்ல குணங்களும் அடங்கும், கெட்ட குணங்களும் அடங்கும். பொதுவாக பைபிள் அனேக முறை அனேகருக்கு ஒப்பிட்டு இப்படி பேசியுள்ளது, வெறும் இஸ்மவேலுக்கு மட்டும் பைபிள் சொல்வதில்லை.

தன் கடைசி காலத்தில் யாக்கோபு தன் மகன்களை ஆசீர்வதிக்கும் போது, இசக்கார் என்ற மகனைப் பார்த்து, "பலத்த கழுதை" என்று ஒப்பிட்டுச் சொல்கிறார். 

ஆதியாகமம் 49:14

இசக்கார் இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை.

இப்படி சொல்வதினால் யாக்கோபு தன் மகனை அவமதித்தார் என்று எடுத்துக்கொள்ளலாமா? இல்லை. இசக்காரின் சந்ததிகள்  அனைவரும் எழுந்து, என் மூதாதையரை பைபிள் அவமதித்தது என்றுச் சொன்னார்களா? இல்லை.

இந்த இடத்தில், "பலத்த கழுதை" என்றச் சொல் எதனை தெரிவிக்கிறது? அவருடைய சந்ததிகள் பலமுள்ளவர்களாக இருப்பார்கள் என்பதையும், அதே நேரத்தில் ஒரு கழுதையைப் போல மற்றவர்கள் இவர்களிடம் அதிகமாக வேலை வாங்குவார்கள் என்பதையும் தெரிவிக்கிறது. இதில் கூட நேர்மறை எதிர்மறை பண்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதே அத்தியாயத்தில், இசக்காரின் சகோதரர் பென்யமீன் “ஒரு கொடூரமான ஓநாய்” என்று அழைக்கப்படுகிறார். இது ஒரு அவமதிப்பா? “ஓநாய் உருவம்” பெஞ்சமின் சந்ததியினர் ஆக்ரோஷமான போர்வீரர்களாக இருப்பார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த தீர்க்கதரிசனமும் 1 நாளாகமம் 8:40ல் நிறைவேறியது என்றுச் சொல்லலாம்.

ஊலாமின் குமாரர் பராக்கிரமசாலிகளான வில்வீரராய் இருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் புத்திரர் பௌத்திரர் இருந்தார்கள்; அவர்கள் தொகை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லாரும் பென்யமீன் புத்திரர். (1 நாளாகமம் 8:40)

நப்தலி ஒரு புறாவிற்கு ஒப்பிடப்பட்டார். தான் (Dan) என்பவர் ஒரு பாம்பிற்கு ஒப்பிடப்பட்டார். யோசேப்பு ஒரு சிங்கக்குட்டிக்கு ஒப்பிடப்பட்டார். இவர்கள் அனைவரும் யாக்கோபின் மகன்களே! இவர்களை இப்படி மிருகங்களோடு ஒப்பிட்டதும் அவர்களின் தகப்பனே! 

பைபிள் அவர்களை மிருகங்களின் பெயர்களைக் கொண்டு அழைக்கவில்லை அல்லது அவர்கள் மிருகங்கள் போல காணப்பட்டார்கள் என்றும் பைபிள் சொல்லவில்லை. ஆனால், எதிர்காலத்தில் அவர்களின் நேர்மறை எதிர்மறை பண்புகளை மிருகங்களோடு ஒப்பிட்டு பேசியுள்ளது அவ்வளவு தான்.

ஆகையால், ஆதியாகமம் 16:12ல் இஸ்மவேல் ஒரு காட்டுக்கழுதையைப் போல பண்புகளைக் கொண்டு வாழப்போகிறான் என்று சொல்லப்பட்டது. இதன் அர்த்தம் என்ன?  இஸ்மவேலின் சந்ததிகள் சுதந்திரமானவர்களாக, கட்டுப்படுத்தமுடியாதவர்களாக, பலமுள்ளவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்பட்டது அவ்வளவு தான்.  இது அவர்கள் பற்றிச் சொல்லப்பட்ட நல்ல நேர்மறை பண்பாகும். 

இதே போல, ஒரு எதிர்மறை பண்பும் சொல்லப்பட்டது. அது என்னவென்றால் அவர்களின் இந்த பலமுள்ள குணம், மற்றவர்களுக்கு எதிராக செயல்படுபவர்களாக காட்டப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

மூலம: http://www.faithbrowser.com/ishmael-in-the-bible/


ஃபெயித் ப்ரவுசர் தள இதர கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள் பக்கம்