முஸ்லிம்களுக்கு பிடித்த ஆனால் தவறாக புரிந்துக்கொண்ட பைபிள் வசனங்கள்: 2 – மாற்கு 12:29

முந்தைய கட்டுரையில் முஸ்லிம்களால் தவறாக கொள்ளப்பட்ட‌ வசனம் பற்றி பார்த்தோம், அதன் தொடுப்பு:

இந்த கட்டுரையில் இன்னொரு வசனத்தைக்  காண்போம், முஸ்லிம்கள் தவறாக அர்த்தம் கொடுக்கும் வசனம் இது தான்: மாற்கு 12:29

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் (மாற்கு 12:29)

And Jesus answered him, The first of all the commandments is, Hear, O Israel; The Lord our God is one Lord: (Mark 12:29 – KJV)

முஸ்லிம்களின் தவறான புரிதலும், வாதங்களும்:

  1. இந்த வசனத்தின்படி, இயேசு தம் தெய்வீகத் தன்மையை மறுக்கிறார்!
  2. தேவனாகிய கர்த்தர் (யெகோவா) மட்டுமே ஒரே இறைவன், தாம் இறைவன் இல்லையென்று இயேசு சொல்கிறார்!
  3. இதன் மூலம் புரிவது என்னவென்றால், கர்த்தர் ஒருவரே தேவன் என்று இயேசு பைபிளில் சொல்லிவிட்டார்.
  4. ஆகையால், குர்‍ஆன் சொல்வதைத் தான் இயேசுவும் பைபிளில் சொல்லியுள்ளார், இதனை கிறிஸ்தவர்கள் ஏற்கவேண்டும். இயேசு ஒரு தீர்க்கதரிசி மட்டுமே என்று அவர்கள் நம்பவேண்டும்.

இப்பொழுது, இயேசுவின் மேற்கண்ட கூற்றுப்பற்றியும், முஸ்லிம்கள் எடுத்த‌ முடிவு பற்றியும் ஆய்வு செய்வோம்.

1) இயேசு ஒரு கேள்விக்கு பதில் கொடுத்தார், பழைய ஏற்பாட்டு வசனத்தை மேற்கோள் காட்டினார்

மாற்கு 12ம் அத்தியாயத்தை படிக்கும் போது, 28ம் வசனத்தில் ஒரு யூத தலைவர் இயேசுவிடம் கேள்வி கேட்கிறார்:

28. வேதபாரகரில் ஒருவன் அவர்கள் தர்க்கம்பண்ணுகிறதைக்கேட்டு, அவர்களுக்கு நன்றாய் உத்தரவு சொன்னாரென்று அறிந்து, அவரிடத்தில் வந்து: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்று கேட்டான்.

இவர் கேட்ட கேள்விக்கு இயேசு உபாகமம் 6:4,5ம் வசனங்களை அவர் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மேற்கோள் காட்டுகின்றார். 

உபாகமம் 6:4-5

4. இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். 5. நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.

Deu 6:4-5

Hear, O Israel: The LORD our God is one LORD:  And thou shalt love the LORD thy God with all thine heart, and with all thy soul, and with all thy might.

இப்படி மேற்கோள் காட்டியதால், அவர் தம்முடைய தெய்வீகத் தன்மையை மறுக்கவில்லை. அந்த யூதனின் கேள்விக்கு பழைய ஏற்பாட்டிலிருந்து (தவ்ராத்) இயேசு ஒரு மேற்கோள் காட்டி பதில் அளித்தார். அதன் பிறகு, அந்த யூதன் நேர்மையாக பதில் கொடுத்தான். "நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல" (வசனம் 34) என்று இயேசு அவனை மெச்சிக்கொண்டார், அதன் பிறகு ஒருவரும் அவரிடம் கேள்விகள் கேட்க துணியவில்லை.

முஸ்லிம்களே! நீங்கள் சொல்வதற்கும் இயேசு சொல்வதற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை.

2) “மஸீஹ் யார் - அல்லஹ்வின் சிம்மாசனத்தில் உட்காருபவர்” - அடுத்த வசனத்திலேயே நெத்தியடி கேள்வி கேட்ட இயேசு

இதே மாற்கு அத்தியாயத்தின் 35வது வசனத்தில், தேவாலயத்தில் ஒரு பெரிய சிக்கலான சவாலை யூதர்களிடம் இயேசு கேட்டார்.

மாற்கு 12:35-37

35. இயேசு தேவாலயத்திலே உபதேசம்பண்ணுகையில், அவர்: கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று வேதபாரகர் எப்படிச் சொல்லுகிறார்கள்?

36. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியினாலே சொல்லியிருக்கிறானே.

37. தாவீதுதானே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். அநேக ஜனங்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடே கேட்டார்கள்.

இங்கு இயேசு மறுபடியும் பழைய ஏற்பாட்டின் சங்கீத புத்தகத்தின் 110வது அத்தியாயத்தை சுட்டிக்காட்டுகின்றார்.

மஸீஹ் என்பவர் தாவீதின் குமாரன் (எதிர் காலத்தில் தாவீதின் வம்சத்தில் வருபவர்). அப்படியென்றால் மஸீஹ் என்பவர் ஒரு மனிதனாகத் தானே இருக்கவேண்டும்?  ஆனால், தாவீது "கர்த்தர் என் ஆண்டவரோடு இப்படி சொன்னார்" என்று சங்கீதத்தில் (110) சொல்லியிருக்கிறார்.

சங்கீதம் 110:1. கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.

இந்த சங்கீதத்தின் படி, கர்த்தர் என்று தாவீது குறிப்பிட்டது, யெகோவா தேவனைத் தான். எபிரேய மூல மொழியில் “யெகோவா” என்பதைத் தான் தமிழில் "கர்த்தர்" என்று மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். இரண்டாவதாக, தாவீது "என் ஆண்டவரை நோக்கி" என்று எழுதுகிறார். இந்த "ஆண்டவர்" யார்? இவர் தான் "கிறிஸ்து அல்லது மஸீஹ்" என்று யூதர்கள் கூறுகிறார்கள்.

இப்போது இயேசு தம்முடைய தெய்வீகத்தை எப்படி வெளிப்படுத்துகிறார் என்று பாருங்கள்.

ஹலோ! யூதர்களே! நீங்கள் மஸீஹ் என்பவர் வேதத்தின் படி தாவீதின் வம்சத்தில் வருபவர் என்று சொல்கிறீர்கள், ஆனால், அதே தாவீது தன் வம்சத்தில் வரப்போகும் "அந்த மஸீஹ்வை" ஆண்டவர் என்றுச் சொல்லியுள்ளார். மேலும், கர்த்தரே அவரை நோக்கி, "நான் உங்க எதிரிகளை உம் பாதபடியாக்கி போடும் வரை, நீங்க என் வலது பக்கத்தில் உட்காரும்" என்றுச் சொன்னார் என்று தாவீது கூறினார்.

இதன் அர்த்தமென்ன?  மஸீஹ் என்பவர் ஒரு இறைவன் என்பது தானே, கர்த்தருக்கு சமமானவர் என்பது தானே!

முஸ்லிம்களுக்கு இதுவரை சொன்னது புரியவில்லையென்றால், மேற்கண்டவற்றை சுருக்கமாக புரியும் வண்ணம் தருகிறேன் படியுங்கள்:

"அல்லாஹ் ஒரு நபரைப் பார்த்து, நான் உம்முடைய எதிரிகளை உமக்கு பாதபடியாக்கும் வரை, நீர் என் வலது சிம்மானத்தில் உட்காரும் என்று சொன்னால்" நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

அல்லாஹ் பேசிய அந்த நபர் ஒரு மனிதர் என்று நினைப்பீர்களா? ஒரு நபி என்று நினைப்பீர்களா? அல்லது அல்லாஹ்விற்கு சமமானவர் என்று நினைப்பீர்களா? அல்லாஹ்வின் சிம்மாச‌னத்திலே ஒருவரை தமக்கு சமமாக‌ உட்கார அல்லாஹ் அனுமதித்தால், அவர் யார்? மேலும், அந்த நபருக்காக நான்(அல்லாஹ்) வேலை செய்கிறேன், நான் சென்று உம் எதிர்களை ஒரு கைப்பார்க்கிறேன் என்றுச் சொன்னால் அந்த நபர் யாராக இருக்க முடியும்?

தலை சுற்றுகிறதா? இதைத் தான் அன்று இயேசு தம் தெய்வீகத்தன்மையை கேள்வி கேட்ட யூதர்களிடம் கேட்டார். வார்த்தைக்கு வார்த்தை "ஈஸா அல் மஸீஹ்" என்று அடிக்கடி குர்‍ஆனில் இயேசுவை குறிப்பிடும் அல்லாஹ், அந்த மஸீஹ்வை தம் சிம்மாசனத்தில் தமக்கு சமமாக‌ உட்கார வைத்துவிட்டு, அந்த மஸீஹ்வுடைய எதிரிகளை ஒரு கைப்பார்த்து வருகிறேன் என்றுச் சொல்லும் போது, "அல்லாஹ்விற்கு, மஸீஹ்விற்கும்" என்ன உறவு இருக்கும் என்று உங்கள் புத்திக்கு எட்டுகின்றதா?

மாற்கு 12வது அத்தியாயத்தின் 29வது வசனத்தை மட்டும் எடுத்து உதாரணம் காட்டும் முஸ்லிம்கள், இன்னும் கொஞ்சம் ஆறு வசனங்களை தாண்டி படித்துயிருந்தால், அங்கு இயேசு "தம்மை யெகோவாவின் சிம்மாசனத்தில் உட்காருபவர்" என்பதை தாவீதின் சங்கீதங்களிலிருந்தே (ஜபூர்) எடுத்துக் காட்டியுள்ளார் என்பதை கவனித்து இருந்திருப்பார்கள்.

3) முழூ அத்தியாயத்தையும் படியுங்கள் முஸ்லிம்களே! அரைகுறையாக படிக்கவேண்டாம்

பைபிளிலிருந்து ஒரு வசனத்தை மட்டும் எடுத்து "மேற்கோள் காட்டும் போது எப்படிப்பட்ட பிழையை முஸ்லிம்கள்" செய்துள்ளார்கள் என்பதை நாம் கவனிக்கமுடியும். மாற்கு 12ம் அத்தியாயத்தை முஸ்லிம்கள் முழுவதுமாக படித்துயிருந்திருந்தால், அவர்களின் கண்கள் தெளிவடைந்து இருக்கும். தங்கள் சந்தேகங்களுக்கு பதில் கிடைத்து இருந்திருக்கும்.  

மாற்கு 12வது அத்தியாயம், இயேசுவின் தெய்வீகத்தன்மையை பல வகைகளில் வெளிப்படுத்தும் அத்தியாயம் ஆகும். எப்படி?

வசனங்கள் 1-12 வரை: 

இயேசு யூதர்களைப் பற்றி, கர்த்தரைப் பற்றி, தம்மைப் பற்றி ஒரு அருமையான உவமையைச் சொன்னார்.

கர்த்தர் ஒரு திராட்சை தோட்டக்காரர், அந்த தோட்டத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள் யூதர்கள், தொட்டக்காரரின் "ஊழியர்களாக"‌ லாபத்தை வாங்கிவர வந்தவர்கள், இயேசுவிற்கு முன்பு வந்த தீர்க்கதரிசிகள் ஆவார்கள். கடைசியாக தம் குமாரனையே அந்த தோட்டக்காரர் (கர்த்தர்) அனுப்பினார். அந்த குமாரரை(இயேசுவை) குத்தைக்கார்கள் கொன்றார்கள், ஏனென்றால் அவரும் அந்த தோட்டத்துக்கு(உலகத்துக்கு) சொந்தக்காரர். அதன் பிறகு அந்த தோட்டக்காரர் வந்து அந்த குத்தைக்காரர்களை அழித்தார்.

இயேசுவின் தெய்வீகத்தன்மையை விளக்க இதைவிட ஒரு உவமை வேண்டுமா? முஸ்லிம்களே உங்களுக்கு புரிகின்றதா?

வசனங்கள் 13-17 வரை: 

இயேசுவின் ஞானத்திற்கு ஒரு சான்று. பேச்சிலே இயேசுவை பிடிக்கவேண்டும் என்று விரும்பிய யூதர்களிடம் சிக்ஸர் அடித்து, மைதானத்திற்கு வெளியே பந்தை விளாசிய இயேசு.

வசனங்கள் 18-34 வரை: 

அதன் பிறகு தான் முஸ்லிம்கள் மேற்கோள் காட்டிய 12:29ம் வசனத்தின் உரையாடல் வருகின்றது.

வசனங்கள் 35-40 வரை: 

மஸீஹ் யார் என்று கேட்டு, தம் தெய்வீகத்தன்மைக்கு சான்றாக, சங்கீத புத்தகத்தின் வசனங்களை மேற்கோள் காட்டி யூதர்களின் வாயை அடைத்தார்.

வசனங்கள் 40-44 வரை: 

ஒரு ஏழை விதவையின் காணிக்கையை மெச்சிக்கொண்டு போதனை செய்தார் இயேசு

முடிவுரை:

ஒரு முறை மாற்கு 12வது அத்தியாயத்தை படித்து பாருங்கள்.

இயேசு ஒரு உவமையின் மூலமாக தம் தெய்வீகத்தன்மையை காட்டினார், மேலும் சங்கீத புத்தகத்திலிருந்தும் (ஜபூர்) தம் தெய்வீகத்தை யுதர்களுக்கு உணர்த்தினார். 

மாற்கு 12:29ம் வசனத்தை நம்பும் முஸ்லிம்கள், முழு அத்தியாயத்தையும் நம்பவேண்டுமல்லவா?

29ம் வசனத்தில் இயேசு உண்மையைச் சொல்கிறார் என்று நம்பும் முஸ்லிம்கள், 35வது வசனத்திலும், இயேசு உண்மையைச் சொல்கிறார் என்று நம்பவேண்டுமல்லவா? 

இவ்வத்தியாயத்தின் முதல் 12 வசனங்களில் இயேசு சொன்ன உவமையைப் பற்றி உங்கள் கருத்து என்ன முஸ்லிம்களே! மஸீஹ் பற்றி சங்கீதம் (110) சொல்வதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

இந்த கட்டுரையில் , முஸ்லிம்கள் தவறாக புரிந்துக்கொண்ட ஒரு வசனத்தை ஆய்வு செய்தோம், அடுத்த கட்டுரையில் இன்னொரு வசனத்தை ஆய்வு செய்வோம்.

இந்த கட்டுரைக்கு உதவிய ஆக்கில கட்டுரை: http://www.faithbrowser.com/top-10-misinterpreted-verses-by-muslims/

தேதி: 5th Nov 2020


ஃபெயித் ப்ரவுசர்(Faith Browser) கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்