2016 ரமளான் (12) – நிலமெல்லாம் இரத்தம் – குர்ஆனை பொய்யாக்கும் ஹதீஸ்கள் – முஹம்மது அற்புதங்கள் செய்தாரா?

1(15. அந்த மூன்று வினாக்கள்)

[நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திற்கு கொடுக்கப்பட்ட முந்தைய விமர்சனங்களை படிக்க இங்கு சொடுக்கவும்]

மதிப்பிற்குரிய பாரா அவர்களுக்கு,

உங்களுடைய தொடர்களை படிக்க படிக்க பல சந்தேகங்கள் எனக்கு எழுகின்றன. நீங்கள் எழுதியவைகள் அனைத்தும் உண்மையிலேயே சரித்திர விவரங்கள் என்று நீங்கள் அறிந்துக்கொண்டு புரிந்துக்கொண்டு எழுதினீர்களா? அல்லது கவிதைக்கு பொய்யழகு என்றுச் சொல்வார்களே, அது போல தொடர் கட்டுரைகளுக்கும் பொய்யழகு என்ற புதிய விவரத்தை உலகிற்கு தெரிவிப்பதற்காக எழுதினீர்களா? என்ற சந்தேகம் வருகின்றது. முஹம்மது செய்த ஒரு அற்புதம் பற்றி நீங்கள் எழுதியவைகளை இந்த கட்டுரையில் ஆய்வு செய்யப்போகிறோம். இதன் அடிப்படையில் பல கேள்விகளை முஸ்லிம்களிடமும் உங்களிடமும் கேட்கவேண்டியுள்ளது. 

பாரா அவர்கள் எழுதியவைகள்:

//ஒரு பவுர்ணமி தினத்தன்று முகம்மதுவிடம் சென்று, "உண்மையிலேயே நீங்கள் ஓர் இறைத்தூதர் என்று நாங்கள் எப்படி நம்புவது? உங்களால் இந்த முழுநிலவைப் பிளந்து காட்ட முடியுமா?" என்று சவால் விட்டார்கள். "பார், இந்த முகம்மது எப்படித் திண்டாடப்போகிறார்!" என்று தம் குலத்தின் இளவல்களைப் பார்த்துப் பெருமிதமாகப் புன்னகை புரிந்தார்கள்.ஆனால், முகம்மது கண் மூடி தியானித்த மறுகணம் அந்த அற்புதம் நடக்கத்தான் செய்தது. பவுர்ணமி நிலவு இரண்டாக இரு பிறைகளாகப் பிரிந்து காட்சியளித்தது! உடனே, முகம்மது ஒரு மந்திரவாதி, கண்கட்டு வித்தை செய்கிறார் என்று அலறத் தொடங்கிவிட்டார்கள் குறைஷிகள்.ஒன்றல்ல; இதைப்போல் வேறு பல சம்பவங்களும் முகம்மதின் வாழ்க்கையில் நடந்ததற்கான சரித்திரக் குறிப்புகள் இன்றும் வாசிக்கக் கிடைக்கின்றன. (நிலமெல்லாம் இரத்தம், 15. அந்த மூன்று வினாக்கள்) //

இன்னும் இப்படிப்பட்ட பல அதிசயங்கள் முஹம்மதுவின் வாழ்வில் நடந்ததாக ‘சரித்திரக் குறிப்புக்கள்’ சொல்கின்றன என்று எழுதியுள்ளீர்கள். ”ஹதீஸ்கள்” என்பது சரித்திரம் என்று நினைக்கின்றீர்களா? ஹதீஸ்களில் முஹம்மது சொல்லாத பல கட்டுக்கதைகள் இன்னும் இருக்கின்றது என்பதை நீங்கள் அறியவில்லை, ஆனால் பல இலட்ச முஸ்லிம்கள் அதனை அறிந்துக்கொண்டு ஒவ்வொரு ஹதீஸையும் புறக்கணித்துக்கொண்டு வருகிறார்கள்.  சரி, விஷயத்துக்கு வருவோம். 

1) முஹம்மது சந்திரனை பிளந்துக்காட்டி அற்புதம் செய்து, தன் நபித்துவத்தை குறைஷிகளிடம் நிரூபித்தது உண்மையா?

உங்களுடைய மேற்கண்ட வரிகளின்படி, முஹம்மது ஒரு பயங்கரமான அற்புதம் செய்துக்காட்டி, தான் அல்லாஹ்வின் இறைத்தூதர் என்று நிரூபித்தார். இதற்கு ஆதாரமாக குர்-ஆன் வசனமும், ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸும் உள்ளது. குர்-ஆன் 54:1ம் வசனத்தை நான்கு குர்-ஆன் தமிழாக்கங்களில் காணலாம்.

54:1. (இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் பிளந்து விட்டது. (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)

54:1. மறுமை நெருங்கிவிட்டது. (அதற்கு அத்தாட்சியாக) சந்திரனும் பிளந்து விட்டது. (அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)

54:1. மறுமைக்கான நேரம் நெருங்கிவிட்டது. மேலும், சந்திரன் பிளந்து விட்டது. (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்)

54:1 அந்த நேரம்1 நெருங்கிவிட்டது, சந்திரமும் பிளந்துவிட்டது422 (பிஜே தமிழாக்கம்).

சந்திரன் பிளக்கப்பட்டதைப் பற்றி முஸ்லிம் ஹஹீஸில் பதிவுசெய்யப்பட்டுள்ள விவரங்கள்:

5395. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நான் இறைவனின் தூதர் என்பதற்கு) நீங்கள் சாட்சிகளாக இருங்கள்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. 

5396. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நாங்கள் (மக்காவிலுள்ள) "மினா" எனுமிடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. (பிளவுண்ட சந்திரனின்) ஒரு துண்டு (ஹிரா) மலைக்கு அப்பா(ல் மேற்பகுதியி)லும் மற்றொரு துண்டு மலைக்குக் கீழேயும் சென்றது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், "(நான் இறைவனின் தூதர் என்பதற்கு) நீங்கள் சாட்சிகளாக இருங்கள்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. 

5397. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. அந்த (ஹிரா) மலை,சந்திரனின் ஒரு துண்டை மறைத்தது. மற்றொரு துண்டு, மலைக்கு மேலே இருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! நீயே சாட்சியாக இரு" என்று சொன்னார்கள்.

- இப்னு உமர் (ரலி) அவர்கள் வாயிலாகவும் மேற்கண்ட ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர் களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

ஆயினும் இப்னு அதீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நீங்கள் சாட்சிகளாக இருங்கள்; நீங்கள் சாட்சிகளாக இருங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரண்டு முறை) கூறியதாக இடம்பெற்றுள்ளது. 

5398. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்காவாசிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். ஆகவே,சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளப்பதை (தாம் இறைவனின் தூதர் என்பதற்குச் சான்றாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. 

5399. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அபூதாவூத் அத்தயாலிசீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சந்திரன் பிளந்தது" என்று இடம்பெற்றுள்ளது. 

5400. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சந்திரன் பிளந்தது. 

இப்படி குர்-ஆனும் ஹதீஸ்களும் சந்திரன்  பிளந்ததைப் பற்றி சாட்சி சொல்வதினால் தான், முஸ்லிம்களாகிய நாங்கள் இதனை நம்புகிறோம் என்று முஸ்லிம்கள் கூறலாம்.  அற்புதங்களை நம்புவதில் எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, ஆனால், இந்த அற்புதம் முஹம்மதுவின் வாழ்வில் நடந்ததா? என்பது தான் என் கேள்வி.  இந்த அற்புதத்தை நம்புபவர்கள், குர்-ஆனை பொய்யாக்குபவர்களாக இருக்கிறார்கள் என்பது தான் என் கருத்து.  குர்-ஆன் பல இடங்களில் ”முஹம்மது அற்புதங்கள் செய்யமாட்டார், அவரின் நபி என்பதற்கு ஆதாரம் குர்-ஆன் மட்டுமே” என்றுச் சொல்கிறது. 

2) முஹம்மது அற்புதங்கள் செய்யமாட்டார், அவர் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே என்று அடித்துச் சொல்லும் குர்-ஆன்:

முஸ்லிம்களின் நம்பிக்கைப்படி குர்-ஆன் பிழையற்ற வேதமாகும். அடுத்தபடியாகத் தான் ஹதீஸ்கள். இந்த ஹதீஸ்களில் சிலவற்றை இன்றும் முஸ்லிம்கள் மறுக்கிறார்கள் ஏனென்றால், அவைகளில் கட்டுக்கதைகளும், பொய்களும் அதிகமாக இருப்பதினால் தான்.  முஹம்மது தன் நபித்துவத்தை நிரூபிக்க எப்போதாவது அற்புதம் செய்தாரா என்பதை குர்-ஆனிலிருந்து பார்ப்போம்.

அ) அற்புதங்கள் செய்யாமல் தட்டிக்கழிக்கும் அல்லாஹ்.

முஹம்மதுவிடம் குறைஷிகள் மற்றும் யூதர்கள் அற்புதங்களைக் கேட்டார்கள். நீங்கள் அற்புதங்களைச் செய்தால், உங்களை ஒரு நபி என்று நம்புவதற்கு வாய்ப்பு உண்டாகும் என்று அவர்கள் சொன்னார்கள். எத்தனை முறை இப்படி கேட்டாலும், அல்லாஹ் ஒரு அற்புதமும் செய்யாமல் எல்லா நேரங்களிலும் தட்டிக்கழித்தார். இதற்கு காரணங்களையும் சொன்னார், அதாவது, முந்தைய கால மக்களைப்போல, இவர்களும்  நம் அத்தாட்சிகளை ஏற்கமாட்டார்கள் எனவே, அவைகளைச் செய்வதினால் ஒரு நன்மையும் இல்லை. எனவே, முஹம்மதுவின் மூலமாக ஒரு அற்புதத்தையும் செய்வதில்லை என்று கராராக குர்-ஆனில் அல்லாஹ் சொல்லிக்காட்டுகின்றான்.   கீழ்கண்ட குர்-ஆன் வசனங்களில் அல்லாஹ் சொல்லும் காரணங்களைக் காணுங்கள். ஒரு பேச்சுக்காகவாவது ஒரே ஒரு அற்புதமும் கூட செய்துக் காட்ட அல்லாஹ் விரும்பவில்லை.  

(முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கத்திலிருந்து வசனங்கள்)

2:118. இன்னும் அறியாதவர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ் ஏன் நம்மிடம் பேசவில்லை; மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை?” என்று; இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப்போலவே - தான் கூறினார்கள். இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே தான். ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்.

2:145. வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உம் கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள்;; நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றுபவர் அல்லர்; இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர்; எனவே (இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.

6:37. (நமது விருப்பம் போல்) ஓர் அத்தாட்சி அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது இறக்கப்பட வேண்டாமா? என்று அவர்கள் கேட்கிறார்கள்; (நபியே!) நீர் கூறும்: “நிச்சயமாக அல்லாஹ் (அத்தகைய) ஓர் அத்தாட்சியை இறக்கி வைக்க வல்லமையுடையவனே; எனினும் அவர்களில் பெரும்பாலோர் அதை அறிந்து கொள்வதில்லை”

6:109. (நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்கள், அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து, தங்களுக்கு ஓர் அத்தாட்சி வந்துவிடுமானால் தாம் நிச்சயமாக அதைக் கொண்டு ஈமான் கொள்வதாக கூறுகிறார்கள். (நபியே!) அவர்களிடம்) நீர் கூறும்: அத்தாட்சிகள் யாவும் அல்லாஹ்விடமே இருக்கின்றன. அந்த அத்தாட்சிகள் வரும்பொழுது நிச்சயமாக அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள் என்பதை உங்களுக்கு எது அறிவித்தது?

முஹம்மது தம்மிடம் அற்புதம் எதிர்ப்பார்க்கும் மக்களிடம் என்ன சொல்லவேண்டும் என்று அல்லாஹ் முஹம்மதுவிற்கு இந்த பத்தாவது ஸூராவில் கட்டளையிடுகின்றான். அதாவது அற்புதங்கள் அல்லாஹ்விடம் உள்ளன, அவைகளுக்காக நீங்களும் காத்திருங்கள், நானும் காத்திருக்கிறேன் என்று முஹம்மது சொல்லவேண்டுமாம்.

10:20. “மேலும் அவர்கள், இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் கோரும் ஏதேனும்) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள். அதற்கு “மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

இரண்டாவது ஸூரா மதினாவில் இறங்கியதாகும் (மதனீ). சந்திரன் பிளந்த அற்புதம் உள்ளது என்றுச் சொல்லும் ஸூரா (54) மக்காவில் இறங்கியதாகும். மக்காவிலேயே ஆரம்ப காலத்தில் (முஹம்மது தம்மை நபியாக காண்பித்துக்கொண்ட நான்கு ஆண்டுகளுக்குள்), முஹம்மது இந்த ஒரு அற்புதம் செய்திருந்தால், ஏன் மதினாவில் இருக்கும் போது இறங்கிய இரண்டாவது ஸூராவில் அற்புதங்கள் எல்லாம் செய்யமுடியாது என்று அல்லாஹ் சொல்லப்போகிறான்? இதிலிருந்து நாம் எவைகளை அறிகிறோம்? முஹம்மது மக்காவில் இருக்கும் போது நடந்ததாகச் சொல்லும் அற்புதம் நடக்கவில்லை என்பதைத் தானே. மக்காவில் செய்த அற்புதத்தை அல்லாஹ் மறந்துவிட்டிருக்கலாம் அல்லவா? என்று முஸ்லிம்கள் சந்தேகப்படமாட்டார்கள் என்று நினைக்கிறேன். 

ஆ) முஹம்மது வெறும் எச்சரிக்கை செய்பவர், அற்புதங்கள் செய்பவர் அல்ல

குர்-ஆன் 13:7ஐ பாருங்கள், முஹம்மது வெறும் ”அச்சமூட்டி எச்சரிப்பவர் மட்டுமே” என்றுச் சொல்கிறது. மக்கள் எவ்விதமான அத்தாட்சி, அற்புதங்கள் கேட்டாலும், அதை முஹம்மது மூலமாக செய்துக் காட்ட முடியாது என்று அல்லாஹ் சொல்லிவிடுகின்றான்.

13:7. இன்னும் (நபியே! உம்மைப்பற்றி இந் நிராகரிப்போர் “அவருக்கு அவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பும்) அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள்; நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே ஆவீர், மேலும், ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டியுண்டு.  

”முஹம்மதுவே, மக்கள் ஓயாமல் அற்புதங்கள் கேட்கிறார்கள், ஆனால், நான் செய்வதில்லை, இதற்காக நீர் துக்கப்படவேண்டாம். ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும், உம்மை அற்புதம் செய்ய நான் அனுப்பவில்லை, வெறும் எச்சரிக்கை செய்யவே அனுப்பினேன் என்பதை மறக்கவேண்டாம்” என்று அல்லாஹ் முஹம்மதுவிடம் கூறி அவரை ஆறுதல்படுத்துகிறான், பார்க்க குர்-ஆன் 11:12.

11:12. (நபியே! நம் வசனங்களை அவர்கள் செவிமடுப்பதில்லையே எனச் சடைந்து) வஹீ மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டவற்றில் சிலவற்றை விட்டுவிட எண்ணவோ, “அவர் மீது ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா? அல்லது அவருடன் ஒரு மலக்கு வர வேண்டாமா?” என்று அவர்கள் கூறுவதினால் உம் இதயம் (சஞ்சலத்தால்) இடுங்கியிருக்கவோ கூடும்; நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறில்லை; அல்லாஹ் எல்லா பொருட்களின் மீதும் பொறுப்பாளனாக இருக்கிறான்.

உம்மிடம் அற்புதங்கள் கேட்பவர்களிடம், ” நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிகெடச்செய்கிறான்; தன் பால் எவர் திரும்புகிறாரோ அத்தகையோருக்கு நேர் வழிகாட்டுகிறான்” என்றுச் சொல்லிவிடுங்கள் என்று அல்லாஹ் சொல்கின்றான், பார்க்க 13:27.

13:27. “இவருக்கு இவருடைய இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சி இறக்கி வைக்கப்படக் கூடாதா” என்று நிராகரிப்போர் கூறுகிறார்கள், (நபியே!) நீர் கூறும்: “நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிகெடச்செய்கிறான்; தன் பால் எவர் திரும்புகிறாரோ அத்தகையோருக்கு நேர் வழிகாட்டுகிறான்” என்று

இ) மக்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காவே  அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை:

உம்முடைய நபித்துவத்தை நிரூபிக்க நான் அத்தாட்சிகளை அனுப்பமாட்டேன். ஆனால், மக்களை பயமுறுத்தவும், எச்சரிக்கைச்  செய்யவுமே அற்புதங்களைச் செய்வேன் என்று தெளிவாக அல்லாஹ் சொல்கின்றான். பார்க்க குர்-ஆன் 17:59

17:59. (நம்முடைய அத்தாட்சிகளை இவர்களுக்கு) முந்தியவர்களும் பொய்ப்பித்ததைத் தவிர (வேறு எதுவும் இவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்ப நம்மைத் தடுக்கவில்லை; (இதற்கு முன்) நாம் “ஸமூது” கூட்டத்தாருக்கு ஒரு பெண் ஒட்டகத்தைக் கண்கூடான அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம்; அவர்களோ (வரம்பு மீறி) அதற்கு அநியாயம் செய்தனர்; (மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பதற்காவே அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை.

மக்கள் எத்தனை முறை கேட்டலும் சரி, அல்லாஹ் முஹம்மதுவின் நபித்துவத்தை நிரூபிக்க அற்புதங்களைச் செய்வதாக இல்லை. இதனை மேற்கண்ட வசனங்கள் தெளிவாகச் சொல்கின்றன. இதனை எந்த ஒரு முஸ்லிமாவது மறுக்கமுடியுமா?

ஈ) குர்-ஆன் மட்டுமே அற்புதமாகும், இது போதாதா அவர்களுக்கு?

இன்னும் ஒரு இடத்தில் அல்லாஹ் மிகவும் தெளிவாக மறுப்பதைக் காணமுடியும். முஹம்மது வெறும் எச்சரிக்கை செய்பவர், அவர் மூலமாக நான் அற்புதங்கள் செய்யமாட்டேன், அதனால் பயனுமில்லை. ஆனால், குர்-ஆன் என்ற அற்புதத்தை அவர் மூலமாக கொடுத்து இருக்கிறேன். இந்த குர்-ஆன் அவர்களுக்கு போதாதா? என்று நச்சென்று அல்லாஹ் சொல்கிறான்.

29:50. “அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது அத்தாட்சிகள் ஏன் இறக்கப்படவில்லை?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; “அத்தாட்சிகளெல்லாம் அல்லாஹ்விடம் உள்ளன; ஏனெனில் நான் வெளிப்படையாக அச்ச மூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

29:51. அவர்களுக்கு ஓதிக்காட்டப்படும் இவ்வேதத்தை நாம் உம் மீது இறக்கியிருக்கிறோம் என்பது அவர்களுக்குப் போதாதா? நிச்சயமாக அ(வ் வேதத்)தில் ரஹ்மத்தும், ஈமான் கொண்ட சமூகத்தாருக்கு (நினைவூட்டும்) நல்லுபதேசமும் இருக்கின்றன.  (முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம்)

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

29:50. அன்றி ("தாங்கள் விரும்புகிறபடி) சில அத்தாட்சிகள் அவருடைய இறைவனால் அவருக்கு அளிக்கப்பட வேண்டாமா?" என்று இவ்வக்கிரமக்காரர்கள் கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அத்தாட்சிகள் எல்லாம் அல்லாஹ்விடத்தில்தான் இருக்கின்றன. (என்னிடமில்லை.) நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவன் மட்டும்தான்."

29:51. (நபியே!) இவ்வேதத்தை மெய்யாகவே நாம் உங்கள் மீது இறக்கி வைத்திருக்கிறோம் என்பதற்கு அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படும் இவ்வேதமே போதுமான அத்தாட்சியல்லவா? ஏனென்றால், இதில் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக (இறைவனுடைய) அருளும் இருக்கின்றது; (பல) நல்லுபதேசங்களும் இருக்கின்றன.

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:

29:50. இவர்கள் கேட்கின்றார்கள், “இவருடைய இறைவனிடமிருந்து இவருக்கு ஏன் சான்றுகள் இறக்கியருளப்படவில்லை” என்று! அதற்கு நீர் கூறும்: “சான்றுகள் அல்லாஹ்விடம் உள்ளன. நானோ தெள்ளத்தெளிவாக எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன்.”

29:51. அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுகின்ற வேதத்தை உம் மீது நாம் இறக்கியருளி இருப்பது அவர்களுக்குப் போதுமான சான்றாக இல்லையா? திண்ணமாக, நம்பிக்கை கொள்ளும் சமூகத்தினர்க்கு இதில் கருணையும் நல்லுரையும் இருக்கின்றன.

மேற்கண்ட வசனங்களில், இஸ்லாமை நம்பாதவர்கள் சொல்லும் குற்றச்சாட்டை அல்லாஹ் மறுக்காமல் அதனை ஏற்றுக்கொள்கின்றான். முஹம்மதுவினால் அற்புதங்கள் செய்யமுடியாதது உண்மை தான், ஏனென்றால் அவர் வெறும் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே, அற்புதங்கள் செய்பவர் அல்ல என்று அல்லாஹ் சொல்கின்றான். மேலும், இதனை அற்புதங்கள் கேட்கும் மக்களிடம் சொல்லும் படி முஹம்மதுவிற்கும் கட்டளையிடுகின்றான்.

3) முஹம்மது அற்புதங்கள் செய்பவரல்ல என்றுச் சொல்லும் இஸ்லாமிய அறிஞர் ”முஹம்மது அஸத்”

முஹம்மது அஸத் என்பவர் எழுதிய விரிவுரையில், முஹம்மது கடைசி மற்றும் பெரிய நபியாக இருக்கலாம், ஆனால், முந்தைய காலத்தில் நபிகள் செய்தது போல அற்புதகங்கள் செய்பவர் அல்ல என்றுச் சொல்கிறார்.

குர்-ஆன் 17:59க்கு இவர் எழுதிய விளக்கவுரை:

Note 71 (Quran Ref: 17:59 )

This highly elliptic sentence has a fundamental bearing on the purport of the Qur'an as a whole. In many places the Qur'an stresses the fact that the Prophet Muhammad, despite his being the last and greatest of God's apostles, was not empowered to perform miracles similar to those with which the earlier prophets are said to have reinforced their verbal messages. His only miracle was and is the Qur'an itself - a message perfect in its lucidity and ethical comprehensiveness, destined for all times and all stages of human development, addressed not merely to the feelings but also to the minds of men, open to everyone, whatever his race or social environment, and bound to remain unchanged forever. Since the earlier prophets invariably appealed to their own community and their own time alone, their teachings were, of necessity, circumscribed by the social and intellectual conditions of that particular community and time; and since the people to whom they addressed themselves had not yet reached the stage of independent thinking, those prophets stood in need of symbolic portents or miracles (see surah 6, note 94) in order to make the people concerned realize the inner truth of their mission. The message of the Qur'an, on the other hand, was revealed at a time when mankind (and, in particular, that part of it which inhabited the regions marked by the earlier, Judaeo-Christian religious development) had reached a degree of maturity which henceforth enabled it to grasp an ideology as such without the aid of those persuasive portents and miraculous demonstrations which in the past, as the above verse points out, only too often gave rise to new, grave misconceptions.(Quran Ref: 17:59 )

மேலும் குர்-ஆன் 54:1ம் வசனத்துக்கு இவர் கொடுத்த விளக்கவுரையை படிக்கவும். சந்திரனின் பிளவு பற்றி குர்-ஆன் சொல்வது, எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்ச்சியாகும், அது முஹம்மது காலத்தின் அற்புதமல்ல என்றுச் சொல்கிறார்:

1 Most of the commentators see in this verse a reference to a phenomenon said to have been witnessed by several of the Prophet's contemporaries. As described in a number of reports going back to some companions, the moon appeared one night as if split into two distinct parts. While there is no reason to doubt the subjective veracity of these reports, it is possible that what actually happened was an unusual kind of partial lunar eclipse, which produced anequally unusual optical illusion. But whatever the nature of that phenomenon, it is practically certain that the above Qur'an-verse does not refer to it but, rather, to a future event: namely, to what will happen when the Last Hour approaches. (The Qur'an frequently employs the past tense to denote the future, and particularly so in passages which speak of the coming of the Last Hour and of Resurrection Day; this use of the past tense is meant to stress the certainty of the happening to which the verb relates.) Thus, Raghib regards it as fully justifiable to interpret the phrase inshaqqa 'l-qamar ("the moon. is split asunder") as bearing on the cosmic cataclysm - the end of the world as we know it - that will occur before the coming of Resurrection Day (see art. shaqq in the Mufradat). As mentioned by Zamakhshari, this interpretation has the support of some of the earlier commentators; and it is, to my mind, particularly convincing in view of the juxtaposition, in the above Qur'an-verse, of the moon's "splitting asunder" and the approach of the Last Hour. (In this connection we must bear in mind the fact that none of the Qur'anic allusions to the "nearness" of the Last Hour and the Day of Resurrection is based on the human concept of "time".)

4) குர்-ஆன் 54:1, சந்திரன் பிளந்ததைச் சொல்கின்றதா? (அ) சந்திரன் பிளக்கப்போவதைச் சொல்கின்றதா?

முஹம்மது வெறும் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே, அவர் முந்தைய நபிகளைப்போல அற்புதங்கள் செய்பவர் அல்ல என்று அல்லாஹ் பல முறை சொல்லிவிட்டான். அல்லாஹ் ஒருமுறை சொன்னால், நூறு முறை சொன்னது போல் ஆகாதா? ஆனால், குர்-ஆனில் ஒரு முறை அல்ல பல முறை சொல்லிவிட்டான். 

ஆனால், இந்த முஸ்லிம் ஹதீஸ் ஏன் அல்லாஹ் சொன்னதற்கு மாற்றமாகச் சொல்கிறது?  குர்-ஆனில் சொல்லப்பட்டதற்கு எதிராக ஹதீஸ் சொல்கிறது என்று வைத்துக்கொள்வோம். முஸ்லிம்கள் இப்போது என்ன செய்வார்கள்? குர்-ஆனின் பல வசனங்களை மறுப்பார்களா? அல்லது ஹதீஸை மறுப்பார்களா?

நபித்தோழர்கள் இப்படி முஹம்மது மீது இட்டுக்கட்டுவார்களா? என்று முஸ்லிம்கள் கேள்வி கேட்டால், அதற்காக, அல்லாஹ் குர்-ஆனில் இட்டுக்கட்டினான் என்று சொல்வீர்களா? அல்லாஹ்வின் வார்த்தையை புறக்கணித்துவிடுவீர்களா?

முஸ்லிம்களிடம் கேட்கவேண்டிய கேள்விகள்: முஹம்மது அற்புதங்கள் செய்வாரா? என்று கேள்வி கேட்டால், “அவர் செய்யமாட்டார் என்று குர்-ஆன் சொல்கிறது”, ”அவர் செய்வார் என்று ஹதீஸ்கள்” சொல்கிறது. இதில் எதனை முஸ்லிம்கள் அங்கீகரிப்பார்கள்? குர்-ஆன் சொல்வதையா? அல்லது ஹதீஸ்கள் சொல்வதையா?

முஸ்லிம் ஹதீஸ் எப்போது தொகுக்கப்பட்டது? ஹிஜ்ரி 200க்கு பிறகு, அதாவது முஹம்மது மரித்த 200 ஆண்டுகளுக்கு பிறகு தொகுக்கப்படுகின்றது. இமாம் முஸ்லிம் ஹிஜ்ரி 204ல் பிறக்கிறார், 261ல் மரிக்கிறார்.[1]

முஹம்மதுவிற்கு பிறகு வந்தவர்கள், அவரை நேசிப்பவர்கள் பல கட்டுக்கதைகளை அவர் மீது சொல்லியிருக்கிறார்கள், குர்-ஆனின் 54:1ம் வசனம் சொல்வது எதிர்காலத்தில் நடக்கும் என்பதை அறியாமல், தாங்களாகவே இட்டுக்கட்டியுள்ளார்கள். இந்த கட்டுக்கதைகளுக்கு முஹம்மதுவின் தோழர்களின் பெயர்களையும் பயன்படுத்திக்கொண்டுள்ளார்கள். இப்படிப்பட்ட ஹதீஸ்களுக்கு சரியான சங்கிலித்தொடர் இருக்கத்தான் செய்யும், ஆனால், குர்-ஆனோடு மோதுகின்றது என்பதை முஸ்லிம்கள் கவனிக்கவேண்டாமா?  குர்-ஆனின் வசனங்களை கவனிக்கும்போது, முஹம்மது அல்லாஹ்விடம் வேண்டிக்கொண்டு சந்திரனை பிளந்தார் என்ற அற்புதமானது, ஒரு பொய்யான ஹதீஸாகும், குர்-ஆனோடு மோதும் ஹதீஸாகும். 

அடுத்தபடியாக, அந்த ஹதீஸ்களை மேலோட்டமாக படிக்கும் போதும், அவைகளில் தவறுகள் இருப்பதை காணமுடியும். இன்னொரு முறை அவ்வதீஸ்களை பதித்து, என் கேள்விகளை முன்வைக்கிறேன்.

5395. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நான் இறைவனின் தூதர் என்பதற்கு) நீங்கள் சாட்சிகளாக இருங்கள்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. மேலும் பார்க்க ஹதீஸ் எண்கள்: 5399 & 5400

கேள்விகள்: யாரிடம் முஹம்மது “(நான் இறைவனின் தூதர் என்பதற்கு) நீங்கள் சாட்சிகளாக இருங்கள்” என்று கூறினார்?  முஹம்மதுவின் தோழர்கள் ஏற்கனவே அவரை நபி என்று நம்பிவிட்டார்களே! அவர்களிடம் ஏன் மறுபடியும் நீங்கள் சாட்சிகளாக இருங்கள் என்று கேட்கிறார்?

5396. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நாங்கள் (மக்காவிலுள்ள) "மினா" எனுமிடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. (பிளவுண்ட சந்திரனின்) ஒரு துண்டு (ஹிரா) மலைக்கு அப்பா(ல் மேற்பகுதியி)லும் மற்றொரு துண்டு மலைக்குக் கீழேயும் சென்றது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், "(நான் இறைவனின் தூதர் என்பதற்கு) நீங்கள் சாட்சிகளாக இருங்கள்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. 

5397. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. அந்த (ஹிரா) மலை,சந்திரனின் ஒரு துண்டை மறைத்தது. மற்றொரு துண்டு, மலைக்கு மேலே இருந்தது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! நீயே சாட்சியாக இரு" என்று சொன்னார்கள்.

- இப்னு உமர் (ரலி) அவர்கள் வாயிலாகவும் மேற்கண்ட ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர் களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

ஆயினும் இப்னு அதீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நீங்கள் சாட்சிகளாக இருங்கள்; நீங்கள் சாட்சிகளாக இருங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரண்டு முறை) கூறியதாக இடம்பெற்றுள்ளது. 

கேள்விகள்:

  • சந்திரனின் விட்டம் எவ்வளவு என்று இந்த ஹதீஸை அறிவித்த அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் என்பவருக்குத் தெரியுமா?
  • சந்திரன் இரண்டாக பிளந்து ஒரு துண்டு ஹிரா மலைக்கு மேற்பகுதியில் காணப்பட்டதாம், இன்னொரு துண்டு ஹிரா மலைக்கு கீழ்பகுதிக்கு சென்றதாம். 
  • பூமியில் அளவில் நான்கில் ஒரு பாகம் சந்திரனின் அளவு ஆகும் (27%).
  • சந்திரனின் விட்டம் 1737 கிலோ மீட்டராகும். [2]
  • பூமியில் நின்றுக்கொண்டு சந்திரனை பார்ப்பவர்கள் (அக்கால அரேபியர்கள்), சந்திரனின் அளவு நம் இரண்டு கைகளால் பிடிக்கக்கூடிய அளவிற்கு இருக்கும் ஒரு பந்து போல என்று நினைத்துக்கொண்டு மேற்கண்ட ஹதீஸை சொல்லியுள்ளார்கள். ஆனால், 1737 கிமீ விட்டம் கொண்ட  ஒரு பந்தை இரண்டாக பிளந்தால், அதன் பின்னால், ஹிரா மலையென்ன, அரேபியாவின் பாதி அப்படியே மறைந்துவிடும். 

மேற்கண்ட ஹதீஸ் ஒரு பொய்யான ஹதீஸ் என்பது இதிலிருந்து நமக்குத் தெரிகின்றது. ஒருவர் கனவு கண்டால், அதில் மேற்கண்ட விதமாக பார்த்தார் என்றுச் சொன்னால், அதனை ஏற்கலாம், ஏனென்றால் கனவில் (கற்பனைப்போன்று) எல்லாம் சாத்தியம். ஆனால், இங்கு நாம் ஆய்வு செய்துக்கொண்டு இருப்பது, உண்மையான நிலவு இரண்டாக பிளந்தது பற்றியதாகும். எனவே, முஹம்மது சந்திரனை பிளந்து அற்புதம் செய்தார் என்பது பொய்யான கூற்று மேலும், குர்-ஆனின் போதனைக்கு எதிராக ஒன்று.

5398. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்காவாசிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். ஆகவே,சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளப்பதை (தாம் இறைவனின் தூதர் என்பதற்குச் சான்றாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. 

கேள்விகள்: மக்காவாசிகள் எந்த அற்புதங்களைக் கண்டாலும் நம்பமாட்டார்கள் என்று பல வசனங்களில் சொல்லிவிட்டு, மறுபடியும், அவர்களுக்கு எப்படி அற்புதம் செய்துக் காட்டினார்? அல்லாஹ் சர்வ ஞானி தானே! அவர்கள் நம்பமாட்டார்கள் என்று அல்லாஹ்விற்கு சந்திரனை பிளப்பதற்கு  முன்பு தெரியாதா? சரி, சந்திரனை பிளந்துவிட்ட பின்பு எத்தனை மக்காவாசிகள் முஹம்மது நபி என்று ஏற்றுக்கொண்டார்கள்?

முடிவுரை:

இதுவரை கண்ட விவரங்களின் படி:

1) முஹம்மது அற்புதங்கள் செய்பவரல்ல என்று குர்-ஆன் தெளிவாகச் சொல்கிறது. 

2) முஹம்மது மக்களை வெறும் எச்சரிக்கை செய்பவர் தான் என்றும் அல்லாஹ் அடித்துச் சொல்கிறான்.

3) பல முறை மக்காவாசிகளும், யூதர்களும் அற்புதங்களைக் கேட்டாலும் ஏதோ ஒரு காரணம் சொல்லி அல்லாஹ் தட்டிக்கழித்துள்ளான்.

4) குர்-ஆன் 54:1ல் சொல்லப்பட்டது, எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஒரு நிகழ்வாகும்.

5) முஹம்மதுவிற்கு, அவரது தோழர்களுக்கும் பிறகு வந்தவர்கள், இட்டுக்கட்டியது தான் “முஹம்மது சந்திரனை பிளந்த” அற்புதம்.

6) இந்த ஒரு அற்புதம் மட்டுமல்ல, ஹதீஸ்களில் காணப்படும் இதர அற்புதங்களும் மற்றவர்கள் இட்டிக்கட்டியவையே, ஏனென்றால், அவைகள் அனைத்தும் குர்-ஆனையும், அல்லாஹ்வையும் பொய்யாக்குகிறது. குர்-ஆனும் அல்லாஹ்வும் பொய்யென்றால், அற்புதங்கள் செய்தார் என்று நம்பப்படும் முஹம்மதும் பொய்யரே!

7) ஹதீஸ்களின் படி முஹம்மது அற்புதங்கள் செய்தார் என்றுச் சொல்பவர்கள், குர்-ஆனை புறக்கணித்தவர்களாகிறார்கள். குர்-ஆனை புறக்கணித்தவர்கள் குர்-ஆனின் படியே காஃபிர்களாக கருதப்படுவார்கள்.

பாரா அவர்களே! உங்களுக்கு நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று புரிகின்றதா? புரியவில்லையென்றால் கவலையை விடுங்கள், இன்னும் நிறைய இஸ்லாமிய விவரங்களை உங்களுக்கு சொல்லவேண்டி இருக்கிறது. 

பீஜே அவர்களுக்கு:

அருமை தமிழ் முஸ்லிம் அறிஞர் பீஜே அவர்களே! உங்களுடைய தள்ளுபடி ஹதீஸ்களில் மேற்கண்ட சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ்கள் உள்ளனவா? அப்படி இல்லையென்றால், எப்போது இவைகளை உங்கள் பட்டியலில் சேர்க்கப்போகிறீர்கள்? வாசகர்களே! இந்த தேதியை (22 ஜூன் 2016) குறித்துக்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் முஸ்லிம்கள் மேற்கண்ட ஹதீஸ்களை தள்ளிவிடும் நாள் வரும்போது, இந்த பத்தியை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். 

அடிக்குறிப்புக்கள்:

[1] https://en.wikipedia.org/wiki/Sahih_Muslim

[2] http://www.space.com/18135-how-big-is-the-moon.html


2016 ரமளான் - நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திற்கு பதில்கள்

உமரின் இதர ரமளான் தொடர் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்