2017 ரமளான் (19) - நிலமெல்லாம் இரத்தம் - துல்கர்னைன் கட்டிய அந்த பிரமாண்ட சுவர் எங்கே?

நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திற்கு கொடுத்த முந்தைய பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும். 

பிரமாண்டமான ஒரு  நல்ல செயலைச் செய்த ஒருவரைப் பற்றி குர்-ஆன் பிரமிக்கிறது. அந்த நபர் செய்தது ஒரு சரித்திர நிகழ்வு என்கிறது. அந்த  வெற்றியில் தனக்கும் பங்கு உண்டு என்று அல்லாஹ் குர்-ஆனில் சொல்கிறான். கடைசியாக, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் நிலை நிற்கும் சைனா பெரும் சுவரைப் போல, அந்த முஸ்லிம் அரசன் செய்த செயல், உலக முடிவு காலம் வரை நிலை நிற்கும் என்றும் குர்-ஆன் சொல்கிறது. அந்த அரசன் மகா அலேக்சாண்டர் என்றும், அவர் ஒரு நபி என்றும் முஸ்லிம்கள் சொல்கிறார்கள். அலேக்சாண்டர் அல்லாஹ்வின் நபியா? என்ற கேள்விக்கு முந்தைய கட்டுரையில் பதில் கொடுக்கப்பட்டுள்ளது.

குர்-ஆன் சொல்லும் அந்த அரசன் துல்கர்னைன் என்பவராவார். இவரைப் பற்றி குர்-ஆன் சொல்லும் விவரங்களில் உள்ள சரித்திர பிழையை இந்த கட்டுரையில் சுருக்கமாக காண்போம்.

1) துல்கர்னைன் கட்டிய பிரமாண்ட சுவர்:

துல்கர்னைன் என்ற மன்னர், ஒரு பிரமாண்டமான இரும்புச்சுவரை இரு மலைகளுக்கு இடையே கட்டி, ஒரு குறிப்பிட்ட மக்களை காப்பாற்றினாராம். இதனை குர்-ஆன் எப்படி விவரிக்கிறது என்பதை படிப்போம்.

குர்-ஆன் 18:92-98

18:92. பின்னர், அவர் (வேறொரு) வழியைப் பின்பற்றிச் சென்றார்.

18:93. இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்லை;

18:94. அவர்கள் “துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது - குழப்பம் - செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள்.

18:95. அதற்கவர்: “என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்”என்றுகூறினார்.

18:96. “நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் “உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்” (என்றார்).

18:97. எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.

18:98. “இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

இவ்வசனங்களின் சுருக்கம் இது தான்:

  • யஃஜூஜ், மஃஜூஜ் என்ற ஒரு கூட்டத்தாரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட  மக்களை காக்க,  துல்கர்னைன் ஒரு பிரமாண்டமான சுவரை இரு மலைகளுக்கு இடையே கட்டினாராம்.
  • இந்த சுவர் எப்படிப்பட்டதென்றால், அந்த யஃஜூஜ் மஃஜூஜ் மக்களால், அச்சுவரை இடிக்கவோ, அதை தாண்டி வரவோ முடியாது.
  • உலக முடிவுவரையில் அவர்கள் அந்த இரு மலைகளுக்கும், சுவருக்கும்  பின்னால் அடைக்கப்பட்டு இருக்கவேண்டியது தான். ஆனால் அந்த  யஃஜூஜ், மஃஜூஜ்  மக்கள் சாகாமல் உலக முடிவுவரை பெருகிக்கொண்டே இருப்பார்கள் என்பது இஸ்லாம் சொல்லும் விவரமாகும்.
  • உலக முடிவின் போது, அல்லாஹ் அந்த சுவரை தூள் தூளாக்கும் போது, அம்மக்கள் வெளிப்படுவார்களாம். அதன் பிறகு நடக்கும் விவரங்களை இஸ்லாம் விவரிக்கிறது.

மேற்கண்ட விவரங்களை அறியும் போது, ஏதோ ஹாலிவுட் படத்தை பார்ப்பதைப் போன்ற ஒரு பிரமை உண்டாகிறது அல்லவா? இன்னும் பல ஆச்சரியங்கள் காத்துக்கொண்டு இருக்கிறது.

2) அந்த பிரமாண்ட சுவர் கற்பனையா அல்லது உண்மையானதா?

குர்-ஆனின் படி, முஹம்மதுவின் காலத்துக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அக்கால உலகை ஆண்ட துல்கர்னைன் ஒரு பிரமாண்டமான சுவரைக் கட்டி, யஃஜூஜ் மற்றும் மஃஜூஜ் கூட்டத்தினரை  வெளியே வரமுடியாதபடி அங்கேயே அடைத்துவிட்டான்.  அல்லாஹ் இதனை சரித்திர கூற்றாக கூறியிருப்பதால், இது கற்பனைக் கதையல்ல என்று முஸ்லிம்கள் நம்பவேண்டும். 

இந்த சுவர் முஹம்மதுவின் காலத்திலும் (7ம் நூற்றாண்டில்) உண்மையாகவே இருந்திருக்கிறது என்பதை முஹம்மதுவின் கூற்றிலிருந்து அறியலாம். குர்-ஆனுக்கு அடுத்தபடியாக அல்லாஹ்வின் வஹி என்று கருதப்படும், புகாரி மற்றும் முஸ்லிம் ஹதீஸ்கள் இதனை உறுதிச் செய்கின்றது. 

அ) அந்த பிரமாண்ட சுவரில் ஒரு சிறிய ஓட்டை விழுந்துள்ளதாம்.

முஹம்மதுவிற்கு அல்லாஹ் ஒரு வஹியை (வெளிப்பாட்டை) கொடுத்தார், அதாவது, துல்கர்னைன் கட்டிய அந்த பிரமாண்ட சுவரில் ஒரு சிறிய ஓட்டை விழுந்துள்ளது. அந்த தீய மக்கள் வெளியே வந்தால், அரபியர்களுக்கும் ஆபத்து வரும் என்று முஹம்மது அறிவித்துள்ளார். 

புகாரி எண்: 3346 (மேலும் பார்க்க புகாரி எண்கள்: 3347, 3598, 5293, 7059, 7135 & 7136)

3346. நபி(ஸல்) அவர்களின் துணைவியார்) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ்(ரலி) அறிவித்தார் 

நபி(ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் நடுக்கத்துடன் வந்து, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குக் கேடு நேரவிருக்கிறது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டுவிட்டது' என்று தம் கட்டை விரலையும் அதற்கடுததுள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டியபடி கூறினார்கள். உடனே, நான் 'இறைத்தூதர் அவர்களே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்துவிடுவோமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஆம்; தீமை பெருகிவிட்டால்..' என்று பதிலளித்தார்கள். 

இதே ஹதீஸ் முஸ்லிமிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது - பார்க்க முஸ்லிம் எண்கள்: 5520, 5521 & 5522

மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து  அறிவது என்னவென்றால், துல்கர்னைன் கட்டிய சுவர் முஹம்மதுவின் காலத்திலும் இருந்துள்ளது, அதில் ஒரு ஓட்டை விழுந்ததை அல்லாஹ் முஹம்மதுவிற்கு வஹியாக அறிவித்துள்ளான், இதனால் வரும் ஆபத்தை முஹம்மது தம் மக்களுக்குச் சொல்லி எச்சரித்துள்ளார் என்பதாகும். 

ஆ) யஃஜும் மஃஜும் கூட்டத்தின் ஜனத்தொகை எவ்வளவு இருக்கும்?

வாசகர்கள் கூர்ந்து கவனிக்கவேண்டும். குர்-ஆனின் படி, ஒரு கூட்ட மக்கள் இரு மலைகளுக்கு இடையே மாட்டிக்கொண்டுள்ளார்கள். அவர்கள் வெளியே வராமல் இருப்பதற்கு காரணம், அல்லாஹ்வின் அடியான் துல்கர்னைன் கட்டிய அந்த மகா சுவர் ஆகும்.  அந்த யஃஜூஜ்/மஃஜூஜ் மக்களால், அச்சுவரை துளைக்கவோ  இடித்துப்போடவோ முடியாது. மேலும் அந்த மலைகளை தாண்டியும் வரமுடியாது, இது அல்லாஹ்வின் ஏற்பாடாகும்.

ஆனால், அந்த மக்கள் பலுகி பெருகிக்கொண்டே வருகிறார்கள். அம்மக்களுக்கு  உலகத்தின் இதர நாடுகளோடு எந்த ஒரு தொடர்பு இல்லையென்றாலும், அவர்கள் அன்றிலிருந்து இன்று வரையும் வாழ்ந்து வந்துக்கொண்டு இருக்கிறார்கள், உலகத்தின் கடைசி காலம் வரை இன்னும் பல நூற்றாண்டுகள்  அல்லது ஆயிரம் ஆண்டுகள் வாழுவார்கள். இதனை எப்படி நாம் அறிந்துக்கொள்வது?  இதையும் முஹம்மதுவே கூறியுள்ளார், முஹம்மதுவிற்கு அல்லாஹ் கூறியுள்ளான். புகாரியில் இவ்விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு முஸ்லிம் நரகம் சென்றால், யஃஜூஜ்/மஃஜூஜ் மக்கள் ஆயிரம் பேர் செல்வார்கள்:

இந்த ஹதீஸின் படி, ஒரு முஸ்லிமுக்கு ஆயிரம் யஃஜூஜ் மஃஜூஜ் மக்கள் நரகத்திற்குச் செல்வார்கள். அதாவது 1:1000 என்பது கணக்கு. இங்கு கவனிக்கவேண்டிய விவரம் என்னவென்றால், அந்த யஃஜூஜ் மஃஜூஜ் மக்கள் அபரிதமாக பெருகுகிறார்கள் என்பதாகும். ஆனால், அவர்கள் நம்மைப் போல வாழவில்லை, இரண்டு மலைகளுக்கு இடையே வாழுகிறார்கள். உலகிற்கு தங்களை காட்டமுடியாத நிலையில் உள்ளார்கள்.

புகாரி எண் 6530 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' . . . 

இவ்வாறு நபியவர்கள் கூறியது மக்களுக்குச் சிரமமாக இருந்தது. எனவே, அவர்கள் 'இறைத்தூதர் அவர்களே! (ஒவ்வோர் ஆயிரத்திலும் நரகத்திற்குச் செல்லாமல் எஞ்சியிருக்கும்) அந்த ஒரு நபர் எங்களில் யார்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் '(பயப்படாதீர்கள்;) நற்செய்தி பெறுங்கள். யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரில் ஆயிரம் பேர் என்றால், உங்களில் ஒருவர் (நரகத்திற்குச் செல்ல தனியாக பிரிக்கப்பட்டோரில்) இருப்பார்' . . .

கீழ்கண்ட முஸ்லிம் ஹதீஸின் படி, கடைசி நாட்களில் அவர்களின் ஒரு அணியினர், ஒரு ஏரியில் உள்ள நீர் அனைத்தையும் குடித்துவிடுவார்களாம். அதாவது ஒரு ஏரியை காலி செய்யும் அளவிற்கு அவர்களின் ஒரு அணியில் மக்கள் இருப்பார்கள் என்றுச் சொன்னால், பார்த்துக்கொள்ளுங்கள், அவர்களின் ஜனத்தொகை எவ்வளவு இருக்கும் என்று.

முஸ்லிம் எண்: 5629

5629. நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி) அவர்கள் கூறியதாவது: . . . 

எனவே, (முஸ்லிமான) என் அடியார்களை (சினாயிலுள்ள) "தூர்" மலைக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வையுங்கள்" என்று (வஹீ) அறிவிப்பான்.

பின்னர், அல்லாஹ் "யஃஜூஜ்" "மஃஜூஜ்" கூட்டத்தாரை அனுப்புவான். அவர்கள் ஒவ்வோர் உயரமான பகுதியிலிருந்தும் வேகமாக(க் கீழே இறங்கி) வருவார்கள். அவர்களில் முதல் அணியினர் (ஜோர்தானில் உள்ள) "தபரிய்யா" ஏரியைக் கடந்து செல்லும்போது, அதிலுள்ள மொத்த நீரையும் குடித்துவிடுவார்கள். அவர்களின் இறுதி அணியினர் அதைக் கடந்து செல்லும்போது. "முன்னொரு காலத்தில் இந்த ஏரியில் தண்ணீர் இருந்திருக்கும்" என்று பேசிக்கொள்வார்கள்.

. . . 

பின்னர் இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் (அல்லாஹ்விடம் உதவி கேட்டுப்) பணிந்து வேண்டுவார்கள். அப்போது யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் பிடரிகளில் புழுக்களை அல்லாஹ் அனுப்புவான். அதனால் அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பலியாவார்கள். பின்னர் இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் (மலையிலிருந்து) தரைக்கு இறங்கி வருவார்கள். அப்போது பூமியின் எந்தவொரு சாண் அளவு இடமும், யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் (சடலங்களிலிருந்து வெளிவரும்) கொழுப்பாலும் துர்நாற்றத்தாலும் நிரம்பியிருப்பதையே காண்பார்கள். உடனே இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் அல்லாஹ்விடம் (அவற்றை அகற்றக்கோரிப்) பணிந்து வேண்டுவார்கள். அப்போது அல்லாஹ் ஒட்டகங்களின் கழுத்துகளைப் போன்று (பெரியதாக உள்ள) பறவைகளை அனுப்புவான். அவை அந்தப் பிணங்களைத் தூக்கிச் சென்று அல்லாஹ் நாடிய இடத்தில் வீசியெறியும். . . . 

இதுவரை கண்ட குர்-ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் பார்க்கும் போது, பல கோடி மக்களாகிய அந்த யஃஜூஜ் மஃஜூஜ் மக்கள் இன்றும் (2017ம் ஆண்டு மே மாதம்) உலகில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இது ஒரு சுவாரசியமான கதையாக இருக்கிறதல்லவா? ஆம், இந்த சுவாரசியத்தோடு சரித்திர பிழையும் இக்கதையில் உள்ளது.  இனி சொல்லப்போகும் விவரங்களை முஸ்லிம்கள் உட்பட கூர்ந்து படியுங்கள், இன்று நடைமுறைக்கும், அறிவுடமைக்கும் இவ்விவரங்கள் எட்டுகின்றதா? என்பதை கவனியுங்கள். குர்-ஆன் இறைவேதமல்ல என்பதற்கு இப்படிப்பட்ட சரித்திர விஞ்ஞான பிழைகள் அதில் இருப்பது ஒரு காரணமாகும்.

நடைமுறைக்கு ஏற்காத குர்-ஆனின் சரித்திர விஞ்ஞான பிழைகள்

துல்கர்னைன் விஷயத்தில் குர்-ஆன் மிகப்பெரிய அடிமட்ட பிழைகளைச் செய்துள்ளது. துல்கர்னைன் கட்டியதாகச் சொல்லும் பிரமாண்டமான சுவர் பற்றி குர்-ஆன் சொல்லும் விவரங்களில் கீழ்கண்ட பிழைகள் பளிச்சென்று தெரிகிறது. 

குர்-ஆனின் பிழை 1: துல்கர்னைன் கட்டிய அந்த பிரமாண்ட சுவர் எங்கே இப்போது உள்ளது?

இந்த சுவர் ஏதோ ஒரு மூலையில் கட்டிய சின்ன சுவர் அல்ல. பல கோடி மக்களை மறைத்துவிடும் அளவிற்கு உயரமாகவும், அகலமாகவும் கட்டப்பட்ட சுவர். இதுவரை இப்படிப்பட்ட சுவரை யாரும் உலகில் கண்டுபிடிக்கவில்லை. சாட்லைட் மற்றும் தொலைத்தொடர்பு கருவிகள், விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் உச்சத்தில் இருக்கும் இக்காலத்தில் கூட, இந்த  பிரமாண்ட சுவரை இதுவரை உலக விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவில்லை (இருந்தால் தானே கண்டுப்பிடிப்பதற்கு?).

இதிலிருந்து அறிவது என்னவென்றால், துல்கர்னைன் கட்டியதாக குர்-ஆன் சொல்லும் நிகழ்ச்சி ஒரு கட்டுக்கதையாகும்.  முஹம்மதுவின் காலத்தில் நிலவிய பல கட்டுக்கதைகளை கேட்டு, சரித்திரம் என்ற பெயரில் முஹம்மது குர்-ஆனில் புகுத்தியுள்ளார். இக்கதை ஒரு கட்டுக்கதை என்பதற்கு இன்னொரு வலுவூட்டும் காரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குர்-ஆனின் பிழை 2: பல கோடி மக்கள் 2000க்கும் அதிகமான ஆண்டுகள், எப்படி அழியாமல் இரண்டு மலைகளுக்கு இடையே இன்று வரை வாழமுடியும்?

இந்த கட்டுக்கதையை படித்த முஸ்லிம்கள் எப்படி ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது ஆச்சரியம் கலந்த வேதனையாக உள்ளது.

குர்-ஆனின் துல்கர்னைன் கதை கீழ்கண்ட கேள்விகளை எழுப்புகிறது. முஸ்லிம்கள் இவைகளுக்கு பதில்களை கொடுக்கவேண்டும். 

அ) கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மலைகளுக்கு இடையே சிக்கிய மக்கள், இன்று வரை எப்படி அங்கேயே உலகத்தின் கண்களில் படாமல் இருக்கமுடியும்? சிந்துபாத் கதையில் மட்டுமே இது சாத்தியம் நிஜ வாழ்க்கையில் அல்ல.

ஆ) ஒருவேளை துல்கர்னைன் அச்சுவரை கட்டினது உண்மையென்று கருதினாலும், இப்போது அம்மக்கள் பலகோடி பேராக பெருகியிருப்பார்கள். மக்கள் பெருகும் போது, அவர்களோடு கூட போட்டி போட்டுக்கொண்டு அவ்விரு மலைகளுமா அபரித வளர்ச்சி அடையும்? இது விஞ்ஞானத்தின் படி சாத்தியமா?

இ) பல ஆயிரம் அல்லது பல இலட்ச மக்கள் அன்று இருந்திருக்கக்கூடும் என்று எண்ணிக்கொண்டாலும், இன்று பல நூறு அல்லது ஆயிரம் கோடி மக்களாக அவர்கள் பெருகியிருப்பார்கள். அப்படியானால், அதே இரண்டு மலைகளுக்கு இடையே இத்தனை கோடிமக்கள் எப்படி மறைந்திருக்கமுடியும்? இது கனவில் மட்டுமே சாத்தியமாகும்.

ஈ) மக்கள் பெருகுவது போல மலைகள் கூட வளர்ந்துக்கொண்டுச் செல்லும், இதன் பின்னே பல கோடி மக்கள் மறைந்திருக்க முடியும் என்று சிறுபிள்ளைத் தனத்தோடு சில முஸ்லிம்கள் சொல்லக்கூடும். ஆனால், மலைகள் ஒரு ஆண்டுக்கு ஒரு செண்டிமீட்டருக்கும் குறைவாகவே வளருகிறது என்பதை கவனிக்க வேண்டும்.  மக்கள் பிள்ளைகளை பெற்றெடுப்பது  போல, காம்பிளான் குடித்த பிள்ளைகள் போல வளருவதும் இல்லை. 

உ) மலைகள் ஆண்டுக்கு மில்லிமீட்டர் அளவிற்கு பெருகினாலும், இரும்பு மற்றும் செம்புவினால் கட்டப்பட்ட பிரமாண்ட சுவர் எப்படி ஆண்டாண்டுக்கு உயர்ந்துக்கொண்டே போகும்? இரண்டு மலைகளுக்கு இடையே துல்கர்னைன் கட்டியதாகச் சொல்லும் சுவர் ஒரு மாயையான சுவராகும், அது கட்டுக்கதையாகும். இல்லை என்றுச் சொல்பவர்கள், இக்கேள்விகளுக்கு பதில்களைச் சொல்லலாம்.

ஊ) 2000 ஆண்டுகளுக்கு மேலாக, பல கோடி மக்கள், இரண்டு மலைகளை தாண்டி வரமுடியாத அளவிற்கு உலகில் பெரிய மலை ஒன்றும் இல்லை. இமயமலைகளில் ‘எவரெஸ்ட்’ தான் உலகிலேயே மிகவும் உயரமான சிகரம் (கவனிக்கவும் சிகரம் மலை அல்ல). இந்த சிகரம் 8848 மீட்டர் உயரம் உள்ளது. கவனிக்கவும், கடல் மட்டத்திலிருந்து 8848 மீட்டர் என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளதே தவிர மலையின் அடிவாரத்திலிருந்து அல்ல. 

எ) எவரெஸ்ட் சிகரம் அளவிற்கு உயர்வான சிகரம் உலகில் வேறு எதுவும் இல்லை. கவனிக்கவும், இங்கு உயரம் தான் கணக்கில் கொள்ளப்படுகிறது, அகலம் அல்ல. பல கோடி மக்களை பல ஆயிர ஆண்டுகள் மறைக்கும் அளவிற்கு உலகில் இரு மலைகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதாவது, உலகில் இல்லை என்பது தான் உண்மை. கூகுள் யர்த்தை பயன்படுத்தி உலகின் அனைத்து மலைகளையும் துள்ளியமாக பார்க்கமுடியும்.

ஏ) உலகில் உள்ள அனைத்து பெரிய மலைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டார்கள். முக்கியமாக ஐரோப்பா, ஆசியா, ஆஃப்ரிக்கா, அமெரிகக போன்ற கண்டங்களில் உள்ள பெரிய மலைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இவைகளை ஒப்பிட்டு பார்த்தபோது தான் இமயமலைகளில் உள்ள எவரெஸ்ட் உயரமானதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, குர்-ஆனின் கட்டுக்கதையில் உள்ள பொய் அம்பளத்துக்கு வந்துவிட்டது.

ஐ) இன்னொரு விஷயத்தை கவனிக்கவேண்டும், முஹம்மது சொன்ன ஹதீஸின் படி, அந்த சுவரில் 7ம் நூற்றாண்டில் ஓட்டை விழுந்துள்ளது. அப்படியானால், கடந்த 14 நூற்றாண்டுகளில் இன்னும் எத்தனை ஓட்டைகள் விழுந்துள்ளதோ நமக்குத் தெரியாது? முஹம்மது போல ஒரு இஸ்லாமிய நபி இன்று இருந்திருந்தால், உலகிற்கு அதனை சொல்லியிருந்திருப்பார். ஒருவேளை அந்த ஓட்டையை பயன்படுத்தி, அந்த மக்கள் இன்னும் பெரிய ஓட்டைகளை போட்டு, வெளியே வந்திருந்தால்? 

ஒ) உலகின் மிக உயரமான சிகரத்தையே மனிதன் தொட்டுவிட்டான், ஆனால், இந்த இரண்டு மலைகளைத் தாண்டி 2000 ஆண்டுகளாக மக்கள் வெளியே வராமல் இருப்பது ஆச்சரியமே! குர்-ஆன் சொல்வது ஒரு மோசடியே அல்லாமல் வேறு எதுவாக இருக்கமுடியும்?

மேற்கண்டவைகளை விருப்பு வெறுப்பு இன்றி முஸ்லிம்கள் சிந்தித்துப் பார்த்தால், குர்-ஆன் சொல்வது எவ்வளவு பெரிய பொய் என்பது அவர்களுக்கு விளங்கும். 

இந்த கட்டுரையை முடிக்கும் நேரத்தில், நம் அருமை இஸ்லாமிய அறிஞர் பீஜே அவர்கள் இந்த விஷயத்தைப் பற்றி என்ன சொல்லியுள்ளார் என்பதை படியுங்கள். இவர் சொல்லும் காரணங்களில் முட்டாள்தனம் பளிச்சென்று தெரிவதை காணமுடியும். இவரது வரிகளுக்கு என் பதிலை கீழே  கொடுத்துள்ளேன்.

தொடர்: 11, திருக்குர்ஆன் விளக்கவுரை - யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினரின் வருகை

பி. ஜைனுல் ஆபிதீன்

பீஜே அவர்கள் எழுதியவைகள்:

அவர்கள் எந்த நாட்டில் இவ்வாறு அடைக்கப்பட்டுள்ளனர் என்பதை அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்குக் கூறவில்லை. யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் அவர்கள் வெளிப்பட வேண்டுமானால் மற்ற மனிதர்கள் அவர்களை அறிந்து கொள்ளாமலிருப்பது அவசியம். அதற்காகக் கூட இறைவன் மறைத்து வைத்திருக்கலாம்.

நம் கேள்விகள்:

அந்த யஃஜூஜ் மஃஜூஜ் மக்கள் எந்த பகுதியில் அல்லது எந்த நாட்டில் இருந்திருக்கமுடியும் என்று நாம் யூகிக்கலாம். குர்-ஆனின் (18:90-93) படி, கிழக்கு பகுதிக்குச் சென்று, அதன் பிறகு அவர் இன்னொரு வழியில் சென்றுள்ளார். குர்-ஆன் சொல்வது உண்மை என்று நம்பினால், துல்கர்னைன் சைனா/ஜப்பான் பகுதிக்கு (கிழக்கு) சென்று அதன் பிறகு இன்னொரு வழியில் சென்றார் என்றால் அது வடக்கு சைனாவாக, அல்லது தெற்கு இந்திய பகுதியாகவே இருக்கவேண்டும். அதிகபட்சமாக அவர் மறுபடியும் ஆசியாவின் மத்திய கிழக்கு பகுதிக்கு வந்தாகவேண்டும், அல்லது ஐரோப்பாவில் ஒரு இடத்தில் தான் இருந்திருக்கவேண்டும். குர்-ஆன் சொல்வது கட்டுக்கதை என்பதால் தான் பீஜே போன்ற இஸ்லாமிய அறிஞர்களுக்கு அந்த இடம் என்னவென்று தெரிவதில்லை. 

இரண்டாவதாக, எதற்காக அல்லாஹ் அந்த மக்களை மறைக்கவேண்டும்? கடைசி காலத்தில் மறுபடியும் அழிப்பதற்காகவா? அல்லாஹ் அந்த மக்களை மறைத்துள்ளான் என்று குர்-ஆனோ, ஹதீஸ்களோ சொல்லவில்லையே! மேலும், முஹம்மதுவிற்கு அல்லாஹ் இறக்கிய வஹியின் படி, அச்சுவரில் ஓட்டை 7ம் நூற்றாண்டிலேயே விழுந்துள்ளது, அப்படியானால், அந்த சுவர் மக்கள் காணும் ஒன்றாக இருந்திருக்கவெண்டும் மேலும் அம்மக்கள் ஒரு ஓட்டையை வெற்றிகரமாக போட்டு இருந்திருக்கவேண்டும். 

பீஜே அவர்கள் எழுதியவைகள்:

நவீன கருவிகளையும்,  ஆகாய விமானங்களையும், தொலை நோக்கிக் கருவிகளையும் கண்டுபிடித்துள்ள காலகட்டத்தில் அப்படி ஒரு கூட்டம் அடைக்கப்பட்டிருந்தால் உலகத்திற்குத் தெரியாமல் இருக்குமா? செம்பு உருக்கி ஊற்றப்பட்டால் அதன்பளபளப்பை வைத்து இனம் காணலாமே என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர். அந்தக்கேள்வி தவறானதாகும்.

மனிதனிடம் இத்தகைய நவீன சாதனங்கள் இருந்தாலும் அவை முழு அளவுக்கு இன்னமும் பயன்படுத்தப்படவில்லை. மிக உயரத்திலிருந்து கொண்டு பூமியைப் படம்பிடித்திருக்கிறார்கள், பார்த்திருக்கிறார்களே தவிர பூமியின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஏன் ஒவ்வொரு ஏக்கரையும் கூட மனிதன் இந்தக் கருவிகள் மூலம் இதுவரை ஆராயவில்லை. பூமியிலேயே இருக்கும் சில பகுதிகளை இப்போதும் கூடகண்டுபிடித்ததாகச் செய்திகள் வருவதிலிருந்து இதை உணரலாம்.

இந்த மண்ணுலகில் மனிதனின் கால் படாத நிலப்பரப்புகள் ஏராளம் உள்ளன. ஆகாயத்தில் வட்டமடித்து சக்தி வாய்ந்த தொலைநோக்கிக் கருவிகள் மூலம் ஒவ்வொருஏக்கராக ஆராய முற்பட்டாலும் மரங்கள், காடுகள் போன்ற தடைகள் இல்லாவிட்டால்தான் பூமியில் உள்ளவர்களைப் பார்க்க முடியும். தடைகள் இருந்தால் அந்தக்காடுகளைத் தான் பார்க்க முடியும்.

நம் கேள்விகள்:

பீஜே அவர்கள் சொல்வது முஸ்லிம்களுக்கு சீரியஸான விவரமாக தென்படும், ஆனால் இதர மக்களுக்கு வேடிக்கையாகவும், முட்டாள்தனமானதாகவும் தென்படுகின்றது. பீஜே போன்ற முஸ்லிம் அறிஞர்கள் சாதாரண முஸ்லிம்களை இன்னும் முட்டாள்தனத்திலேயே வைத்திருக்க விரும்புகிறார்கள். ஏழாம் நூற்றாண்டின் நாகரீகமற்ற மனிதன் சிந்திப்பது போலவே சிந்திக்க இப்படிப்பட்டவர்கள் முயலுகிறார்கள். 

பீஜே கவனிக்கவேண்டும், இங்கு நாம் ஏதோ ஒரு ஏக்கர் அல்லது 100 ஏக்கர் காடு பற்றி பேசவில்லை. நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புவது, பல கோடி மக்கள் மறைந்து வாழ்ந்துக்கொண்டு இருக்கின்ற இரண்டு பெரிய மலைகளும், அந்த மலைகளுக்கு இடையே கட்டப்பட்ட பிரமாண்ட சுவர் பற்றியதாகும். 

ஆக, இப்படிப்பட்ட பிரமாண்ட மலைகள் மற்றும் அணைக்கட்டு போன்ற சுவர், தற்கால விஞ்ஞான கருவிகளின் கண்களில் படாமல் இருப்பதில்லை. பீஜே அவர்களே, எத்தனை நாட்கள் தான் இப்படி மக்களின் (முஸ்லிம்களின்) காதுகளில் பூவை வைப்பீர்கள்?

பீஜே அவர்கள் எழுதியவைகள்:

குறிப்பிட்ட காட்டில் தான் வீரப்பன் இருக்கிறான் என்று தெளிவாகத் தெரிந்தும் வெகுநாட்களாக அவனது இருப்பிடத்தைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியாததற்கு இதுதான் காரணம். காடுகளும், குகைகளும், தொலைநோக்கிக் கருவிகள் மூலம்பார்ப்பதைத் தடுத்து விடுகின்றன.

இலங்கையில் பிரபாகரனும், புலிகளும் இந்திய, இலங்கை இராணுவத்தினரால் நீண்டநாட்களாகப் பிடிக்கப்பட முடியாமல் போனதற்குக் கூட அடர்த்தியானகாட்டுப்பகுதியை அவர்கள் தேர்வு செய்தது தான் காரணம்.

நம் கேள்விகள்:

காடுகள் மற்றும் மலைகளுக்குள்ளே 100 பேர், 1000 பேர் அல்லது அதிக பட்சமாக ஒரு லட்சம் பேர் மறைந்து வாழலாம் ஆனால் பல நூறு கோடி பேர் இப்படி மறைந்து வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றுச் சொல்வது தற்காலத்தின் விஞ்ஞான உலகில் ஏற்பதற்கில்லை.

வீரப்பன் மற்றும் பிரபாகரன் விஷயத்தில், அந்த மக்கள் கூட்டம் யாருடைய கண்களிலும் தென்பட்டுவிடக்கூடாது என்று வேண்டுமென்றே மறைந்து வாழ்ந்தவர்கள், மேலும் அவர்களின் எண்ணிக்கை ஆயிரங்களில் இருக்கும், பல நூறு கோடி பேர் இருக்கமாட்டார்கள். அதுவும் இந்த மக்கள் உலக மக்களிடமிருந்து மறைந்து இருக்கவேண்டும் என்று விரும்புபவர்கள் அல்ல. இவர்கள் இரண்டு ஆயிர ஆண்டுகளுக்கு மேலாக வெளியே வர முயற்சி செய்துக்கொண்டு இருக்கின்ற மக்களாவார்கள்.

பீஜே அவர்கள் எழுதியவைகள்:

மலைகளால் சூழப்பட்ட காடுகளிலோ, அல்லது குகைகளிலோ யஃஜூஜ், மஃஜூஜ்கூட்டத்தினர் இருந்தால் எந்தச் சாதனங்கள் மூலமும் அவர்கள் இருப்பதை அறிந்துகொள்ள முடியாது.

செம்பு எனும் உலோகம் விரைவில் பாசி படிந்து பச்சை நிறத்துக்கு மாறி விடுவதால் அதன் பளபளப்பை வைத்தும் கண்டுபிடிக்க முடியாது. தொலைவிலிருந்து பார்க்கும்போதும், அருகிலிருந்து பார்க்கும் போதும் கூட மலைகளில் புல் வளர்ந்திருப்பது போன்றதோற்றமே தென்படும்.

எனவே எவரது கண்களுக்கும் புலப்படாமல் இந்தக் கூட்டத்தினர் இந்தப் பூமியின் ஒரு பகுதியில் வாழ்ந்து வருவது சந்தேகப்பட வேண்டியதன்று.

இனி வருங்காலத்தில் மனிதன் முயன்று நெருங்கலாம். அந்த நேரம் அவர்கள் வெளியேவர வேண்டிய காலமாக, அதாவது யுகமுடிவு நாளின் நெருக்கமாகத் தான் இருக்கமுடியும்.

நம் கேள்விகள்:

இங்கு நாம் ஆய்வு செய்துக்கொண்டு இருப்பது, அட்டைப்பெட்டியினால் பிள்ளைகள் பள்ளிக்கூட பிராஜெக்டுகளுக்காக செய்யும் மலைகளோ, சுவரோ அல்ல, இவைகள் பிரமாண்ட மலைகள், பிரமாண்டமான சுவர் அதுவும் பல ஆயிரம் கோடி மக்களை மூடிமறைக்கும் அளவிற்கு உள்ள பிரமாண்டமான மலையாகும். எனவே, இவைகள் விஞ்ஞான கருவிகளின் கண்களில் படாமல் இருக்கமுடியாது. 

யாராவது பீஜே அவர்களுக்கு உலகை சுற்றிக்காட்டுங்களய்யா? குறைந்தபட்சம் டிஸ்கவரி சானல், நாஷ்னல் ஜியாகிரபி சானலை காட்டுங்களைய்யா? இவருடைய தொல்லை தாங்க முடியலே!

இரும்பினால், செம்பினால் செய்த ஒரு சுவரை பல கோடி மக்கள் சேர்ந்து, பல நூற்றாண்டுகளாக துளைக்கமுடியவில்லை என்றுச் சொல்வது அறிவுடமையாகாது. பல கோடி மக்கள் இரண்டு மலைகளை ஏறமுடியாது என்றுச் சொல்வது வேடிக்கையானது. 

ஒரு கால் இல்லாத ஒரு இந்தியப்பெண், தன் ஊனமான காலைக்கொண்டு உலகின் உயரமான சிகரமாகிய எவரெஸ்டை ஏறி தன் கொடியை நாட்டிவிட்டார் (பார்க்க – அருனிமா சின்ஹா - en.wikipedia.org/wiki/Arunima_Sinha & indiatoday.intoday.in/story/arunima-sinha-inspiring-story-first-indian-female-amputee-mount-everest-proud-mountain-climb-lifest/1/692252.html ). ஊனமுற்று இருந்தாலும், எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட  உலகின் முதல் பெண்மணி. 

இதோ இன்னொரு நிஜத்தைப் பாருங்கள், ஊனமுற்றவர்களுக்கு இனி எவரெஸ்ட் ஏற அனுமதி கொடுக்கமாட்டோம் என்று நேபால் அரசாங்கம் சொல்லியுள்ளது, ஊனமுற்றவர்களால் ஏறமுடியாது என்று அவ்வரசாங்கம் நினைத்தது. ஆனால், இதோ இந்த பட்டியலில் ஏழு ஊனமுற்றவர்கள் எவரெஸ்ட்டை தொட்டுவிட்டார்கள். அவர்களைப் பற்றி படிக்க சொடுக்கவும்: metro.co.uk/2015/09/29/nepal-is-banning-disabled-climbers-from-everest-so-here-are-seven-people-that-totally-nailed-it-5413581/

பீஜே அவர்களே, அந்த பலகோடி மக்கள் தாண்டமுடியாத அளவிற்கு அந்த  மலைகள் என்ன எவரெஸ்ட் சிகரங்களா? முயன்றால் சிகரமும் காலுக்கடியில் வந்துவிடும்.

முடிவுரை:

இதுவரை நாம் துல்கர்னைன் கட்டிய அந்த பிரமாண்ட சுவர் பற்றி ஆய்வு செய்தோம்.

1) குர்-ஆன் சொல்லும் அந்த நிகழ்ச்சி ஒரு பொய்யாகும்.

2) துல்கர்னைன் கட்டியதாகச் சொல்லும் அந்த பிரமாண்ட சுவர் உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கு காரணம் அப்படிப்பட்ட சுவர் உலகில் இல்லை என்பதாகும்.

3) பல நூறு கோடி மக்கள் இரண்டு மலைகளுக்கும், ஒரு சுவருக்கும் பின்னால் மறைந்துக்கொண்டு 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றுச் சொல்வது, அடிமட்ட முட்டாள் தனமான கூற்றாகும். 

4) தற்கால விஞ்ஞான முன்னேற்றத்தின் அடிப்படையில் இப்படிப்பட்ட பிரமாண்ட மலையும், சுவரும் கண்களுக்கு தெரியாமல் இருக்கிறது என்றுச் சொல்வது, விஞ்ஞான உலகில் வாழ தகுதியில்லாதவர்கள் சொல்லும் பேச்சாகும்.

5) அந்த செம்புச்சுவர், பாசி  படிந்து பச்சை நிறமாக மாறிவிட்டு இருப்பதினால் தான், விஞ்ஞான கருவிகளின் கண்களில் படாமல் இருக்கிறது என்று பீஜே சொல்வது அறிவுடமைக்கு ஏற்காத ஒன்றாகும்.

6) பலகோடி மக்கள் இரண்டு மலைகளுக்கு இடையே வாழும்படியான நிலப்பரப்பு கிடைக்குமா? என்று பார்த்தால், அது முடியாத ஒன்றாகத் தெரியும். அதுவும், நவீன கருவிகள், மருந்துகள், வசதிகள் இல்லாமல், பல கோடி பேர் இன்றும் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது ஏற்கத்தக்கதல்ல, இது விஞ்ஞானத்துக்கு எதிரானதாகும், மேலும் நடைமுறையில் நடக்காத ஒன்றாகும்.

இப்படிப்பட்ட விஞ்ஞான மற்றும் சரித்திர பிழைகளுள்ள இந்த விவரம் முஹம்மதுவிற்கு எங்கேயிருந்து கிடைத்தது? என்ற சந்தேகம் வாசகர்களுக்கு வந்திருக்கும். நெருப்பில்லாமல் புகையாது அல்லவா, எல்லாவற்றிற்கும் ஒரு காரணமுண்டு. இந்த மலைகள், சுவர்  மற்றும் கடைசி கால நிகழ்ச்சி இவைகள் எல்லாம் எங்கேயிருந்து எடுக்கப்பட்டது என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

பாரா அவர்களுக்கு: 

பாரா அவர்களே! மகாபாரதத்தில் வரும் கர்ணனைப் போலத்தான் இந்த குர்-ஆனின் துல்கர்னைனும் இருப்பான் என்று நினைத்து மேலோட்டமாக நீங்கள் எழுதிவிட்டீர்கள்.  இது எப்படிப்பட்ட விஞ்ஞான மற்றும் சரித்திர பிழையென்று பார்த்தீர்களா? உங்களுக்கு என்ன! புத்தகம் விற்றுவிட்டது! தொடர்களையும் நன்றாக மக்கள் ரசித்து படித்துவிட்டார்கள்! ஆனால், ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டீர்களே!


2016-2017 ரமளான் தொடர் கட்டுரைகள்

ரமளான் தொடர் கட்டுரைகள் (2012 - 2017)

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்