2017 ரமளான் (26) – நிலமெல்லாம் இரத்தம் – முஹம்மது எத்தனை போர்கள் புரிந்தார் என்று அல்லாஹ்வை விட பாரா நன்கு அறிவார்

இக்கட்டுரைக்கு தொடர்புடைய முந்தைய கட்டுரைகள்:

பாரா அவர்களின் நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தின் 20ம் அத்தியாயத்திற்கு அறிமுக பதில்களாக மேற்கண்ட இரண்டு கட்டுரைகள் பதிக்கப்பட்டது. தற்போதைய கட்டுரையில் பாரா அவர்கள், 20ம் அத்தியாயத்தில் எழுதிய விவரங்கள் எப்படி குர்-ஆனுக்கு முரண்படுகின்றது என்பதை சுருக்கமாக காண்போம்.

கட்டுரையின்  தலைப்புக்கள்:

1) பாராவின் படி முஹம்மது செய்த மொத்த யுத்தங்கள் எத்தனை?

2) குர்-ஆனின் படி முஹம்மது செய்த யுத்தங்கள் எத்தனை?

3) பாரா  அல்லது அல்லாஹ்  - யார் உண்மையைச் சொல்கிறார்கள்?

4) முடிவுரை


1) பாராவின் படி முஹம்மது செய்த மொத்த யுத்தங்கள் எத்தனை?

இந்த கேள்விக்கு பதில் கொடுப்பதில், உலக முஸ்லிம்களை விட பா. ராகவன் அவர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். பாரா ஒரே அடியாக அடித்துச் சொல்கிறார், முஹம்மதுவின் காலத்தில் அவர் மரணிப்பதற்கு முன்பு செய்த யுத்தங்கள் வெறும் மூன்று தான். இதை யாராவது மறுத்தால் அவன் பொய்யன், அவன் யூதன் என்று குற்றஞ்சாட்டுகிறார்  . ஏனென்றால் யூதன் பொய் சொல்லுவான் என்று பாராவிற்கும் நன்கு தெரிந்திருக்கிறது (கி.பி. 7ம் நூற்றாண்டில் பல யூதர்கள் வாழ்ந்த மதினாவின் ஒரு முக்கியமான  தெருவில் தான் பாராவும் வாழ்ந்திருக்கிறார் என்பது போல, வெட்டு ஒன்று துண்டு இரண்டு போல, கச்சிதமாக சொல்கிறார் பாரா).

போங்கையா! மூன்றே போர்கள் தான் நடந்துள்ளது என்று பாரா 20ம் அத்தியாயத்தில் எவ்வளவு அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் என்பதைப் பாருங்கள்.

பாரா அவர்கள் எழுதியவை:

பா.ராகவன் - நிலமெல்லாம் இரத்தம்

அத்தியாயம் 20 - இஸ்லாம் வாள்முனையில் பரவியதா?

மூலம்: nilamellam.blogspot.in/2005/01/20.html

. . . மாறாக, ஒட்டுமொத்த மத்திய ஆசியாவிலும் மிகக்குறுகிய காலத்தில் செல்வாக்குப் பெற்று, முகம்மது நபியின் மறைவுக்குப் பின் மிகச்சில ஆண்டுகளிலேயே ஐரோப்பாவுக்கும் கிழக்காசியாவுக்கும் பரவி, உலகின் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் காலூன்றி நிற்க முடிந்திருக்கிறதென்றால், அது எவ்வாறு பரவியது என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமானது.

இதை ஆராய்வதற்கு முதல் தடையாக இருப்பது, "அது அச்சுறுத்தலால் பரப்பப்பட்ட மதம்" என்கிற முன் அபிப்பிராயம், அல்லது முன் முடிவு அல்லது முன் தீர்மானம். இந்த முன் தீர்மானம் அல்லது முன் அபிப்பிராயத்தை இஸ்லாத்தைக் காட்டிலும் வேகமாகப் பரப்பி வேரூன்றச் செய்தவர்கள் மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள். பெரும்பாலும் யூதர்கள். சிறுபான்மை கிறிஸ்துவ சரித்திர ஆய்வாளர்கள்.

மிகவும் அற்பமானதொரு உதாரணத்தை மட்டும் பார்க்கலாம். முகம்மது நபியின் காலத்தில் இஸ்லாத்தை முன்னிட்டு மொத்தம் சுமார் எழுபத்தைந்து அல்லது எண்பது யுத்தங்கள் நிகழ்த்தப்பட்டதாக அனைத்து மேற்கத்திய சரித்திர ஆய்வாளர்களும் சொல்கிறார்கள். அத்தனை யுத்தங்களிலும் ரத்த ஆறு பெருகியதென்றும் யுத்தக் கைதிகளை வாள்முனையில் மிரட்டி இஸ்லாத்தில் இணைத்ததாகவும் ஏராளமான சம்பவங்களை இந்தச் சரித்திர ஆய்வாளர்கள் பட்டியலிடுகிறார்கள்.

உண்மையில் முகம்மது நபியின் காலத்தில் நடைபெற்ற யுத்தங்களாக ஆதாரங்களுடன் கிடைப்பது மொத்தம் மூன்றுதான். பத்ரு, உஹைத், ஹுனைன் என்கிற மூன்று இடங்களில் முஸ்லிம்கள் நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இஸ்லாம் குறித்து அல்லாமல், முகம்மது நபியின் வாழ்க்கை குறித்து ஆராய்ச்சி செய்திருக்கும் மேற்கத்திய ஆய்வாளர்களின் நூல்களில் இந்த யுத்தங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. உண்மையில் எண்பது யுத்தங்கள் அவர் காலத்தில் நடந்திருக்குமானால், இந்த வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் அவற்றையும் அவசியம் பதிவு செய்திருப்பார்கள். மாறாக, மேற்சொன்ன மூன்று யுத்தங்கள் பற்றி மட்டுமே அவர்கள் பேசுகிறார்கள்.

இதைக்கொண்டே, இஸ்லாத்தை முன்னிட்டு முகம்மது நபியின் காலத்தில் நிகழ்த்தப்பட்ட யுத்தங்கள் மூன்றுதான் என்கிற முடிவுக்கு வரவேண்டியதாகிறது.

ஆக, முகம்மது நபியின் காலத்தில் யுத்தங்களின் மூலம் இஸ்லாம் பரப்பப்படவில்லை என்கிற முடிவுக்கே வரவேண்டியதாகிறது. ஆதாரங்களுடன் உள்ள மூன்று யுத்தங்கள் கூட ஒரே தினத்தில் ஆரம்பித்து, நடந்து, முடிந்தவையாகவே இருக்கின்றன. அதாவது, ஒருநாள் கலவரம்.

கட்டக்கடைசி வினாடி வரை அவர் யுத்தங்களைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளையே மேற்கொண்டிருப்பதாகச் சரித்திரம் சுட்டிக்காட்டுகிறது. தவிர்க்கவே முடியாத மூன்று சந்தர்ப்பங்களில்தான் முகம்மது, யுத்தத்துக்கான உத்தரவு அளித்திருக்கிறார்.

பாரா அவர்கள் மேற்கண்ட வரிகளில் தெளிவாகவும், மிகவும் நம்பிக்கையாகவும் எழுதுகிறார் “ஆதாரங்களுடன் கிடைத்திருப்பது மூன்று யுத்தங்கள் தான், அவைகள்: பத்ரு, உஹைத், மற்றும் ஹுனைன்”. இதற்கு மேலே யாராவது எண்ணிக்கையை உயர்த்தினால், அது ஆதாரமற்ற விவரமாகும். வாசகர்கள் இந்த விவரத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

2) குர்-ஆனின் படி முஹம்மது செய்த யுத்தங்கள் எத்தனை?

இப்போது நாம் என்ன செய்யப்போகிறோம் என்றால், பாரா அவர்கள் சொன்னது குர்-ஆனோடு ஒத்துப்போகிறதா? இல்லையா? என்பதை பார்க்கப் போகிறோம்.

பாரா சொன்னதுபோல, மூன்றை விட ஒரே ஒரு யுத்தம் பற்றி அதிகமாக குர்-ஆன் சொல்லியிருந்தால், என்ன செய்யலாம் என்று பாரா அவர்களிடமே கேட்போம். அவர் தனக்கு இஸ்லாமை கற்றுக்கொடுத்த முஸ்லிம் அறிஞரிடம் கேட்டு பதில் சொல்லுவார், சொல்லவேண்டும். ஏனென்றால், முஸ்லிம்களின் நம்பிக்கையின் படி, குர்-ஆன் தான் உண்மையான சரித்திரம், குர்-ஆனில் சொல்லப்பட்டவைகளில் ஒரு வரி, ஒரு எழுத்து கூட பொய்யாகாது. 

பாரா அவர்கள் குறிப்பிட்டது மூன்று போர்கள் - பத்ரு, உஹைத், மற்றும் ஹுனைன்

முதலாவதாக, இந்த போர்கள் பற்றி குர்-ஆன் ஏதாவது குறிப்பிடுகிறதா என்று பார்ப்போம். அதன் பிறகு வேறு ஏதாவது போர் பற்றி குர்-ஆன் குறிப்பிடுகின்றதா என்பதை ஆய்வு செய்வோம்.

போரின் பெயர்குர்-ஆன் வசனங்கள்இதர விளக்கங்கள்
பத்ரு3:13, 3:123-125 & 8வது அத்தியாயம்பத்ரு போர் பற்றிய விவரங்கள் இவ்வசனங்களில் காணப்படுகின்றது.
உஹைத்3:121,122, 8:36இப்னு கதீர் தம் விளக்கவுரையில் குர்-ஆன் 8:36ம் வசனம் உஹுத் போர் பற்றி பேசுகிறது என்று விளக்கமளித்துள்ளார். (https://en.wikipedia.org/wiki/Battle_of_Uhud )
ஹுனைன்9:25-26இவ்வசனங்களில் ஹுனைன் போர் பற்றி அல்லாஹ் சிறிய விளக்கமளிக்கின்றான்.

மேற்கண்ட குர்-ஆன் வசனங்களில், பாரா அவர்கள் குறிப்பிட்ட மூன்று போர்கள் பற்றி அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான்.  ஆனால், பாரா அவர்களின் ஆய்வின் படி மூன்றுக்கு மேல் ஒரு போர் கூட நடக்கவில்லை, அதில் முஹம்மது கலந்துக்கொள்ளவே இல்லை, அவர் தம் சகாக்களுக்கு கட்டளையிடவும் இல்லை. இது உண்மையா? வாருங்கள் மறுபடியும் குர்-ஆனில் தேடுவோம்.

குர்-ஆனில் பதிவான இதர போர்கள்: 

 

போரின் பெயர்குர்-ஆன் வசனங்கள்இதர விளக்கங்கள்
அகழ்ப்போர்33:9 – 33:27அகழ்ப்போர் பற்றி இவ்வசனங்கள் கூறுகின்றன.
கைபர்48:20இந்த வசனத்தில் கைபர் போர் பற்றி அல்லாஹ் பேசுகின்றான். கைபர் போர் - ta.wikipedia.org/s/5v82

இன்னும் ஏதாவது போர்கள் பற்றி குர்-ஆன் சொல்கின்றதா? என்று நான் தேடிப்பார்க்கவில்லை. நமக்கு இது போதும். 

3) பாரா  அல்லது அல்லாஹ் - யார் உண்மையைச் சொல்கிறார்கள்?

பாராவும் குர்-ஆனில் பதிவாகியுள்ள அகழ்ப்போரும்:

இந்த கட்டுரையில் நான் குர்-ஆனிலிருந்து மட்டுமே போர்கள் பற்றிய விவரங்களை எடுத்துள்ளேன். ஹதீஸ்களிலிருந்தோ, இதர சரித்திர நூல்களிலிருந்தோ நான் விவரங்களை எடுக்கவில்லை. 

பாரா அவர்களிடம் கேட்கவேண்டியவைகள்:

1) குர்-ஆன் அகழ்ப்போர் என்ற இன்னொரு போர் பற்றி பேசுகின்றது ( குர்-ஆன் அத்தியாயம் 33:9-27). உங்களின் ஆய்வின் படி, வெறும் மூன்றே மூன்று போர்கள் தான் நடந்தன, மேலும் முஹம்மது அவைகளில் மட்டுமே பங்கு பெற்றார். ஆனால், குர்-ஆனின் படி அகழ்ப்போரும்  நான்காவதாக வருகிறது. இதற்கு உங்கள் பதில் என்ன? உங்களின் கட்டுரைகளை சரிபார்த்த நாகூர் ரூமி அவர்களின் பதில் என்ன? நீங்கள் சரியா அல்லது அல்லாஹ் சரியா?

2) உங்கள் ஆய்வின் படி, மூன்றுக்கு மேல் போர்களை முஹம்மது செய்தார் என்றுச் சொல்பவர்கள், யூதர்கள் ஆவார்கள் மேலும் அவர்கள்  பொய்யர்கள் ஆவார்கள். ஆக, குர்-ஆனின் 33வது அத்தியாயம் யூதர்களின் கைவேலை என்றுச் சொல்வீர்களா?

3) போனஸுக்காக, கைபர் என்ற போர் பற்றிய ஒரு வசனத்தையும் சுட்டிக்காட்டியுள்ளேன். இதுவும் யூதர்களின் கைவேலையா?

4) தமிழ் முஸ்லிம்களுக்கு உங்கள் பதில் என்ன? என்னை மன்னித்துவிடுங்கள் நான் தவறு செய்துவிட்டேன் என்று மன்னிப்பு கோருவீர்களா? அல்லது நான் சொன்னது தான் உண்மை, குர்-ஆன் சொன்னது பொய் என்றுச் சொல்வீர்களா?

தமிழ் முஸ்லிம்களுக்கு:

தமிழ் முஸ்லிம்களே, ஒரு மாற்று மதக்காரர் இஸ்லாமுக்கு ஆதரவாக புத்தகம் எழுதினால், அதன் மீது ஆய்வு செய்யாமல், மேலோட்டமாக மேய்த்துவிட்டு, திருப்தியாக ‘ஆஹா ஓஹோ’ என்று பாராட்டுகிறீர்களே! இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்? 

நான் ஒரு அறிவுரை கூறட்டுமா? நீங்கள் நேராக பாரா அவர்களிடம் சென்று, ‘அய்யா பாரா அவர்களே, உங்கள் புத்தகத்துக்கு நன்றி. ஆனால், இந்த 20வது அத்தியாயத்தை திருத்துங்கள், அதில் பிழைகள் உள்ளது, அதை மாற்றி எழுதி பதித்து விடுங்கள், அல்லது அதனை முழுவதுமாக நீக்கிவிடுங்கள். எங்கள் உயிரினும் மேலான முஹம்மது நபி அவர்கள் செய்த போர்கள் வெறும் மூன்று என்று நீங்கள் சொல்லி, குர்-ஆனுக்கு முரணாக எழுதிவிட்டீர்கள், இது எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. அடுத்த பதிப்பில் அதனை மாற்றிவிடுங்கள்’ என்று ஒரு வேண்டுகோள் வையுங்கள். இந்த மாற்றத்தை செய்வேன் என்று அவர் ஒப்புக்கொள்ளும்படி மிகவும் தாழ்மையாக வேண்டிக்கொள்ளுங்கள் [ஒருவேளை அவர் திருத்துகிறேன் என்று ஒப்புக்கொண்டால், மூன்று போர்கள் என்ற இடத்தில் அவர் என்ன எண்ணை போடப்போகிறார்? என்று ஒரு முறை கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் வீட்டுக்கு போன பிறகு, அவர் மூன்று போர்கள்  இல்லை,  முஹம்மது செய்தது வெறும் ஐந்து போர்கள் என்று எழுதினால், மறுபடியும் நீங்கள் அவரது வீட்டுக்குச் செல்லவேண்டி வரும் என்பதை அவருக்கு தெரிவியுங்கள். ஆனால், உண்மையான எண்ணிக்கை யாருக்காவது தெரியுமா?]

4) முடிவுரை:

பாரா அடித்துச் சொன்னார் ”முஹம்மது செய்தது மூன்று போர்கள் தான் என்று”, ஆனால் குர்-ஆனோ ’போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு, அட கிறுக்கு உனக்கு இருக்கு இப்ப எண்ணாத மனக் கணக்கு’ என்று நம்மைப் பார்த்துச் சொல்கிறது. 

இதில் யார் சொல்வது சரி? குர்-ஆனா? அல்லது பாராவா?

”இதில் என்ன சந்தேகம், பாரா தான் தவறு செய்தார்” என்று முஸ்லிம்கள் சொல்வார்கள், ஆனால் பாரா ஒப்புக்கொள்ளவேண்டுமே! அவருக்கு உதவிய நாகூர் ரூமி அவர்கள் ஒப்புக்கொள்ளவேண்டுமே!

அடுத்த கட்டுரையில், ஆதார பூர்வமான ஹதீஸ்களின் படி முஹம்மதுவின் காலத்தில் அவர் புரிந்த, அவர் கட்டளையிட்ட போர்கள் எத்தனை என்பதை பார்ப்போம். ஏற்கனவே, குர்-ஆனை படிக்காமல் எழுதிய பாவத்துக்காக பாரா மாட்டிக்கொண்டு முழிக்கிறார், இப்போது ஹதீஸையும் நாம் ஆய்வு செய்தால் முஸ்லிம்கள் கூட மாட்டிக்கொண்டு முழித்தாலும் முழிக்கலாம். ஆனால், அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று மாட்டிக்கொண்டு முழிக்கவேண்டும்? அல்லாஹ் நோஸ் த பெஸ்ட்.

அடுத்த தொடரில் சந்திப்போம்.


2016-2017 ரமளான் தொடர் கட்டுரைகள்

ரமளான் தொடர் கட்டுரைகள் (2012 - 2017)

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்