உவமை 11: புத்தியுள்ள 5 கன்னிகைகள் உவமையின்படி இயேசு 5 பேரை திருமணம் புரிந்தாரா? தம்பியின் கேள்வி உமரின் பதில்

(ரமளான் 2022 தொடர் கட்டுரைகள்)

(முந்தைய வேதங்களின் உவமைகளும் இஸ்லாமும்)

ரமளான் 2022 ஆண்டின் முந்தைய கட்டுரைகளை கீழே படிக்கவும்:

  • உவமை 1: விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான் - யார் வழியருகே விதைக்கப்பட்டவர்கள்?
  • உவமை 2: காணாமல் போன ஆடுகளை அல்லாஹ் தேடுவானா? வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பானா?
  • உவமை 3: தீய குத்தகைக்காரர்களின் உவமையும், இஸ்லாமின் முன்னறிவிப்பும்
  • உவமை 4: தீய குத்தகைக்கார உவமையில் முரண்பாடும், பிழையும் உள்ளதா?
  • உவமை 5: முஸ்லிம்களே, உங்கள் கண்ணத்தில் ஒரு தகப்பனாக‌ அல்லாஹ் முத்தம் கொடுப்பானா? சொந்த வீட்டிலேயே அடிமைகளாக வாழும் பிள்ளைகளா நீங்கள்?
  • உவமை 6: இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு அளித்த தகப்பன் - இது தான் இஸ்லாமிய வழி
  • உவமை 7: அன்றைய பரிசேயர்களும் இன்றைய முஸ்லிம்களும் – சுயநீதி தம்பட்டத்தினால் இறைவனின் அன்பை பெறமுடியுமா?
  • உவமை 8: நீ இறைவனின் இலவச கிருபையை பெற விரும்புகிறாயா? அல்லது உன் அமல்கள் (கந்தைத் துணி, இத்தா துணி) மூலமாக இறைவனின் தரத்தை எட்டிவிடலாமென கனவு காண்கிறாயா?
  • உவமை 9:முஸ்லிம்களே நல்ல சமாரியன்கள்! என்ன விளையாடுகிறீரா? இது எப்படி சாத்தியம்?
  • உவமை 10: புத்தியுள்ள 5 கன்னிகைகளாக மாறி சொர்க்கத்திற்குள் நுழைய முஸ்லிம்களுக்கு விருப்பமா?

மேலேயுள்ள முந்தைய கட்டுரையைப் படித்து, உமரின் தம்பி சௌதியிலிருந்து, ஃபோன் செய்து பல கேள்விகளை சரமாரியாக உமரிடம் கேட்கிறான். இதுவரைக்கும், புத்தியுள்ள கன்னிகைகள்  உவமையை பல முறை படித்திருக்கும் கிறிஸ்தவர்களுக்கே வராத கேள்விகள், உமரின் தம்பிக்கு வந்துள்ளது, அவைகள் சுவாரசியமான கேள்விகள் மற்றும் முஸ்லிம்கள் கேட்க தயங்கும் கேள்விகளை உமரின் தம்பி கேட்டுள்ளான். வாருங்கள்.. அக்கேள்வி பதில்களை காண்போம்.

இவ்வருட‌ (2022) ரமளான் மாதத்தின் கடைசி நோன்பு இன்று என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தியுள்ள 5 கன்னிகைகள் உவமையின்படி இயேசு 5 பேரை திருமணம் புரிந்தாரா?

இஸ்லாமை தழுவிய உமரின் தம்பி சௌதியிலிருந்து ஃபோன் செய்கிறார், உமர் எடுத்து பேசுகின்றார்.

தம்பி: ஹலோ, அண்ணே! அஸ்ஸலாமு அலைக்கும்

உமர்: ஹலோ தம்பி, வஅலைக்கும் ஸலாம்.  போன முறை நடந்த‌ காரசாரமான ஃபோன் காலுக்கு பிறகு நீ எனக்கு இந்த ரமலான் முடியும் வரை, ஃபோன் செய்யமாட்டாய் என்று நினைத்தேன். ஆனால், நீ ஃபோன் செய்துவிட்டாய்! 

தம்பி: நானும் அப்படித் தான் நினைத்திருந்தேன். என்ன செய்வது! சூழ்நிலை சூழ்ச்சி செய்துவிட்டது, உங்களுக்கு நான் ஃபோன் செய்துவிட்டேன்.

உமர்: அது என்ன சூழ்நிலை, உன்னை இப்படி செய்ய வைத்துவிட்டது தம்பி? சூழ்ச்சி செய்வதில் உன் அல்லாஹ் தான் சிறந்தவனாச்சுதே! அவனிடம் உதவி கேட்கவில்லையா நீ!

தம்பி: அவனுடைய உதவியோடு தான் வந்திருக்கிறேன். நேற்று நீங்கள் பதித்த புத்தியுள்ள கன்னிகைகள் பற்றிய கட்டுரையைத் தான் நான் 'சூழ்நிலை' என்றுச் சொன்னேன். அது தான் என்னை உங்களிடம் ஃபோன் செய்து பேச வைத்துக்கொண்டு இருக்கிறது! இது மிகப்பெரிய தர்மசங்கடத்தில் உங்களைத் தள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

உமர்: ஓ... நீ அந்த ரூட்டில் வருகிறாயா! சரி பேசலாம் வா.

தம்பி: நீங்கள் நேற்று பதித்த "மத்தேயு 25:1-13" வசனங்களில் வரும், புத்தியுள்ள 5 கன்னிகைகள் பற்றியது தான் என் கேள்விகள்.  

நீங்கள் இந்த உவமையை எடுத்துக்காட்டி எனக்கு, சாரி இஸ்லாமுக்கு மறைமுகமாக உதவி செய்துவிட்டீர்கள். அது என்ன உதவி என்று தெரிந்துக்கொள்ள ஆசையா?

உமர்: உமராவது இஸ்லாமுக்கு மறைமுகமாக உதவுவதாவது!

தம்பி உன் கருத்துக்களைச் சொல், நானும் கேட்கிறேன்.

தம்பி: “என் கருத்துக்கள்” என்றுச் சொல்லாதீர்கள், “என் கேள்விகள்” என்றுச் சொல்லுங்கள்.

சரி, விஷயத்துக்கு நேரடியாக வந்துவிடுகிறேன்.

இந்த 10 கன்னிகைகள் உவமையில்[1] இயேசு இஸ்லாமின்  'பல தார திருமண சட்டத்தை  ஆதரித்துள்ளார்' என்று நான் சொல்கிறேன். 

இதற்கு உங்கள் பதில் என்ன?

உமர்: எனக்கு புரியவில்லையே! சிறிது புரியும்படி விளக்கு பார்க்கலாம்!

தம்பி: நான் ஏற்கனவே சொன்னேன் அல்லவா? இது உங்களுக்கு தர்மசங்கடமாக இருக்குமென்று!

உங்களுக்கு புரியும் படி கேட்கிறேன். இயேசுவின் உவமையில் 5 கன்னிகைகள் புத்திசாலிகள். மீதமுள்ள‌ 5 பேர் புத்தியற்றவர்கள், அவர்கள் தங்கள் தீவட்டிகளுக்காக எண்ணையை கொண்டுவரவில்லை, அதனால் மணவாளனோடு சேர்ந்து செல்லமுடியாமல் போய்விட்டது, சரி தானே!

உமர்: ஆமாம், புத்தியுள்ள கன்னிகைகள் "மணவாளன் தாமதமாக வந்தால், விளக்குகள் எண்ணையில்லாமல் அனைந்துவிட்டால் என்ன செய்வது என்று முன்பே சிந்தித்து, ஆயத்தப்பட்டு, எண்ணையை கொண்டுவந்தார்கள், மணவாளனோடு திருமண கொண்டாட்டத்தில் அவரோடு சென்றார்கள்". 

தம்பி: இங்கே தான் டிவிஸ்ட் (Twist) இருக்கிறது!

உமர்: அது என்ன டிவிஸ்டு தம்பி? சிதம்பரம் ரகசியம் என்று சொல்வது போல புரியாமல் பேசுகின்றாய்!

தம்பி: இப்போது சொல்லுங்கள், அந்த புத்தியுள்ள 5 கன்னிகைகளை இயேசு திருமணம் செய்துக்கொண்டார் என்று தானே! அந்த உவமையில் இயேசு கூறுகின்றார்! அப்படியென்றால், இஸ்லாம் கூறும் பலதார திருமணத்தை இந்த உவமையின்படி இயேசு அங்கீகரித்துள்ளார் என்று தானே! அர்த்தம்.[2]

உமர்: அடப்பாவமே! இப்படியெல்லாம் நீ சிந்திக்க உன்னால் எப்படி முடிகின்றது?

நீ சிறுவனாக இருந்தபோது( கிறிஸ்தவனாக இருந்தபோது), ஞாயிறு பள்ளிகளில் இந்த உவமையை பல முறை கேட்டிருப்பாய், வாலிபனாகிவிட்டபோதும், நம் பாஸ்டர் கொடுத்த செய்திகளிலும் இதனை பல முறை கேட்டிருக்கிறாய்! அப்போதெல்லாம் வராத இப்படிப்பட்ட விபரீத 'ஐடியா' எப்படி இப்போது வந்துள்ளது?

நீ இஸ்லாமை தழுவியதால், உலகத்தை இஸ்லாமிய பார்வையில் பார்க்க தொடங்கிவிட்டாயா? இப்படியெல்லாம் சிந்திக்கிறாய்!

தம்பி: எனக்கு பழைய கதைகளையெல்லாம் இப்போது சொல்லவேண்டாம்! இயேசு அந்த ஐந்து பேரை திருமணம் செய்தார் என்று அந்த உவமை சொல்கிறதா இல்லையா?

உமர்: சரி, உனக்கு என் பாணியில் விளக்கினால் தான் புரியும் போல தெரிகிறது, இதோ விளக்குகிறேன்.

தம்பி: இதோ பாருங்க, போன முறை ஃபோன் செய்யும் போது பயன்படுத்திய‌ கடினமான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது.

உமர்: இல்லை.. இல்லை.. அப்படியெல்லாம் பேசமாட்டேன். விஷயத்துக்கு வருகிறேன்.

அந்த உவமையில் இயேசு சொன்னதை சரியாக கவனித்துப்பார்: பரலோக ராஜ்ஜியத்தை இயேசு எப்படி ஒப்பிட்டார்? திருமண கொண்டாட்டத்தின் போது, மணவாளனை வரவேற்க சென்ற 10 கன்னிகைகளுக்கு இயேசு ஒப்பிட்டார். இந்த இடத்தில் அந்த 10 கன்னிகைகள்,  மணப்பெண்கள் என்றா சொல்லப்பட்டுள்ளது?

மத்தேயு 25:1 அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.

அவர்கள் மணவாளனுக்கு "எதிர்கொண்டு போக புறப்பட்டார்கள்” என்று வசனம் தெளிவாகச் சொல்வதிலிருந்து, இப்பெண்கள் மணப்பெண்கள் அல்ல என்பதைக் கூடவா உன்னால் புரிந்துக் கொள்ளமுடியவில்லை!

தம்பி: அப்படியென்றால், மணப்பெண் எங்கே? இவர்கள் தானே அந்த மணப்பெண்கள்?

உமர்: உனக்கு என்ன புத்தி புல் திண்ணச் சென்றுவிட்டதா? எத்தனை திருமணங்களில் நாம் பார்த்து இருப்போம்...

திருமண கொண்டாட்டங்களின் போது, கல்யாணப்பெண்ணுக்கு வேலை கொடுப்பார்களா? மணப்பெண்ணும் மணவாளனும் 'முக்கியமானவர்கள்', இவர்களுக்கு திருமண வேலைகளைச் செய்ய அனுமதிக்கமாட்டார்கள்.

மணப்பெண் தன் தோழிகளோடு மகிழ்ச்சியாக‌, அலங்காரங்களை செய்துக்கொண்டு, திருமணத்தின் ரிசப்ஷனுக்காக அல்லது திருமண நிகழ்ச்சிக்கக தயாராகிக்கொண்டு இருப்பாள். மாப்பிள்ளை வரும் போது, அவருக்கு எதிர்கொண்டுச் சென்று அழைத்து வர மணப்பெண் போகமாட்டாள்.

மாப்பிள்ளை அழைப்பு, மணப்பெண் அழைப்பு எனபதே ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும், இதற்காகவே பலபேர் நியமிக்கப்பட்டு இருப்பார்கள், அவர்களோடு மற்றவர்களும் செல்வார்கள். இது கூடவா புரியவில்லை உனக்கு?

தம்பி: நீங்கள் தானே சொன்னீர்கள், "இயேசு மணவாளன், திருச்சபை மணவாட்டி" என்று? அப்படியென்றால், அந்த 5 பேர் மணவாட்டி தானே!

உமர்:  நீ இரண்டு விஷயங்களை ஒன்றாக சேர்த்துக் கொண்டு குழப்பிக்கொள்ளாதே!

முதலாவதாக, இயேசு சொன்ன "புத்தியுள்ள 5 கன்னிகைகள்" உவமையில், மணப்பெண் ஒருத்தி மட்டுமே என்பதை புரிந்துக்கொள். 

இரண்டாவதாக, கிறிஸ்தவ அடிப்படை சத்தியங்களின் படி, புதிய ஏற்பாட்டின் படி,  இயேசு மணவாளன், அவரது சபை (உலகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்கள்) அவரது மணவாட்டி என்பதாகும்.

யோவான் ஸ்நானகன் சொல்வதைப்பார், இயேசு மணவாளன், அவர் மீது விசுவாசம் வைக்கும் அனைவரும் (சபை) மணவாட்டி, மேலும் தாம் "மணவாளனோடு இருக்கும் அவரது நண்பர்" என்றுச் சொல்கிறார்.

யோவான் 3:29. மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக் குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று.

இயேசு தம்மை மணவாளன் என்றும், அவரது சீடர்கள், "மாப்பிள்ளைத் தோழர்கள், எனவே அவர்கள் திருமண கொண்டாட்ட நாட்களில் உபவாசம் இருக்கமாட்டார்கள்" என்று கூறுகின்றார்.

மாற்கு 2:19-20

2:19. அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் உபவாசிப்பார்களா? மணவாளன் தங்களுடனே இருக்கும்வரைக்கும் உபவாசிக்கமாட்டார்களே.

2:20. மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள்.

முழு திருச்சபையும் ஒரு கற்புள்ள கன்னிகை, மாப்பிள்ளையின் வருகைக்காக காத்திருக்கிறாள்

II கொரிந்தியர் 11:2 நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.

இயேசுவிற்கும் சபைக்கும் இடையேயிருக்கும் உறவுமுறை: கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயிருக்கும் உறவுமுறை:

எபேசியர் 5: 25. புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,

இப்போதாவது புரிந்ததா - இயேசுவின் உவமையில் சொல்லப்பட்டது மணவாட்டி அல்ல, அவர்கள் வரவேற்ப்பாளர்கள் என்று!

தம்பி: புரிந்தது, புரிந்தது... நான் ஃபோனை வைக்கிறேன் பிறகு பேசலாம்.

உமர்: இரு தம்பி, இன்னும் சில நிமிடங்கள் பேசலாம். நீ பேட்டிங்க் செய்தாய், நான் ஃபீள்டிங் செய்தேன், இப்போது நான் பேட்டிங்க் செய்யவேண்டாமா?

“இயேசுவின் உவமை இஸ்லாமின் பலதார மணத்தை அங்கீகரிக்கிறது” என்று ஆரம்பத்தில் சொன்னாய் அல்லவா?

தம்பி:  ஆமாம்

உமர்: குர்‍ஆனின் படி, ஒரு முஸ்லிம் அதிக பட்சமாக நான்கு பேரைத்தானே திருமணம் செய்யவேண்டும்? 

குர்‍ஆன் 4:3ஐ படி:

குர்‍ஆன் 4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

தம்பி: அது வந்து...

உமர்: நீ தவறாக விளக்கம் அளித்த 'இயேசுவின் உவமையில் ஐந்து பேர் அல்லவா' மணவாளனோடு சென்றார்கள்.  உனக்கு கணக்குகூட சரியாக போடத் தெரியாதாடா?

ஏதோ, கிறிஸ்தவத்தை விமர்சிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படாதே! குறைந்தபட்சம் வைக்கப்படும் விமர்சனங்கள் மிகவும் வலுவானதாக இருந்தால் நன்றாக இருக்கும், இப்படி கேவலமாக இருந்தால் எப்படி?

ஒருவேளை, ஒரு பேச்சுக்காக, உன் கணக்குப்படியே இயேசுவின் உவமையை எடுத்துக்கொண்டால், நீங்கள் குர்‍ஆன் 4:3ஐ மாற்றி எழுதுவீர்களா? 

குர்‍ஆன்  4:3  “. . .உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ, ஐந்தைந்தாகவோ; . . .”

தம்பி: ஆளவிடுங்கண்ணே! தப்பு நடந்துவிட்டது.. இனி இப்படி நடக்காது.. நான் ஃபோனை வைக்கிறேன்.

உமர்: ஒரு நிமிஷம் இரு தம்பி. என்னிடம் இன்னொரு கேள்வியிருக்கிறது: 

குர்‍ஆன் நான்கு மனைவிகள் ஒரு முஸ்லிமுக்கு அனுமதி என்றுச் சொல்லும் போது, உங்க முஹம்மதுவிற்கு மட்டும் ஏன் ஒன்பதற்கும் அதிகமான மனைவிகள்...? உங்கள் முஹம்மது ஒரே நாளில் தம்முடைய ஒன்பது மனைவிகளோடு உறவு கொள்வாராமே! இது உண்மையா? அல்லது அவர் மனபிராந்தியில் இருந்தாரா? இது எப்படி சாத்தியம் தம்பி, ஒரே நாளில் ஒன்பது மனைவிகளோடு உறவு?

தம்பி: எனக்கு திருமணம் ஆகவில்லை, என்னால் எப்படி உங்களுடைய "ஒரே நாளில் ஒன்பது மனைவிகளோடு ..." என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியும்?

அண்ணே! என் மீது சிறிது கருணை காட்டுங்கள்! இனி இப்படி நடக்காது... ஆள விடுங்க... குட் நைட்.... 

தம்பி ஃபோனை வைத்துவிட்டான்...

உமர் மனதுக்குள் பேசிக்கொள்கிறான்...

உமர்: முதல்ல என் தம்பிக்கு கல்யாணம் செய்யணும்... அதன் பிறகு முஹம்மது பற்றிய மற்ற கேள்விகளை கேட்டுக்கொள்கிறேன்... முஹம்மது பற்றிய சில கேள்விகள் சென்ஸார் கட் கேள்விகள், எனவே அவனிடமிருந்து பதில் வராது... அனுபவமில்லையல்லவா?... 

உமர் தனக்குள் சிரித்துக்கொள்கிறான்...

அடிக்குறிப்புக்கள்:

[1] மத்தேயு 25:1-13

1. அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.

2. அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.

3. புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை.

4. புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.

5. மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.

6. நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.

7. அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.

8. புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள்.

9. புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.

10. அப்படியே அவர்கள் வாங்கப் போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.

11. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.

12. அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

13. மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.

[2] ஒசாமா அப்தல்லா என்ற முஸ்லிம் இந்த புத்தியுள்ள புத்தியற்ற கன்னிகைகள் உவமையில் (மத்தேயு 25:1-13) இப்படிப்பட்ட இஸ்லாமின் பலதாரமணம் என்ற பொருளைகொண்டு வந்து விமர்சித்திருந்தார். அந்த ஆங்கில கட்டுரையையும், அதற்கு கிறிஸ்தவர்களின் தரப்பிலிருந்து கொடுத்த பதிலையும் இந்த தொடுப்பில் படிக்கலாம்: https://www.answering-islam.org/Responses/Osama/bible_polygamy.htm - Section: Jesus’ Parable and Osama’s Perverted Mind

இன்னொரு உவமையோடு சந்திப்போம்...

தேதி: 1st May 2022


ரமளான் 2022 கட்டுரைகள்

முந்தைய ரமளான் கட்டுரைகள்

உமரின் பக்கம்