ரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு?

['அன்புள்ள தம்பிக்கு' உமர் எழுதிய முந்தைய கடிதங்களை படிக்க இங்கு சொடுக்கவும்]

அன்புள்ள தம்பிக்கு,

சாந்தியும் சமாதானமும் உனக்கு உண்டாகட்டும்.

நீ என் கடிதங்களை படித்து, எனக்கு பதில் எழுதுகிறபடியால் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

தம்பி, உன் பதில் கடிதத்தில், நான் எழுதும் விவரங்கள் பற்றி இன்னும் ஆழமாக ஆராய்வதை விட்டுவிட்டு, அதைக் குறித்து என்னிடம் கேள்விகள் கேட்பதை விட்டுவிட்டு, நீ ஒரு தலைப்பிலிருந்து இன்னொரு தலைப்பிற்கு தாவுகிறாய்.குர்-ஆனின் இலக்கிய நடையும், அழகும் உலகில் வேறு எந்த ஒரு நூலிலும், அல்லது வேதத்திலும் இல்லை என்று என்னிடம் சவால் விடுகிறாய். இந்த என்னுடைய கடிதத்தில் நீ குறிப்பிட்டு இருந்த விவரம் பற்றி ஆராய்வோம்.

பல நாட்களுக்கு முன்பு நான் ஒரு சிறிய கட்டுரையை படித்தேன், அது உன்னுடைய கேள்விக்கு பதில் அளிக்கும் என்று நம்புகிறேன். ஒரு மனிதன் கீழ்கண்ட விதத்தில் ஒரு வாதத்தை வைப்பதாக நினைத்துக்கொள்வோம். 

1. உலகத்திலேயே என் மனைவி தாம் மிகவும் அழகான பெண்

2. உங்களால் முடிந்தால், இவளைப் போல இன்னொரு பெண்ணை கொண்டுவாருங்கள்! 

3. உங்களால் முடியவில்லையானால், இவள் சொல்லும் அனைத்தும் உண்மையானது என்று நீங்கள் எல்லாரும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

தம்பி, மேற்கண்ட வாதம் சரியான வாதம் இல்லை என்று எண்ணுகின்றாய் அல்லவா? ஆம், நீ நினைப்பது சரியானது தான், அதாவது மேற்கண்ட வாதம் சரியான வாதமன்று. இதைப் போலத்தான் இஸ்லாமியர்கள் கூட "குர்-ஆன் பற்றிய வாதத்தை முன்வைக்கிறார்கள்".  அதாவது, "உங்களால் முடிந்தால் குர்-ஆனை போல உள்ள ஒரு ஸூராவையோ வசனத்தையோ கொண்டுவாருங்கள், உங்களால் முடியவில்லையானால், குர்-ஆனை இறைவன் தான் இறக்கினான் என்று நீங்கள் நம்பவேண்டும், அது சொல்லும் அனைத்தையும் நீங்கள் நம்பவேண்டும்", இது தான் இஸ்லாமியர்களின் வாதம்.

ஒரு பெண்ணைப் பற்றி நாம் கவனித்தோமானால், அவளது அழகிற்கும், அறிவிற்கும் ஒற்றுமை எதுவுமே இல்லை. அதாவது அவள் அழகாக இருக்கிறாள் எனவே, நிச்சயமாக அவள் அறிவுள்ளவளாக ஞானியாக இருப்பாள் என்று எந்த ஒரு மனிதனும் முடிவு செய்யமுடியாது.  இதே போலத்தான், குர்-ஆனின் இலக்கிய நடைக்கும், அதன் தெய்வீகத்திற்கும் இடையே எந்த ஒரு ஒற்றுமையும் இல்லை. உலகத்திலே இலக்கிய நடை அழகாக இருக்கும் நூல் நிச்சயமாக தெய்வீகமானது என்று உன்னால் கூறமுடியுமா?  ஒருவேளை இலக்கிய நடை நன்றாக இருக்கும் புத்தகமெல்லாம் தெய்வீகமானது என்று ஒரு பேச்சுக்காக ஏற்றுக்கொண்டாலும், அந்த இலக்கிய நடை உலகிலேயே சிறந்தது என்று யார் முடிவு செய்வார்கள்? எந்த தரத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு இந்த முடிவை எடுப்பது?

ஒரு பெண்ணுடைய அழகும், ஒரு நூலுக்கு இருக்கும் இலக்கிய அழகும் ஒன்று தான். அதாவது பல வகையான மக்கள் பலவகையான விருப்பங்களை, கொண்டு இருப்பார்கள். உலகில் யாராவது வந்து:

• "என் மனைவி தான் உலகத்திலேயே அழகானவள் என்று நான் முடிவு செய்துவிட்டேன், எனவே உலகில் வேறு எந்த பெண்ணின் அழகும் என் மனைவியின் அழகிற்கு குறைவானதாகத் தான் இருக்கும்" என்று கூறினால், அது ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதமாக இருக்குமா?

• "என் வேதத்தில் உள்ள இலக்கிய அழகு தான் உலகில் சிறந்த இலக்கிய அழகு என்று நான் முடிவு செய்துவிட்டேன், எனவே உலகில் வேறு எந்த புத்தகத்தின் இலக்கிய அழகும் இதைவிட குறைவானதாகத் தான் இருக்கும்" என்று கூறினால், அது ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதமாக இருக்குமா?

சிலர் குர்-ஆனின் இலக்கிய நடை சிறந்தது என்பார்கள், வேறு சிலர் அது தவறு என்பார்கள். ஒரு கணவன் தன் மனைவி தான் 'உலக அழகி' என்றுச் சொல்கிறான், ஒரு முஸ்லிம் 'குர்-ஆனின் இலக்கிய அழகு உலகிலேயே சிறந்தது' என்றுச் சொல்கிறான். இவ்விதமாக இவர்கள் சொல்வதற்கு காரணமென்ன? ஒரு மனிதன் தன் மனைவியை உண்மையாக நேசித்தால், தன் மனைவி தான் உலகில் சிறந்தவள் என்று நம்பக்கூடும், ஆனால், மற்ற மனிதன் அந்தப் பெண்ணை அப்படி உலக அழகி என்று நினைக்கமாட்டார், இது உண்மையே.  ஒருவருக்கு உலக அழகியாக தெரியும் பெண், எல்லாருக்கும் உலக அழகியாக தெரியும் என்று நாம் நிச்சயமாகச் சொல்லமுடியாது. காரணம் என்னவென்றால், மற்றவர்கள் அந்த பெண்ணோடு கொண்டு இருக்கும் உறவுமுறை கணவன் கொண்டு இருக்கும் உறவுமுறை போன்றதல்ல. தம் மனைவி மீது கொண்டுள்ள (குருட்டுத்தனமான) 

அன்பினிமித்தம் கூட, அவளே உலகில் சிறந்த அழகி என்பான், அல்லது மனைவிக்கு பயப்படும் கணவனாக இருந்தால், மற்றவர்கள் முன்பு அவள் அவ்வளவு அழகி இல்லை என்று சொல்லமாட்டான்.

இதே போலத்தான், முஸ்லிம்கள் குர்-ஆனை (குருட்டுத்தனமாக) நேசிக்கிறார்கள், அதைப் பற்றி நல்லதையே பேசுவார்கள். ஒருவேளை குர்-ஆனில் காணப்படும் தீய விஷயங்கள் பற்றி பேச அவர்கள் பயப்படுகிறவர்களாக இருக்கலாம். குர்-ஆனைப் பற்றிய எதிர்மறை கருத்துக்களை வெளியே சொன்னால் என்ன தண்டனை கிடைக்கும் என்று இஸ்லாமியர்களுக்கு தெரியும்.

எனவே, "உலகத்திலேயே என் மனைவி தாம் மிகவும் அழகான பெண்" என்ற சவாலை யாராளும் சந்திக்கமுடியாது. இந்த மனிதன் தன்னையே "நீதிபதி" என்று கருதிக்கொண்டு தீர்ப்பை கொடுத்துவிட்டான், எனவே, இந்த விஷயத்தில் (அம்மனிதனின் மனைவி விஷயத்தில்) அவனை மிஞ்சி யாரும் தீர்ப்பு அளிக்கமுடியாது. ஒருவேளை இந்த மனிதனிடம் குறுக்குக் கேள்வி கேட்டால், நான் என் மனைவியின் உள்ளான அழகைச் சொன்னேன், இதனை அறிய உங்களால் முடியாது. (இதன் அர்த்தம் என்ன? ஒரு மனிதன் இந்த பெண்ணின் கணவனாக மாறினால் தவிர அந்த உள்ளான அழகு அவனுக்குத் தெரிய வாய்ப்புஇல்லை).

இதே வகையில் இஸ்லாமியர்களிடம், தர்க்க ரீதியான கேள்விகள் குர்-ஆன் பற்றி கேட்கும் போது, அரபியில் படித்தால் தான் குர்ஆனின் அழகு உங்களுக்கு தெரியும் என்பார்கள். சரி, எனக்கு அரபி நன்றாகத் தெரியும், குர்-ஆனை அரபியில் முழுவதுமாக படித்துவிட்டேன். ஆனால், அப்படியொன்றும் குர்-ஆனின் இலக்கிய அழகு சிறந்த அழகாக தெரியவில்லையே என்று அரபி அறிஞர்கள் கூறினால், அதற்கும் முஸ்லிம்களிடம் பதில் இருக்கும், அதாவது நீங்கள் முஸ்லிமாக மாறி அரபியில் படித்தால் தான் உள்ளான அழகு தெரியும், முஸ்லிமல்லாதவர்களுக்கு அதன் அழகு தெரியாது என்றுச் சொல்வார்கள்.

தம்பி, அந்த மனிதனுக்கும், இந்த முஸ்லிம்களுக்கும் இடையே ஏதாவது வித்தியாசம் இருப்பதாக உனக்குத் தெரிகின்றதா?

ஆக, உன்னுடைய சவால் அல்லது கேள்வி பிரயோஜனமற்ற ஒரு சவாலாக உள்ளது. உன் கேள்வி தர்க்க ரீதியாக எவ்வளவு பலவீனமானது என்று உனக்கு இப்போது புரிந்து இருக்கும்.

கடைசியாக முக்கியமான கேள்வியை கேட்கிறேன்:  நீ இஸ்லாமியனாக மாறி ஒரு சில மாதங்களே ஆகியுள்ளது, இன்னும் ஒரு முறை கூட குர்-ஆனை அரபியில் நீ முழுவதுமாக படித்து இருந்திருக்கமாட்டாய். ஒருவேளை அரபியில் படித்து இருந்தாலும், பொருள் தெரியாமல் ஒரு இயந்திரம் போல மூளைக்கு எட்டாமல் படித்து இருந்திருப்பாய். இப்படி இருக்கும் போது, எந்த தைரியத்தில் "குர்-ஆனே உலகில் இலக்கிய நடையில் சிறந்தது என்று சவால் விடுகிறாய்?" அரபி மொழியே தெரியாத உனக்கு அரபி மொழி பற்றிய சவால் விடுவதற்கு உரிமை எங்கே இருந்து வந்தது? ஒரு மொழியை தெரிந்துக்கொள்ளாமல், அந்த மொழியில் இலக்கிய நடைப்பற்றி சவால் விடுவது அறிவுடமையாக உனக்கு தென்படுகின்றதா?

நான் உன் அண்ணன் என்பதால் நான் சொல்வதை அங்கீகரிக்கவேண்டும் என்பதில்லை, நீயே சுயமாக சிந்தித்துப்பார், ஆராய்ந்து பார் உனக்கே உண்மை புரியும்.

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.

இப்படிக்கு உன் அண்ணன்

தமிழ் கிறிஸ்தவன்.

மூலம்

உமரின் ரமளான் மாத தொடர் கட்டுரைகள்