இஸ்லாமிய அகராதி > ஷ வார்த்தைகள்

ஷியா

ஷியா என்றால் "பின்பற்றுபவர்கள்" அல்லது "ஒரு கட்சியின் உறுப்பினர்கள்" என்று பொருளாகும். முஹம்மதுவின் மருமகனாகிய "அலி" அவர்களை பின்பற்றுபவர்கள் "ஷியா" பிரிவினர் என்று அழைக்கப்படுகிறார்கள். முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு இஸ்லாமிய சமுதாயத்திற்கு தலைமை (கலிஃபா) பொறுப்பேற்ற தலைவர்களில் "அலி" நான்காவதாக இருக்கிறார்கள். இந்த பிரிவினர், முதல் மூன்று தலைவர்களை அதிகாரபூர்வமான தலைவர்களாக அங்கீகரிப்பதில்லை. இவர்களின் கருத்துப்படி, முஹம்மதுவிற்கு அடுத்தபடியாக, இஸ்லாமிய சமுதாயத்தின் தலைவராக பதவி வகிப்பதற்கு முஹம்மதுவின் மருமகன் "அலி" அவர்களுக்குத் தான் உரிமை உள்ளது. அலி முஹம்மதுவின் மகள் பாத்திமாவின் கணவராவார். அலிக்கு பிறகு அந்த கலிஃபா பதவி அலியின் மகன்கள் ஹசேன், ஹுசேன் என்பவர்களுக்கு கிடைக்கவேண்டும் என்று ஷியா மக்கள் விரும்பினார்கள். ஆனால், ஹசேன் தன் உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டார். தனக்கு தலைமைப் பதவி கிடைக்கவேண்டும் என்று ஹுசேன் போராடியதால், கி.பி. 680ம் ஆண்டு, கர்பலா என்ற இடத்தில் நடந்த போரில் கொல்லப்பட்டார். ஹுசேனின் இந்த மரணம் (உயிர்த்தியாகம்) ஷியா முஸ்லிம்களுக்கு அதி முக்கியமான நிகழ்வாகும். இதனை அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறுகிறார்கள். ஒரு வகையில் சொல்லவேண்டுமென்றால், ஷியா முஸ்லிம்கள், தங்கள் தலைவர் அடைந்த துக்கத்தை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூர்ந்து இவர்களும் துக்கமடைகிறார்கள்.

ஷியா இமாம்கள் "ஷியா சமுதாயத்தை" 12வது இமாம் வரை தலைமை தாங்கி நடத்திக்கொண்டு வந்தார்கள். அதன் பிறகு கி.பி. 874ஆண்டு அவர்கள் மறைந்து விட்டார்கள். இந்த 12வது இமாமும், அவருக்கு அடுத்தபடியாக பதவியேற்ற இமாம்களும் மறைந்திருக்கிறார்கள் என்றும், ஒரு குறிப்பிட்ட காலம் வரை மறைந்திருந்து அதன் பிறகு இவர்கள் தங்களை உலகிற்கு வெளிப்படுத்துவார்கள் என்று நம்பப்படுகின்றது. அவர்களுக்கு தனிப்பட்ட புத்தகங்கள் இருப்பதாகவும், அவைகள் குர்ஆனின் விளக்கவுரைகளாக இருக்கின்றன என்றும் நம்பப்படுகின்றது. ஷியாக்கள் பெரும்பான்மையாக ஈரான், ஈராக் மற்றும் லெபனானில் வாழ்கிறார்கள். சுன்னி முஸ்லிம்கள் பயன்படுத்தும் உஸ்மான் தயாரித்த பிரதியில் இருப்பதைக் காட்டிலும் வேறுவிதமான குர்ஆன் ஓதுதலை இவர்கள் கொண்டு இருக்கிறார்கள். 

இமாம்கள் பற்றி ஷியா பிரிவினரின் கீழ்கண்டவாறு நம்புகிறார்கள்:

  • மலக்குகளுக்கும் (தேவதூதர்களுக்கும்), தீர்க்கதரிசிகளுக்கும், இறைத்தூதர்களுக்கும் கொடுக்கப்பட்டு இருக்கும் ஞானம், இமாம்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது (பக்கம் 255).
  • கடந்த காலத்தில் நடந்துமுடிந்த அனைத்து விஷயங்களையும், எதிர் காலத்தில் நடக்கவிருக்கும் அனைத்து விஷயங்களையும் இமாம்கள் அறிவார்கள், இவர்களுக்கு மறைவாக எதுவும் இருக்காது (பக்கம் 260)
  • இமாம்கள் தவிர வேறு யாராலும் 100 சதவிகிதம் சரியாக குர்ஆனை தொகுக்க முடியாது, குர்ஆனில் உள்ள எல்லா ஞானமும் இமாம்களுக்கு உள்ளது (பக்கம் 228) (அல் காஃபியின் கருத்து)
  • இமாம்கள் உலகமனைத்திலும் ஆட்சி புரிய அதிகாரம் பெற்று இருக்கிறார்கள் "Certainly, the Imam commands a noble station and lofty position; a creative vicegerency to whose rule and power submit the very atoms of all creation!" (Khumaini, in his book, The Islamic Government page 52-53)

சில இஸ்லாமிய நாடுகள் ஷியா என்ற பிரிவு இல்லாமல் போகவேண்டும் என்று அதனை தங்கள் நாட்டில் தடை செய்கிறார்கள், உதாரணத்திற்கு மலேசியாவைச் சொல்லலாம். இந்த நாட்டில் ஷியா பிரிவை ஒழித்துக் கட்ட முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

ஒரு சுன்னி முஸ்லிம், “soc.religion.islam” என்ற வளைதளத்தில் கீழ்கண்டவாறு கூறினார்:

“ஷியாக்களின் நம்பிக்கையின் படி, நம்மிடம் உள்ள குர்-ஆன் என்பது உண்மையான குர்-ஆனின் ஒரு பகுதி மட்டும் தான், மீதமுள்ளதை இமாம் மெஹ்தி வரும் போது கொண்டுவருவார்.” இவருடைய் கருத்தை மற்றவர்கள் ஏற்கவில்லை. (Syed Yusuf, Feb 15 1996)

மேலதிக விவரங்களுக்கு விக்கிபீடியா தொடுப்பு