குர்-ஆனின் முரண்பாடு

சாலொமோன் மீது குர்-ஆனின் அவதூறு: பிசாசுக்களோடு ஐக்கியம்

பைபிள் தீர்க்கதரிசிகளை, இறைத்தூதர்களை பாவிகளாக சித்தரிக்கிறது என்று இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். தீர்க்கதரிசிகள் கூட பாவம் செய்துள்ளார்கள் என்று பைபிள் சித்தரிப்பதினால், இதுவே பைபிள் திருத்தப்பட்டுள்ளது என்பதற்கு சான்று என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். இந்த தலைப்புப் பற்றி நம் தளத்தில் வேறு கட்டுரைகளில் பதில்களை எழுதியுள்ளோம். எனவே, ஏன் பைபிள் தீர்க்கதரிசிகளின் எதிர்மறைவான நடத்தைகளையும் சொல்கிறது என்பதற்கு விளக்கம் அல்லது மறுப்பு இந்த கட்டுரையில் சொல்லப்போவதில்லை.

அதற்கு பதிலாக, இதே நிபந்தனையை நாம் குர்-ஆனோடு உரசப்போகிறோம், அதாவது எப்படி முஸ்லிம்களின் வேதம் அல்லாஹ்வின் தூதர்கள் மீது அவதூறுகளை கூறுகிறது என்பதை காணப்போகிறோம். இந்த தலைப்பு பற்றிய நம்முடைய இதர கட்டுரைகளின் தொடர்ச்சி தான் இந்த தற்போதைய கட்டுரையாகும், முந்தைய அக்கட்டுரைகளை கீழே தரப்பட்ட தொடுப்புக்களில் படிக்கவும்:

1) தீர்க்கதரிசிகளும், பாவங்களும்

2) ஆதாம், ஏவாள் மற்றும் ஷிர்க் என்ற பாவமும்.`

இந்த கட்டுரையில், சலொமோனுக்கு எப்படி ஜின்கள்(பிசாசுக்கள்) வேலை செய்தன என்பதைப் பற்றிய குர்-ஆனின் வசனங்களில் காணப்படும் அவதூறை காணப்போகிறோம். “தேவன் ஒருவரே” என்று பிசாசுக்கள் அறிந்திருந்தன என்று பரிசுத்த பைபிள் கூறுகிறது:

தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன . (யாக்கோபு 2:19)

மேலும் இயேசு உன்னத தேவனின் பரிசுத்த குமாரன் என்றும், அவர் தங்களை அழித்துவிடுவார் என்றும் அவைகள் அறிந்திருந்தன:

ஜனங்கள் திரளாயிருந்தபடியால் அவர்கள் தம்மை நெருக்காதபடிக்கு, தமக்காக ஒரு படவை ஆயத்தம்பண்ணவேண்டுமென்று, தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார். அசுத்த ஆவிகளும் அவரைக் கண்டபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன. (மாற்கு 3:10,11)

அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான். அந்த அசுத்த ஆவி அவனை விட்டுப் போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்த ஆவி வெகுகாலமாய் அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான். இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான். தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. (லூக்கா 8:28-31)

ஆகையால், கிறிஸ்தவ விசுவாசிகள் சாத்தானோடும், அவனோடுள்ள இதர பிசாசுக்களோடும் ஐக்கியம் கொள்ளக்கூடாது:

இப்படியிருக்க, விக்கிரகம் ஒரு பொருளென்றும், விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ? அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை. நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம் பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே . நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா? (1 கொரிந்தியர் 10:19-22)

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. (2 கொரிந்தியர் 6:14-16)

பரிசுத்த பைபிளின் எச்சரிப்பின் படி, ஒரு உண்மையான விசுவாசி சாத்தானோடும், அவனோடுள்ள இதர சகாக்களோடும் ஐக்கியம் கொள்ளக்கூடாது. ஏதாவது ஒரு தீர்க்கதரிசி சாத்தானோடு ஐக்கியம் கொள்ளவோ, அல்லது அவனை கூட்டாளியாக கொண்டு இருக்கவோ செய்தால், அந்த நபி தேவனுக்கு விரோதமான பாவம் செய்கிறார் என்று பொருள்.

மேலும் உண்மையான விசுவாசிகள், சாத்தான்களோடு ஐக்கியம் கொள்ளமாட்டார்கள் என்று அந்த சாத்தான்களுக்கே தெரியும்.

அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டில் வந்தபோது, பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் பிரேதக்கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியராயிருந்தபடியால், அந்த வழியாக ஒருவனும் நடக்கக்கூடாதிருந்தது. அவர்கள் அவரை நோக்கி: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள். (மத்தேயு 8:28,29)

பிசாசுக்கள் இயேசுவிடம் “உங்களுக்கு எங்களிடம் என்னவேலை இருக்கிறது” என்று கேட்டனர், அதாவது மனிதர்களும் பிசாசுக்களும் இணைந்து செய்யக்கூடிய பொதுவான வேலை ஒன்றுமில்லை,  என்று அவைகள் மறைமுகமாக கூறின. விசுவாசிகளுக்கும் பிசாசுக்களுக்கும் இடையே எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் ஒற்றுமையான வேலை இருக்காது, அவர்கள் ஒன்றாக சேர்ந்து எதையும் செய்யவேண்டிய அவசியமில்லை.

ஆனால், சாலொமோன் சாத்தான்கள் அல்லது ஜின்களை வைத்து இருந்தார், அவைகள் அவருக்காக வேலை செய்தார்கள் மற்றும் அவர் அவர்களோடு ஐக்கியம் கொண்டு இருந்தார் என்று குர்-ஆன் கூறுகிறது:

இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம்.

இன்னும், ஷைத்தான்களிலிருந்தும் அவருக்காகக் (கடலில்) மூழ்கி வரக் கூடியவர்களை (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்; இது தவிர) மற்றி வேலைகளையும் (அந்த ஷைத்தான்கள்) செய்யும்; அன்றியும் நாமே அவற்றைக் கண்காணித்து வந்தோம். (குர்-ஆன் 21:81,82)

"பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?" என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார். ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று: நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்." (27:39)

இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: "உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்" என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்; "இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்" என்று (ஸுலைமான்) கூறினார். (குர்-ஆன் 27:39,40)

மேற்கண்ட வசனங்கள் பற்றி இபின் கதீர் விரிவுரை கீழ்கண்ட விதமாக தருகிறார்:

["பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?" என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார் . . . ]

[ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று:. . .] - முஜாஹித் இது ஒரு “பலம் பொருந்திய ஜின்” என்று விளக்கம் அளிக்கிறார், அபூ ஸாலிஹ் “இந்த ஜின் ஒரு மிகப்பெரிய மலையைப்போன்ற பெரிய ஜின்” என்று விளக்கம் அளிக்கிறார்...

[நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்] - இதைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) “நீங்கள் உட்கார்ந்து இருக்கும் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன்பாக” என்று விளக்கம் அளிக்கிறார். அஸ்ஸுத்தி மற்றும் இதர அறிஞர்கள் இவ்விதமாக கூறுகிறார்கள்: “அவர் நீதி செலுத்துவதற்கும் மக்களை ஆளுவதற்கும் ஒரு சிம்மாசனத்தில் உட்கார்ந்து இருப்பார், மற்றும் அங்கே இருந்துக்கொண்டு மக்களை ஆளுவார், உணவு அருந்துவார், அந்த இருக்கையில் அவர் காலை முதற்கொண்டு மதியம் வரைக்கும் உட்கார்ந்து இருப்பார்”. . .

[நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்] - இப்னு அப்பாஸ் இவ்வரிகளுக்கு கீழ்கண்ட விளக்கம் அளிக்கிறார்: “நிச்சயமான நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்” என்று ஜின் கூறும்போது, அதற்கு சுலைமான் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) : ”இதைவிட மிகவும் வேகமாக எனக்கு வேண்டும்” என்று மறுமொழியாக அளித்தார். சுலைமானின் வார்த்தைகளினால் அறியப்படுவது என்னவென்றால், அந்த அரசியின் சிம்மாசனத்தை சீக்கிரமாக கொண்டு வந்து, தனக்கு அல்லாஹ் கொடுத்து இருக்கின்ற அதிகாரத்தையும், வல்லமையையும், வேலைக்காரர்களின் (ஜின்கள், ஷைத்தான்கள்) திறமையையும் காண்பிக்க வேண்டும் என்று விரும்பினார். தனக்கு அல்லாஹ் கொடுத்து இருக்கும் அதற்கு முன்பும், பின்பும் யாருக்கும் கொடுக்கப்படவில்லை, இதன் மூலமாக ”பில்கிஸ்” என்ற அரசிக்கு முன்பாகவும், அவ்வரசியின் மக்களுக்கு முன்பாகவும் தன் நபித்துவத்திற்கு சரியான சான்றாக அமையும். அதாவது அந்த அரசி தன் நாட்டிலே இருக்கும் போதே, இங்கு வருவதற்கு முன்பாகவே, பூட்டப்பட்ட பல அறைகளுக்கு அப்பால் இருக்கும் அவளின் சிம்மாசனத்தை கொண்டு வந்துவிட்டால், இந்த வல்லமை வெளிப்படும் என்று சுலைமான் கருதினார். சுலைமான் “இதைவிட மிகவும் வேகமாக எனக்கு வேண்டும்”… என்று கூறுகிறார்….

[இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்] - இந்த வரிகளுக்கு இப்னு அப்பாஸ் இவ்விதமாக விளக்கமளிக்கிறார்: “இதில் கூறப்படுபவர், சுலைமானின் ‘ஆஸிப்’ என்ற பெயர் கொண்ட எழுத்தாளர் ஆவார். இதே விவரம் முஹம்மத் பின் இஷாக் என்பவரும் அறிவித்துள்ளார், அவர் யாஜித் பின் ருமன் என்பவரிடம் கேட்டறிந்துள்ளார், அதாவது இவ்வசனத்தில் கூறப்படுபவர் ஆஸிப் பின் பர்கியா ஆவார், மேலும் இவர் அல்லாஹ்வின் சிறப்புமிக்க பெயர்களை அறிந்தவர், உண்மையான நம்பிக்கையாளர் ஆவார். கதாதா கூறும் போது: “இவர் மனிதர்களிலேயே நல்ல நம்பிக்கையாளர், இவர் பெயர் ஆஸிப் என்பதாகும்”.

["உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்" என்று கூறினார்;] இதன் பொருள் என்னவென்றால், உங்கள் கண்களை உயர்த்தி எதுவரை பார்க்கமுடியுமோ அதுவரை நீங்கள் பாருங்கள், பிறகு எப்போது நீங்கள் கண்களை சிமிட்டுவீர்களோ அந்த நேரத்திற்குள் அந்த சிம்மாசனம் உங்கள் முன் இருக்கும்” என்பதாகும். அதன் பிறகு அவர் எழுந்து உளு செய்துவிட்டு அல்லாஹை (அவனே உயர்த்தப்படுவானாக) தொழுதுக்கொண்டார். முஜாஹித் கூறும் போது: “அவர் கூறினார், ஓ உயர்ந்த கணம்பொருந்தியவரே” (இந்த விரிவுரையின் மூல இணைய தொடுப்பு - Source)

மேலும், கடைசியாக இந்த விவரம் பற்றிய குர்-ஆனின் வசனம் :

(அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்). (34:12)

அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. "தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே" (என்று கூறினோம்). (34:13)

அவர் (ஸுலைமான்) மீது நாம் மரணத்தை விதித்த போது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் (சாய்ந்திருந்த) தடியை அரித்து விட்ட நிலத்தின் பூச்சி (கரையானைத்) தவிர வேறெதுவும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை அவர் கீழே விழவே "தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால் (கடின உழைப்பாகிய) இழிவுதரும் வேதனையில் தாங்கள் தரி பட்டிந்திருக்க வேண்டியதில்லை" என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது. (34:14)

இறைவனின் உண்மையான வார்த்தையாகிய பைபிள் தேவனுடைய ஆலயத்தை கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தது, ஷைத்தான்களோ, இதர பிசாசுக்களோ அல்ல அவர்கள் மனிதர்கள் என்றும், அவர்களை மேற்பார்வையிட்டது சாலொமோன் என்றும் கூறுகிறது (பார்க்க 1 இராஜாக்கள் 3-8, 1 நாளாகமம் 22, 28-29, 2 நாளாகமம் 2-7ம் அதிகாரங்கள்)

மேலும், மேற்கண்ட குர்-ஆன் வசனம் சாலொமோன் ஷைத்தான்களோடு ஐக்கியம் கொண்டு அவர்களிடம் வேலை செய்வித்தார் என்றுச் சொல்லி அவதூறு உண்டாக்கியது மட்டுமல்லாமல், இறைவனுடைய பரிசுத்த இலக்கணத்திற்கும் அவதூறு விளைவித்துள்ளது. அதாவது இறைவனது பரிசுத்த ஆலயத்தை ஷைத்தான்களும், பிசாசுக்களும் கட்டினார்கள் என்றுச் சொல்லி கேவலப்படுத்தியுள்ளது.

சில மனிதர்கள் சாலொமோன் பற்றி ஷாத்தான்கள் சொன்ன அவதூறுகளை நம்பி அவைகளை பின்பற்றியதாக குர்-ஆன் கூறுகிறது.

அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்;. ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர். ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள். அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாருத், மாருத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும்; "நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம்; (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்" என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை, அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது. தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? (குர்-ஆன் 2:106)

தாவீதின் குமாரனாகிய சாலொமோனுக்கு குர்-ஆன் அவதூறை உண்டாக்கியுள்ளது. அதாவது ஆலய கட்டுமானப் பணியில் அவர் சாத்தான்களோடு இணைந்து செயல்பட்டார். நிச்சயமாக இந்த கதைகள் எல்லாம் அதே ஷைத்தான்கள் மூலமாகத் தான் வந்திருக்கும். முஹம்மது கொண்டு வந்த செய்தியில் இப்படிப்பட்ட பொய்யான கதைகளை ஷைத்தான் தான் சேர்த்து இருக்கவேண்டும்.

(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.(குர்-ஆன் 22:52)

ஆங்கில மூலம்: Quran Contradiction - The Quran’s Slander of Solomon: The Communion of Demons  

இதர குர்-ஆன் முரண்பாடுகள்